கள்ளக்குறிச்சியில் அடுத்த ஷாக்.. ஏழு பேருக்கு எலி காய்ச்சல்.. மிரளும் பொதுமக்கள்.. அறிகுறிகள் என்ன!
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் ஏற்படுத்திய உயிரிழப்புகளில் இருந்தே அம்மாவட்ட மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்தச் சூழலில் கள்ளக்குறிச்சி மாவட்டம் வசதொரசலூர் என்ற கிராமத்தில் சிலருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. சிறுமி உள்ளிட்ட 7 பேருக்கு எலிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நம்ம ஊரில் இப்போது திடீரென திடீரென ஒவ்வொரு வைரஸ் பாதிப்பு பரவுகிறது. கொரோனாவை கஷ்டப்பட்டுச் சமாளித்துவிட்டோம் என நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் அடுத்தடுத்து வைரஸ் பரவுகிறது.
கேரளாவில் ஏற்கனவே மூளையை உண்ணும் அமீபா அலற விட்டுக் கொண்டு இருக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் சிலருக்கு இப்போது எலிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வசதொரசலூர் என்ற கிராமத்தில் சிலருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், வாந்தி, மயக்கம் என்று பெரும் சிரமத்தை எதிர்கொண்ட அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அறிகுறிகளைப் பார்த்த உடன் அது வழக்கமான காய்ச்சல் இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட மருத்துவர்கள் உடனடியாக ரத்தப் பரிசோதனை எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.
மருத்துவர்கள் அஞ்சியது போலவே ரத்தப் பரிசோதனை ரிப்போர்ட்டில் அவர்களுக்கு எளி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கே அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒரே இடத்தில் ஏழு பேருக்கு எலிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்குமார் மருத்துவக் குழுக்களிடம் நோய்ப் பாதிப்பு குறித்துக் கேட்டறிந்தார். மேலும், பின்னர் பாதிப்பு ஏற்பட்ட வீடுகள் உள்ள பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலைமை கேட்டறிந்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இங்கு எலிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள மக்களின் ரத்த மாதிரி எடுத்து ஆய்வு செய்து மேலும் எலிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும். இதை உடனடியாக கட்டுப்படுத்தவில்லை என்றால் மஞ்சள் காமாலை போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உரியச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்” என்றார்.
இந்த எலிக் காய்ச்சல் என்பது ஒரு வகை பாக்டீரியா தொற்றாகும். இது எலிகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. அதாவது இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்படும் எலிகள் மனிதர்களைக் கடித்தால் அல்லது அந்த எலிகளின் கழிவுகளை நாம் சுவாசித்தால் கூட இந்த எலிக் காய்ச்சல் ஏற்படும்.
இந்த எலிக் காய்ச்சல் ஏற்படும் போது உடல் வெப்ப நிலை 40 டிகிரியை தாண்டி காய்ச்சல் ஏற்படும். மேலும், தீவிர தலைவலி, ரத்த அழுத்தம் குறைதல், கண் சிவத்தல், குமட்டல் ஆகியவை கூட ஏற்படும். மேலும், ஒரு நாளில் பல முறை வாந்தி, கண் பகுதியில் இருந்து ரத்தக் கசிவும் ஏற்படும். சில நேரம் நிலைமை மோசமானால் மஞ்சள் காமாலை கூட ஏற்படும் ஆபத்து இருக்கிறது.