சிங்கப்பூரில் பரவி வரும் புது வகை கொரோனா தொற்று.. தமிழக விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு!


சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதை அடுத்து கோவை விமான நிலையத்தில் தீவிரமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷார்ஜா, சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளுக்கு கோவை விமான நிலையத்தில் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக சிங்கப்பூரில் கே.பி.2 என்ற புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்றால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த சில வாரங்களில் தொற்று பரவல் உச்சத்தை எட்டும் எனக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் தற்போது பரவி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு சில பகுதிகளில் பதிவாகி உள்ளது. ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரை அச்சமோ, பதற்றமோ தேவையில்லை எனவும் ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு, சிங்கப்பூர் மற்றும் சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகிறது. சிங்கப்பூரில் இருந்து வாரத்திற்கு ஐந்து நாட்களும், ஷார்ஜாவிலில் இருந்து வாரத்திற்கு 7 நாட்களும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து கோவை வரும் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கோவை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தானியங்கி காய்ச்சல் கண்டறியும் இயந்திரம் மூலம் காய்ச்சல் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வரும் பயணிகள் தனிமைப் படுத்தப்படுவார்கள் எனவும், அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, சென்னை, திருச்சி விமான நிலையங்களிலும் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Share on: