முல்லைப் பெரியாறு அணையில் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு.. கோரிக்கைகளை அடுக்கிய தமிழகம்.. கேரளா முரண்டு..!


முல்லைப் பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தலைமையிலான புதிய கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் மற்றும் கேரள தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. முன்னதாக கேரளா நோக்கிச் செல்ல முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட மூவர் குழு மற்றும் ஐவர் குழு கலைக்கப்பட்டது.தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலமாக புதிய குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி,தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்புக் குழுவை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் நியமித்தது.

இக்குழுவில் தமிழ்நாடு அரசு பிரதிநிதிகளாக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியன், கேரள பிரதிநிதிகளாக அம்மாநில நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டிங்கு பிஸ்வால், நீர்ப்பாசனத் துறை தலைமைப் பொறியாளர் பிரியேஷ் மற்றும் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவன ஆய்வு அதிகாரி ஆனந்த் இராமசாமி, டெல்லியில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை குழு அதிகாரி விவேக் திரிபாதி என 7 பேர் கொண்ட குழுவினர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த புதிய கண்காணிப்புக் குழுவினர் தங்களது முதல் ஆய்வை இன்று முல்லைப்பெரியாறு அணையில் மேற்கொண்டனர். இதற்காக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி படகுத்துறைக்கு வந்த கண்காணிப்புக் குழுவினர் தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளுக்குச் சொந்தமான படகில் அணைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இதில் முல்லைப்பெரியாறு பிரதான அணை,பேபி அணை, கேலரி, மதகுகள், சுரங்கப் பாதை மற்றும் சீப்பேஜ் வாட்டர் எனப்படும் கசிவு நீர் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ய உள்ளனர். அதனைத் தொடர்ந்து இன்று மாலை குமுளி 1 ஆம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முல்லைப் பெரியாறு அணைக்கு வல்லக்கடவு வழியாக தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும், பொதுப் பணித் துறை அதிகாரிகள் எந்த தடங்கலும் இன்றி சென்று வர வேண்டும், முல்லைப் பெரியாறு அணையில் மராமத்து பணிகள் மேற்கொள்ள கேரள அரசு முட்டுக்கட்டை போடக் கூடாது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பேபி அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள முதல்கட்டமாக 13 மரங்களை வெட்ட அனுமதிக்க வேண்டும், பேபி அணையை பலப்படுத்தும் பணிகளை உடனே தொடங்க அனுமதிக்க வேண்டும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த வேண்டும்,கேரளா போலீஸ் ஆரை அணைப்பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தமிழக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கமிட்டியினர் முதல்முறையாக ஆய்வு செய்ய உள்ள நிலையில்,கேரள தரப்பில் அணை பாதுகாப்பு மற்றும் உறுதித் தன்மை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளையும் எழுப்பியதாகக் கூறப்படுக்கிறது.
Share on: