டங்ஸ்டன் எதிர்ப்பு விஸ்வரூபம்- 20 கிமீ நடந்து சென்று மதுரையை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள்!


மேலூர் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 கிமீ நடந்து சென்று மதுரை கோரிப்பாளையம்- தமுக்கம் மைதானம் சாலையில் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையில் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மேலூர் நரசிங்கப்பட்டியில் இருந்து நடைபயணமாக சென்று ஆயிரக்கனக்கான மக்கள் மதுரையில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி உள்ளிட்ட இடங்களில் மலைப் பகுதிகளை அழித்து டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு ஏலம் விடும் வரையில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே என மத்திய அரசு குற்றம்சாட்டி இருந்தது. இந்த நிலையில் டஸ்ங்டன் சுரங்க ஏலத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

ஆனாலும் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை முழுமையாக மத்திய அரசு கைவிடும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அரிட்டாபட்டி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று மேலூரில் முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

அத்துடன் நரசிங்கப்பட்டி, அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சுமார் 20 கிமீ நடந்து மதுரை மாநகரை வந்தடைந்தனர். மதுரையில் தமுக்கம் சாலையில் தலைமை தபால் நிலையம் முன்பாக அமர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர்.

அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்; டங்ஸ்டன் சுரங்க அனுமதியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி போராட்டத்தை நடத்தியதால் மதுரையிலும் பதற்றம் உருவானது. மதுரையின் சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் 4 மாவட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் இந்தப் போராட்டம் கைவிடப்பட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்றனர்.
Share on: