சென்னையில் பிறந்து டெல்லியை இடதுசாரி சித்தாந்தத்தால் சிவக்க வைத்த சீதாராம் யெச்சூரி!


ஆந்திராவைச் சேர்ந்த சீதாராம்யெச்சூரி தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தவர்.. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர் சங்கத் தலைவராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு இடதுசாரி சித்தாந்தத்தின் கோட்டையாக கட்டி எழுப்பியவர் சீதாராம் யெச்சூரி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக 32 ஆண்டுகாலம் பணியாற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளராக உயர்ந்த சீதாராம் யெச்சூரி இன்று உடல்நலக் குறைவால் காலமானார். சீதாராம் யெச்சூரியின் இழப்பு இந்திய இடதுசாரிகளுக்கு பேரிழப்பாகும்.

தமிழ்நாட்டின் சென்னையில் 1952-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ந் தேதி பிறந்தார் சீதாராம் யெச்சூரி. ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவர். கல்லூரி காலத்திலேயே இடதுசாரி மாணவர் சங்கத்தில் இணைந்து செயல்பட்டார். டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர் சங்கத் தலைவராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் சீதாராம் யெச்சூரி.

இந்திரா காந்தியின் அவசர நிலை அமல்படுத்தப்பட்ட காலத்தில் சிறைவாசம் அனுபவித்தார். 1984-ம் ஆண்டு முதல் 32 ஆண்டுகள், சிபிஎம் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்தார். 2005-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்பியாகவும் பதவி வகித்தார்.

நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஆயுதப் பாதையை கைவிட்டு ஜனநாயக அரசியலுக்கு திரும்ப வைத்ததில் சீதாராம் யெச்சூரி பெரும் பங்களிப்பு செய்தார். அண்மைக்காலமாக உடல்நலன் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சீதாராம் யெச்சூரி. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் சீதாராம் யெச்சூரி சிகிச்சை பலனின்றி காலமானார்.

சீதாராம் யெச்சூரியின் மறைவு இந்திய இடதுசாரிகளுக்கு மிகப் பெரிய பேரிழப்பாகும். முதுபெரும் இடதுசாரித் தலைவரான சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.
Share on: