போலீஸ் உதவியின்றி கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பு இல்லை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து!


போலீஸ் உதவியின்றி கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பு இல்லை; அப்படியெனில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கும்?” என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

‘கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சிறப்பு பிரிவு உருவாக்க உத்தரவிட வேண்டும்’ என வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், தனபால் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ”கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சா விற்பனை தொடர்பாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த 2486 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ”தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது?” என்பது குறித்து தமிழக உள்துறை செயலர், தமிழக டிஜிபி ஆகியோர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும், ”போலீஸ் உதவியின்றி கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பு இல்லை; அப்படியெனில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கும்?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
Share on: