‛திடீரென உடைந்த பலகை’.. சென்னையில் ஓடும் அரசு பஸ் ஓட்டை வழியே கீழே விழுந்த பெண் பயணி.. ஷாக் சம்பவம்!
சென்னையில் மாநகர அரசு பேருந்து சென்று கொண்டிருந்தபோது இருக்கைக்கு அருகே பலகை உடைந்து ஏற்பட்ட ஓட்டை வழியே பெண் பயணி தவறி கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் நோக்கி இன்று மதியம் அரசு மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தின் கடைசி இருக்கையில் 27 வயது பெண் ஒருவர் அமர்ந்து பயணம் செய்தார். இந்த பஸ் அமைந்தகரை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த பெண் அமர்ந்திருந்த இருக்கையின் அடியில் இருந்த பலகை உடைந்து ஓட்டை ஏற்பட்டது.
இந்த ஓட்டையின் வழியே பெண் தவறி கீழே விழுந்தார். இந்த வேளையில் அந்த பெண் அலறி துடித்தார். இதையடுத்து பஸ் உடனடியாக நிறுத்தப்பட்டு பெண் மீட்கப்பட்டார். அவர் லேசான காயமடைந்த நிலையில் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் சம்பவம் குறித்து அறிந்தவுடன் அமைந்தகரை போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். விபத்து ஏற்பட்ட பஸ்சை பார்வையிட்டு அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கினர். அதோடு பஸ்சில் பயணித்த பிற பயணிகள் வேறு பஸ்களில் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அமைந்தகரை பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.