தமிழகம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தல்.. ரூ. 108 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்.


ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலும் சென்னையிலும் நடத்திய சோதனையில் ரூ. 108 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்து 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பிரகாஷ் என்பவரிடம் சோதனை செய்ததில் இரண்டு பைகளில் இருந்த 10 பொட்டலங்களில் 15 கிலோ பவுடர் 15 கிலோ திரவ வடிவிலான 30 கிலோ மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை நந்தனத்தில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி ஆதரவுடன் போதைப்பொருள் தங்கு தடையின்றி நடமாடுவதாக குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் குறித்து ஏராளமான செய்திகள் வெளியாவதாக தெரிவித்த மோடி,கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

குழந்தைகளின் எதிர்காலத்தை பாழாக்கும் கட்சியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போதைப் பொருளால் நாளைய தலைமுறையும் பாதிக்கப்படும் எனவும் மோடி எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து உடனடியாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

தமிழக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 2 மாதங்களில் போதைப்பொருள், மனமயக்க பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 470 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்றைய தினம் சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் மண்டபம் கடலோர காவல் படையினர் இணைந்து சோதனை நடத்தினர். 99 கிலோ எடையுள்ள ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்து 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share on: