
பலருக்கும் விருப்ப மொழியாக தமிழ் இருந்த போதிலும், கேஸ் சிலிண்டர் தொடர்பான புகாரை பதிவு செய்வதற்கான கட்டணமில்லா தொலைபேசியில் இந்தி மொழியில் மட்டுமே பதில் அளிக்கப்படுகிறது. இதனால் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்யும் தமிழ் வாடிக்கையாளர்கள் தங்களது புகாரை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கட்டணமில்லா தொலைபேசியில் எதிர்முனையில் பேசும் நபருக்கு இந்தியை தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை என்று வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
சமையல் கேஸ் சிலிண்டர்களை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், இந்துஸ்தான் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் விநியோகிக்கின்றன. பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையான கேஸ் சிலிண்டர்களை மேற்கொண்ட நிறுவனங்களில் தான் வாங்குகிறார்கள். வெகுசிலரே அதுவும் கடைகளுக்குத்தான் தனியார் நிறுவன சிலிண்டர்களை வாங்குகிறார்கள்.
கேஸ் சிலிண்டர் வினியோகத்தில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவிக்க வேண்டும் என்றாலோ அல்லது சிலிண்டர் முன்பதிவுக்கு பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது சிலிண்டர் வினியோக நிறுவனத்தில் ஆதாரை பதிவு செய்வது போன்ற பல்வேறு குறைகளுக்கு தீர்வு காண வாடிக்கையாளர்களுக்கு கட்டணமில்லா தொலைப்பேசி எண் உள்ளது. அதன்படி எண்ணெய் நிறுவனங்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க 1800-2333-55 எனப்படும் பொதுவான கட்டணமில்லா தொலைபேசி எண் அமலில் இருக்கிறது.
கேஸ் சிலிண்டர்கள் பிரச்சனை தொடர்பாக குறைகளுக்காக இந்த கட்டணமில்லா தொலைபேசியை பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் போது எதிர்முனையில் பேசுபவர் இந்தியில் மட்டுமே பேசுகிறார் என்று கூறப்படுகிறது, இதனால் இந்தி தெரியாதவர்கள் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் மொழி தொடர்பாக பிரச்சனைகளை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இதுபற்றி வாடிக்கையாளர்கள் சிலர் கூறுகையில், எண்ணெய் நிறுவனங்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க 1800-2333-55 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளது.இதில் தொடர்பு கொண்டு பேசும் போது, இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 6 மொழிகளில் தாங்கள் எந்த மொழியில் பேச விரும்புகிறீர்கள் என வாடிக்கையாளரிடம் கணினி வழி குரல் மூலம் விருப்பம் கேட்கிறார்கள்.
அதன்படியே நாம் பேச விரும்பும் மொழியை தேர்வு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. தமிழ்மொழிக்கான குறியீட்டை அழுத்தி தமிழ் மொழி என்ற நமது விருப்பத்தை தெரிவித்தாலும் எதிர்முனையில் பேசுபவர் இந்தியில் மட்டுமே பேசுகிறார். அவரிடம், ‘தமிழ்…’ என சொன்னால் கொஞ்சம் பொறுத்திருங்கள், இணைப்பை தருகிறேன் என இந்தியில் பதில் சொல்கிறார். இப்படி நீண்ட நேரம் காத்திருந்தாலும் தமிழில் பதில் சொல்வதற்கு யாரும் இல்லை. இதனால் வாடிக்கையாளர்கள் தமிழில் புகார் அளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் இணைப்பை துண்டிக்கும் நிலை ஏற்படுகிறது என்றார்கள்.
கட்டணமில்லா தொலைபேசியில் எதிர்முனையில் பேசும் நபருக்கு இந்தியை தவிர வேறு எந்த மொழியும் தெரியாத நிலை இருப்பதாகவும். சாதாரண ஆங்கிலத்தில் கூறினால் கூட எதிர்முனையில் பேசுபவர் அதை புரிந்து கொள்ள முடிவது இல்லை என்றும் தமிழில் பேச யாரும் இருப்பது இல்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது தமிழ்நாட்டில் புதிய சர்ச்சையாகி உள்ளது
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு இண்டேன், பாரத் கேஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் ஆகியவற்றின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கான இலவச தொலைபேசி அழைப்பில் (1800 2333 555) தொடர்பு கொண்டு பேசும் போதெல்லாம் இந்தியில் மட்டுமே பதிலளிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இதுவும் ஒரு நவீன இந்தித் திணிப்பு தான். இதை அனுமதிக்க முடியாது.
தமிழ்நாட்டில் வணிகம் செய்யும் இந்த நிறுவனங்கள் தமிழ் மொழியில் சேவை வழங்க வேண்டும். இலவச தொலைபேசி அழைப்பைத் தொடர்பு கொள்பவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பதில் அளிக்கும் வாய்ப்பு இருக்கும் போதிலும் கூட, இந்தியில் மட்டும் தான் பதில் அளிக்கப்படுகிறது. தமிழில் உரையாட வேண்டும் என்று தெரிவித்தால் மீண்டும் தொடர்பு கொள்வதாகக் கூறி அழைப்பு துண்டிக்கப்படுகிறது. இதைத் திட்டமிட்ட இந்தித் திணிப்பாகவே பார்க்க வேண்டும்.
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும், ஆங்கிலத்திலும் பதிலளிக்க மறுப்பதை எண்ணெய் நிறுவனங்கள் நியாயப்படுத்த முடியாது. தமிழில் சேவை வழங்காமல் இந்தியில் மட்டுமே சேவை வழங்குவதற்காக எரிவாயு நிறுவனங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இந்தித் திணிப்பைக் கைவிட்டு, தமிழ், ஆங்கிலம் மற்றும் அனைத்து மாநில மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை வழங்கப்படுவதை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.