புரட்சித்தலைவருக்காக அர்பணிப்போடும் தியாகத்தோடும் செயல்பட்டவர்கள் இதை நோக்கி பயணிக்கிறார்கள் முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி காட்டம்.


இன்று அதிமுகவின் 53வது துவக்க நாள், இதுகுறித்து அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கூறுவதாவது, திமுகவை விட்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நீக்கப்பட்ட அநீதியை எதிர்த்து தமிழகமெங்கும் பொதுமக்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ரசிகர்களோடு இணைந்து துவக்கப்பட்ட இயக்கம். துவங்கிய 6 மாதத்திற்குள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகாலம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை முதல்வராக கொண்டு நல்லாட்சியை கொடுத்த இயக்கம்.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு தலைமைக்கான போட்டி வருகிற போது, இந்த இயக்கம் தொண்டர்களின் தேர்வாக ஜெயலலிதா அம்மா அவர்களின் பின்னால் அணிவகுத்து. மாற்றுக்கருத்து கொண்டவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள். 1991 முதல் 2016 வரை 15 ஆண்டுகாலம் முதல்வராக இருந்து இந்த இயக்கத்தை வழிநடத்தினார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா அம்மாவும் மாற்றுக்கருத்து கொண்டவர்களை அரவணைத்து ஒருங்கிணைத்து தாங்கள் தோற்கடிக்க வேண்டியது திமுகவை மட்டுமே, தமிழகத்தை பாதுகாக்க திராவிட சித்தாந்தத்தில் பயணிக்க, தேசிய கட்சிகள் தமிழகத்தில் காலூன்றாமல் தடுத்து நிறுத்திய பெருமைக்குரிய இயக்கமாக தமிழக மக்களுக்கு நல்லாட்சி செய்தது.

அம்மாவின் மறைவுக்கு பிறகு இன்றைய சூழ்நிலையில் தங்களது விசுவாசம் அதிமுகவுக்கு மட்டுமே இல்லாமல் பாஜகவை வளர்க்க துணை நிற்பதாகவும், தங்களை வழக்குகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள திமுகவுடன் மறைமுக ஒப்பந்தம் செய்துகொண்டும், திமுகவை எதிர்க்க துவங்கப்பட்ட சாதி மத அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்த இயக்கம் இன்று அதன் நோக்கத்தை தெரியாதவர்களால் பணபலத்தாலும், சாதிய பலத்தாலும் இந்த இயக்கத்திற்கு தலைவர்களாக அடையாளப்படுத்தி அதிமுகவை பல கூறுகளாக பிரித்து பதவி சண்டை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

தங்களுக்குள் யார் பெரியவர், யார் பதவிக்கு வரவேண்டும், உட்கட்சி போட்டிகளில் யார் யாரை வீழ்த்துவது என்பதில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டு திமுக ஆழ துணை நிற்கவும், பாஜக வளர துணை நிற்கவும் இந்த இயக்கத்தை சிறுமைப்படுத்தவும் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

வருகிற 2026-ல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சி மலர ஒன்றுபட்ட அதிமுக உருவாக, சாதி, மதம், லஞ்சம், ஊழல் இதற்க்கு அப்பாற்பட்ட தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிற ஒரு தலைமையை உருவாக்க வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகவும், எம்.ஜி.ஆர் தொண்டர்களின் ஏக்கமாகவும் இருந்துகொண்டிருக்கிறது.

53-வது ஆண்டில் அடியெடுத்துவைக்கும் அதிமுகவுக்கு, இந்த இயக்கத்திற்காக தியாகம் செய்த என் போன்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கால பொறுப்பாளர்கள், புரட்சித்தலைவருக்காக அர்பணிப்போடும் தியாகத்தோடும் செயல்பட்டவர்கள் இதை நோக்கி பயணிக்கிறார்கள். எம்.ஜி.ஆர் ஆன்மா எங்களை வழிநடத்தும் இந்த இயக்கத்தை வலிமைப்படுத்தும்.
Share on: