‛‛கேன்சர் தரும் ரசாயனம்’’.. உறுதி செய்த ஆய்வு! மெரினா பஞ்சுமிட்டாயின் ஷாக் பின்னணி..


பஞ்சு மிட்டாய் கண்ணை பறிக்கும் நிறத்தில் இருக்க அதில் உடல் நலத்திற்கு கேடு ஏற்படுத்தும் ரசாயனம் சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாயை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்து சோதனை செய்தனர். சோதனையில், ஆபத்தான ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

பஞ்சு மிட்டாய் எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும் உணவு பொருள். கடற்கரை தொடங்கி கடை வீதிகள் வரை இவற்றை பார்க்க முடியும். ஆனால் இந்த பஞ்சு மிட்டாயில் ஆபத்தான ரசாயனம் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்திருக்கிறது. அதாவது, புதுச்சேரி கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களில் வடமாநில இளைஞர்கள் இந்த பஞ்சுமிட்டாயை விற்பனை செய்து வந்திருக்கின்றனர். இதில் பயன்படுத்தப்படும் ரசாயன பொருள் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் தீப்பெட்டி மற்றும் ஊதுவத்தி ஆகியவற்றில் கலக்கப்படும், ‘ரோடமின் பி’ என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இந்த ரசாயனம் நமது வயிற்றிற்குள் போனால் புற்றுநோயை ஏற்படுத்தும். பஞ்சு மிட்டாய் ரோஸ், சிவப்பு என கண்ணை பறிக்கும் நிறத்தில் இருப்பதற்காக நிறமிகள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், குறைந்த விலை என்பதால் ‘ரோடமின் பி’ போன்ற ஆபத்தான ரசாயனங்களை பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

இது தொடர்பாக பஞ்சு மிட்டாய் விற்பனையாளர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மட்டுமல்லாது புதுச்சேரி முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்பனையில் ஈடுபட்டுவருபவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், “புதுச்சேரியில் ஆய்வின் போது பஞ்சு மிட்டாயில் ஆபத்தான ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே பஞ்சுமிட்டாய் உற்பத்தி செய்யும் பகுதிகளில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது. இனி பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய வேண்டும் எனில் உணவு பாதுகாப்பு துறையின் தர சான்றிதழ் அவசியம் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. சில வியாபாரிகள் தமிழகத்திலிருந்து பொருட்களை வாங்கி வந்ததாக கூறியிருக்கிறார்கள். எனவே அங்கும் இதுபோன்று சோதனை நடைபெறும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து கடந்த 8ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யும் வடமாநில தொழிலாளர்களிடமிருந்து பஞ்சு மிட்டாய் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பல்லாவரத்தில் பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் ஆலையிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்கு சேகரிக்கப்பட்ட ரசாயனங்களும் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பஞ்சுமிட்டாய்களில் ஆபத்தான ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து பஞ்சு மிட்டாய் விற்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
Share on: