நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை தீவிரம்!


நெல்லை காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் தனக்கு சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட கண்காணிப்பாளரிடம், “எனது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருகின்றனர். அவர்களால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது” என நான்கு பக்கங்கள் கொண்ட புகார் அளித்திருக்கிறார். இந்நிலையில், கரைசுத்து புதூர் உவரியில் (நாடார் உவரி) உள்ள தனக்குச் சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமாரில் உடல் இன்று (மே 4) மீட்கப்பட்டது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் நடந்துள்ள இச்சம்பவம் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.

இதற்கிடையே, கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங், மாவட்ட எஸ்பிக்கு எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில், ரூபி மனோகரன் உட்பட சில காங்கிரஸ் தலைவர்களை குற்றஞ்சாட்டி வாசகங்கள் உள்ளன இதனையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உடனடியாக சென்னையில் இருந்து நெல்லை விரைந்துள்ளார்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்படுவதாக நெல்லை எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
Share on: