பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை! நிலுவையில் கோரிக்கைகள்.. தொழிற்சங்கங்கள் வலியுறுத்துவது இதுதான்!


போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்க கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததை அடுத்து, ஜனவரி 9ம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கடந்த டிசம்பர் 19ஆம் தேதி சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியுசி, பாட்டாளி, பிஎம்எஸ், ஐஎன்டியுசி, எச்எம்எஸ் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கியிருந்தன.

திட்டமிட்டபடி போராட்டம் நடைபெற்ற நிலையில் அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில், தொழிலாளர்களுக்கு போராட உரிமை இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் பொங்கல் பண்டிகையின்போது இந்த போராட்டம் அவசியமா? என்று கேள்வியெழுப்பினர். இதனையடுத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தது. இதனையடுத்து, தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து பிப்ரவரி மாதம் 7ம் தேதி (இன்று) பேச்சுவார்த்தை நடத்த போக்குவரத்து கழகம் அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்பின் பேரில், இதில் சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என தோழிற்சங்கங்கள் கூறியுள்ளன.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிஐடியு தலைவர் சௌந்தரராஜன், “15வது ஊதிய உயர்வு குறித்து பேச அரசு தரப்பில் குழு அமைப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எந்த தாமதமும் இல்லாமல் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும்.

தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமலாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அடுத்தகட்ட போராட்டத்தில் நாங்கள் இறங்காமல் இருக்க கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கோரிக்கைகள் என்ன?: ஊழியர்களின் எதிர்கால சேமிப்பான வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட தொகை ரூ. 13,000 கோடியை கழகங்கள் செலவு செய்துவிட்டன. ஊழியர்களின் பணத்தை வைத்து கழகங்களை நடத்தும் கேவலம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஓய்வுபெற்றவர்கள் மரணமடைந்தவர்களின் ஓய்வூகால பணிக்காலப் பணப்பலன்கள் உடனடியாக வழங்கப்படுவதில்லை.

அகவிலைப்படி: ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுத்த 90,000 ஓய்வூதியர்கள் வயதான காலத்தில் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை வழங்குவோம் என முதலமைச்சரே அறிவித்தார். ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. அதற்குப்பதிலாக அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டுமென நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு அப்பீல் செய்துள்ளது அரசு, மற்ற துறை ஊழியர்களைப்போல் மருத்துவக் காப்பீடும் இல்லை, மனிதாபிமானமற்ற முறையில் அரசின் செயல்பாடு உள்ளது.

ஓய்வூதியம்: வயது முதிர்ந்த காலத்தில் வாழ்க்கையின் ஆதாரமே ஓய்வூதியம்தான். ‘இது சலுகை அல்ல உரிமை என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது புதிய ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரால் ஓய்வூதியத்தை ஒன்றிய அரசு பறித்தது. எனவே. 2003க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமும் இல்லை. 2003க்கு பின் பணியில் சேர்ந்து மரணமடைந்த, பணி ஓய்வுபெற்ற 4000 ஊழியர்களின் குடும்பங்கள் வீதியில் தூக்கி எறியப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடுவோம் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. தேர்தல் வாக்குறுதி அமல்படுத்தப்படவில்லை. எனவே. புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும். ஓய்வூதிய உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும்.

வேலை நிறுத்தம்: போக்குவரத்து கழகங்களைப் பாதுகாக்க வேண்டும் பணியில் உள்ள, ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என அரசிடமும், அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்தோம். ஊர்வலம். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராடி பார்த்தோம். நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி தீர்ப்பையும் பெற்றோம். போக்குவரத்தில் வேலை நிறுத்தம் என்றால், அன்றாடம் பேருந்துகளில் பயணிக்கும் 2 கோடி தமிழக மக்களின் சிரமங்கள் கடுமையானது என்பதால் வேலை நிறுத்தம் போன்ற போராட்டத்தை தவிர்த்து வந்தோம். ஆனால், அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை. வேறு வழியின்றி வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம்” என்று கூறியுள்ளனர்.
Share on: