கிளாம்பாக்கத்தில் பயணிகள் மறியல்! 6 மணி நேர காத்திருப்பு.. பேருந்துகள் இல்லாததற்கு காரணம் இதுதான்!


கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் இன்று அதிகாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படாததற்கான காரணத்தை தொழிற்சங்கத்தினர் விளக்கியுள்ளனர்.

இன்றும், நாளையும் வார இறுதி நாட்கள் என்பதால் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல நேற்றிரவு கிளாம்பாக்கத்தில் குவிந்தனர். ஆனால் ஊருக்கு போக போதுமான பேருந்துகள் இல்லாததால் அவர்கள் ஜிஎஸ்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இந்த சாலையில் சுமார் 1 மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. “எங்கள் ஊருக்கு போகவே 5 மணி நேரம்தான் ஆகும். ஆனால் கிளாம்பாக்கத்தில் 6 மணி நேரம் காத்திருக்கிறோம்” என பயணிகள் பலர் வேதனை தெரிவித்துள்ளனர்.

விழா நாட்கள், தொடர் விடுமுறை, வார இறுதி போன்ற நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை சார்பில் அவ்வப்போது அறிவிப்பு வெளியாகிறது. ஆனால், இந்தமுறை போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் கொந்தளித்துள்ளனர். இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து தொழிற்சங்கங்கள் விளக்கமளித்துள்ளன.

சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் இது குறித்து கூறியதாவது, “இந்த பிரச்னைக்குள் இரண்டு பிரதான சிக்கல்கள் இருக்கின்றன. ஒன்று ஊழியர்கள் பற்றாக்குறை. மற்றொன்று பேருந்துகளின் குறைவான எண்ணிக்கை.

லாபமா? நஷ்டமா?: தனியார் பேருந்துகள் லாபத்தில் ஓடும்போது, போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்ற தவறான கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது. போக்குவரத்து கழகங்களுக்கு தனியார் பேருந்து உரிமையாளர்களை போல லாபம் மட்டுமே நோக்கம் கிடையாது. 10,000க்கும் மேற்பட்ட கிராமப்புற, மலை வழித்தடங்களில் சேவை நோக்கத்துடன் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பகுதிகளில் லாபம் கிடைக்காது. நஷ்டம்தான் ஏற்படும். ஆனால், இந்த பகுதியில் இருக்கும் மக்களுக்கும் பேருந்து சேவை கிடைக்க வேண்டும் எனபதுதான் அரசின் நோக்கம்.

இதுதவிர மாணவர்கள், பெண்கள் என சமூகத்தின் பல பிரிவினருக்கு இலவச பேருந்து சேவை அளிக்கும் அரசின் திட்டம் போக்குவரத்து கழகங்களால் அமல்படுத்தப்படுகிறது. இதிலும் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நஷ்டத்தை அரசுதான் சரிகட்ட வேண்டும். தமிழக மின்வாரியம், சிவில் சப்ளை கார்ப்பரேசன் போன்றவற்றிற்கு முழுமையான இழப்பை ஈடுகட்டும் அரசு, தினமும் 2 கோடி மக்களுக்கு சேவை செய்யும் போக்குவரத்து கழகங்களைப் புறக்கணிக்கின்றது. இந்த நஷ்டத்தை சரி செய்தால்தான் அரசு பேருந்து சேவை தரமானதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும்.

பேருந்துகளின் எண்ணிக்கை: ஒருவேளை அரசு இந்த நஷ்டத்தை அரசு சரி செய்யவில்லையெனில், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதில் சிக்கல் ஏற்படும். 2017ம் ஆண்டு 23,000 பேருந்துகள் இயங்கி கொண்டிருந்தது. ஆனால் 2018ஆம் ஆண்டு பேருந்து எண்ணிக்கை 19,500ஆக குறைக்கப்பட்டது. 8 ஆண்டுகளாக பணி ஓய்வுபெற்ற, மரணமடைந்த தொழிலாளர்களுக்குப் பதிலாக, புதிய தொழிலாளர்கள் நியமிக்கப்படவில்லை. சுமார் 20,000 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஏற்கனவே பேருந்து எண்ணிக்கை குறைக்கப்பட்ட நிலையில், பணியாளர் பற்றாக்குறையால் தினமும் சுமார் 1500 பேருந்துகளை இயக்க முடியவில்லை.

ஒட்டுமொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் 4000 பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் பயண உரிமை மறைமுகமாக பறிக்கப்பட்டு வருகிறது. எனவே, நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க வேண்டும். காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டிய 8000 பேருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். தனியார்மயம், காண்ட்ராக்ட் என்ற பெயரால் போக்குவரத்து கழகங்களை சீர்குலைக்க கூடாது. இதையெல்லாம் அரசு சரி செய்தால்தான் தற்போது கிளாம்பாக்கத்தில் ஏற்பட்டதை போன்ற பிரச்னை மீண்டும் உருவாகாது” ன்று கூறியுள்ளனர்.
Share on: