சரணடையும் நாளிலேயே ஜாமீன் கேட்ட பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு!


பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக வன்கொடுமைத் தடைச் சட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன், மருமகள் சரணடையும் நாளிலேயே அவர்களின் ஜாமீன் மனுவை சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வேலை செய்து வந்த 18 வயது பணிப்பெண்னை துன்புறுத்தியதாக, ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மெர்லினா ஆன் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை மாவட்டத்தில் பதிவு செய்யப்படும் வன்கொடுமை தடைச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடையும் நாளிலேயே, தங்களது ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்படி அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

அவர்களது மனுவில், இளம்பெண் அளித்த புகாரில் கூறியுள்ளபடி எந்த தாக்குதல் சம்பவமும் நடைபெறவில்லை என்றும், சொந்த மகளை போல பார்த்துக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர். டிசம்பர் 26ஆம் தேதி அவரது பிறந்தநாளை தங்கள் வீட்டில் கொண்டாடியதாகவும், அப்போது எடுத்த புகைப்படங்களிலிருந்தே எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார் என தெரியவரும் எனவும், ஆனால் அடுத்த 15 நாட்களில் எப்படி புகார் அளிக்கும் அளவிற்கு மாறினார் என புரிந்துகொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

காதலில் ஈடுபாடு கொண்டது தெரிந்தவுடன், அதை ஆட்சேபித்ததாகவும், எதிர்காலம் வீணாகிவிடும் என அறிவுறுத்தியும் பணிப்பெண் கருத்தில் கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இருவரும் சரணடையும் நாளிலேயே அவர்களது ஜாமீன் மனுவை பரிசீலித்து, இரு தரப்பிற்கும் வாய்ப்பளித்து, சட்டத்திற்குட்பட்டு முடிவெடுக்கும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.
Share on: