தமிழகத்தில் ராமரை புகழாமல்.. எம்ஜிஆரை புகழ்ந்து வாக்குகளை பெற முயற்சிக்கிறதா பாஜக?.. கே.சி பழனிசாமி கேள்வி


தமிழகத்தில் ராமரை புகழ்ந்து வாக்கு பெற முடியாததால் எம்.ஜி.ராமச்சந்திரனை போற்றி வாக்குகளை பெற முயற்சிக்கிறதா பாஜக? என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி

பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “என்னை மிகவும் கவர்ந்த மொழி தமிழ். தமிழகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட செங்கோல், நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது. வாரணாசியில் காசி தமிழ் சங்கம் நடைபெற்றது.

தமிழ்நாடு மக்கள் இதயத்தால் சுத்தமானவர்கள், புத்திசாலிகள் ஆவார்கள். தமிழ்நாட்டிற்கு மூன்றரை கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கிவருகிறோம். தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு நிதியை பாஜக அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லாத போதும், தமிழ்நாட்டை தன் இதயத்தில் வைத்துள்ளது பாஜக.

மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு திமுக எதுவும் செய்யவில்லை. பல ஆண்டுகளாக தமிழ்நாட்டை கொள்ளை அடித்தவர்கள், பாஜகவின் வளர்ச்சியைப் பார்த்து பயப்படுகிறார்கள். இன்று தமிழ்நாடு வந்துள்ள நான் எம்.ஜி.ஆரை நினைத்துப் பார்க்கிறேன். எம்.ஜி.ஆர் ஏழைகளுக்கு செய்த உதவியால் இன்னும் நினைவில் இருக்கிறார்.

எம்.ஜி.ஆர் குடும்ப ஆட்சி செய்யவில்லை, அவருக்குப் பிறகு தமிழ்நாட்டில் நல்ல ஆட்சியை கொடுத்தது ஜெயலலிதா மட்டுமே” என்று எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார் பிரதமர் மோடி. இந்த நிலையில் இதனை விமர்சித்து முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “தமிழகத்தில் ராமரை புகழ்ந்து வாக்கு பெற முடியாததால் எம்.ஜி.ராமச்சந்திரனை போற்றி வாக்குகளை பெற முயற்சிக்கிறதா பாஜக?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Share on: