சென்னையில் மணல் ஒப்பந்ததாரர் கரிகாலன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!


சென்னையில் மணல் ஒப்பந்தாரரான கரிகாலன் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரிகாலன் வீட்டுக்கு ஏற்கனவே அமலாக்கத்துறை சீல் வைத்த நிலையில் நீதிமன்ற அனுமதி பெற்று சீலை அகற்றி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு அதன்மூலம் பணம் சம்பாதிக்கும் செயலில் ஈடுபடுவதாக புகார்கள் சென்றன. இதுபற்றி அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு முதல் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மணல் ஒப்பந்தாரரார்கள், மணல் குவாரி அதிபர்களின் வீடு, அலுவலகங்கள், மண் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள், வங்கி கணக்கும், ரொக்கப்பணம், பறிமுதல் செய்யப்பட்டன.

குறிப்பாக கடந்த வாரம் சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 17 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது இரண்டரை கோடி ரொக்கம் உள்பட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோத மணல் அள்ளிய விவகாரம் தொடர்பாக சண்முக ராமச்சந்திரன், கருப்பையா ரத்தினம், பன்னீர் செல்வம், கரிகாலன் உள்ளிட்டவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையின்போது ரூ.130 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. மேலும் சண்முக ராமச்சந்திரன், கருப்பையா ரத்தினம், கரிகாலன் உள்ளிட்டவரின் வங்கி கணக்குகளிலும் இருந்து ரூ.2.50 கோடி வரையிலான பணம் என்பது முடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தான் சென்னை நந்தனத்தில் உள்ள சிஐடி நகரில் மணல் ஒப்பந்ததாரரான கரிகாலன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் அவரது உறவினர் அருண் என்பவரின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

கடந்த முறை அமலாக்கத்துறை சோதனையின்போது கரிகாலன் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். இதையடுத்து அவரது வீட்டுக்கு அமலாக்கத்துறை சீல் வைத்தது. இதையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் சீல் அகற்றப்பட்டு இன்றைய சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் கரிகாலனுக்கு சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தது, முந்தைய ரெய்டுகளில் சிக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இன்றைய சோதனை என்பது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Share on: