பில்டப் கொடுத்த அண்ணாமலை – கடைசியில் `ஒத்திவைப்பு’ – சொதப்பியதா இணைப்பு விழா?!


நாடாளுமன்ற தேர்தல் களம் சூடாகிக் கொண்டிருக்கிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் புள்ளிகள் மாற்றுக் கட்சிகளில் இணைவது இயல்புதான். அந்த வகையில் கடந்த சில நாள்களாக அதிமுக உள்ளிட்ட கட்சியின் முக்கியப் புள்ளிகள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘ கோவையில் திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் பாஜக-வில் இணைய உள்ளார்கள்.’ என்று கூறியிருந்தார். இதையடுத்து பாஜக-வினரும் சமூகவலைதளங்களில், ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்.’ என்று சொல்லி அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பெயர்களை சொல்லி பில்டப் ஏற்றினார்கள்.

பிரதமர் மோடி கலந்துகொள்ளும் கூட்டம் பல்லடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதால் பாஜக தங்களது செல்வாக்கை நிரூபிக்க உள்ளதாக அக்கட்சியினர் கூறிவந்தனர். நேரம் ஆக.. ஆக.. முன்னாள் அமைச்சர்.. சிட்டிங் எம்எல்ஏ என்று பலரின் பெயர்கள் அடிபட்டன. இதனிடையே கோவை விமானநிலையம் வந்த அண்ணாமலை, ‘ரெசிடன்ஸி ஹோட்டல்ல பிரஸ்மீட் இருக்கு. அங்க வாங்க. சுடச்சுட செய்தி தரேன்.’ என்று கூறினார்.

பாஜகவினர் அளித்தத் தகவலின் அடிப்படையில் செய்தியாளர்கள் மாலை 5 மணியளவில் ரெசிடன்ஸி ஹோட்டல் சென்றுவிட்டனர். அங்கு கதவில் ஒருபுறம் பிரதமர் மோடி புகைப்படமும், மறுபுறம் தாமரை சின்னத்தின் படமும் வைக்கப்பட்டிருந்தது. சில புதிய பாஜக துண்டுகளும் வைக்கப்பட்டிருந்தன. அங்கு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன் என்பவர் மட்டும் நீண்ட நேரமாக காத்திருந்தார்.

பாஜக நிர்வாகிகள் அவ்வபோது வருவதும், போவதுமாக இருந்தனர். ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாகியும் இணைப்பு விழா தொடங்கவில்லை. அண்ணாமலை அங்கு வரவும் இல்லை. ஒருகட்டத்தில் பாஜகவினரே, ‘நிகழ்ச்சி இல்லை.’ என கூறி சென்றார்கள்.

இதையடுத்து பாஜக மூத்தத் தலைவர்கள் சுதாகர் ரெட்டி, எல். முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அங்கு வந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ‘மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா நிகழ்ச்சி தள்ளி போய் உள்ளது. பாதுகாப்பு அம்சம் உள்ளிட்ட காரணங்களால் இணைப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சியில் இருந்தும் பாஜகவுக்கு வர உள்ளார்கள். மாற்றுக் கட்சியினர் மோடி ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்து அவர்களாக வருகிறார்கள்.’ என்றனர்.

நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு , எல். முருகன் கடும் கோபமடைந்தார். ‘நான் வக்கீல். வானதியும் வக்கீல். எங்கு எப்படி பேச வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். நீங்க எப்படிக் கேட்டாலும் ஒரே பதில்தான். இணைப்பு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.’ என்று மீண்டும் மீண்டும் அதே பதிலை கூறினார்.

இந்நிலையில் அங்கு நீண்ட நேரமாக காத்திருந்த ராஜா அம்மையப்பன் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘நான் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டேன். இங்கு வேறு வேலையாக வந்தேன்.’ `ஹோட்டலில் தங்கியிருந்தேன்.’ `நான் வேறு கட்சியில் இணைந்துவிட்டேன்.’ `ஏமாற்றம் எல்லாம் இல்லை.’ ` பாஜகவில் சேரவில்லை என்றும் சொல்ல மாட்டேன்.’

`பிரதமரை சந்திக்க வாய்ப்பு கொடுத்துள்ளனர்.’ `நான் இங்கு கட்சியில் எல்லாம் இணைய வரவில்லை.’ `அது நாங்கள் இல்லை.’ `கட்சியில் இணைவதை அப்பறம் பார்த்துக் கொள்ளலாம்.’ என்று செய்தியாளர்களின் கேள்விக்கு மாறி மாறி குழப்பி குழப்பி பதிலளித்து சென்றார்.
Share on: