மிக்ஜாம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 8,000 கன அடி நீர் திறப்பு-அடையாறு ஆற்றில் பெரும் வெள்ளம்!


மிக்ஜாம் புயல் கொட்டித் தீர்க்கும் பெருமழை வெள்ளத்தால் செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து வினாடிக்கு 12,000 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது வினாடிக்கு 8,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது

சென்னைக்கு அருகே மையம் கொண்டிருக்கிறது மிக்ஜாம் புயல். மிக வலுவான மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடைவிடாத பெருமழை கொட்டித் தீர்க்கிறது. 1976-ம் ஆண்டுக்குப் பின்னர் 47 ஆண்டுகளில் இல்லாத பெருமழையை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் எதிர்கொண்டிருக்கின்றன.

இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து 12,000 கன அடியாக இருந்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி. தற்போது ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்டியதால் நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று காலை 3,000 கன அடி நீர் அடையாறு ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 6,000 கன அடிநீர் திறக்கப்பட்டது.

தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 8,000 கன அடிநீர் திறக்கப்படுகிறது. இதனால் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. சென்னையில் அடையாறு ஆற்றின் கரையோ மக்களுக்கு கூடுதல் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. சென்னை பெருநகரம் முழுவதும் ஏற்கனவே பேய்மழை வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் அடையாறு ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் ஏரியில் இருந்து 8,000 கன அடி நீருடன் கூடுதலாக நீர் திறக்கக் கூடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர் வரத்து, நீர் திறப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Share on: