குப்பை அகற்றப்படாததை சுட்டிக்காட்டிய இளைஞர் மீது தாக்குதல்: கவுன்சிலர் உட்பட 4 பேர் மீது வழக்கு!


கோவையில் குப்பை அகற்றப்படாதது குறித்து கேள்வி எழுப்பிய இளைஞர் கவுதம் மீது தாக்குதல் நடத்தியதாக கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தாக்குதலில் காயமடைந்த கவுதம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 23-வது வார்டு ரயில்வே காலனி பகுதியில், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தூய்மைப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் குப்பை தேங்கி, சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர் கவுதம் என்பவர், 23-வது வார்டு காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் கவிதா புருஷோத்தமனிடம் புகாரளித்துள்ளார். ஆனால், நடவடிக்கை எதுவும் இல்லாததால், அவர் மேட்டுப்பாளையம் நகராட்சியில் புகார் அளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை (மே 30) அப்பகுதியில் தூய்மைப் பணியாளர்கள், துப்புரவு பணிக்காக வந்துள்ளனர். அப்போது அங்கு கவுன்சிலர் கவிதா, அவரது கணவர் புருஷோத்தமன், அவரது மகன் ஆகியோர் அங்கு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த கவுதம், இங்கு தூய்மைப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது எனக் கூறியதுடன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கவுன்சிலரின் கணவர் உள்ளிட்டோர் கவுதமை தாக்கியுள்ளனர். இதில் கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டு கவுதம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காயமடைந்த கவுதம் அளித்த புகாரின் பேரில், கவுன்சிலர் கவிதா, அவரது கணவர் புருஷோத்தமன், மகன் கார்த்திக், நண்பர் நசீர் ஆகியோர் மீது மேட்டுப்பாளையம் போலீஸார் இன்று (மே 31) வழக்குப்பதிந்துள்ளனர். அதேபோல், கவுன்சிலர் கவிதா அளித்த புகாரின் பேரில், இளைஞர் கவுதம், அவரது தாயார் ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Share on: