ரத்தம் சொட்ட சொட்ட அடி.. மிளகாயை கரைத்து மேலே ஊற்றினார்கள்.. எம்எல்ஏ மருமகள் மீது இளம்பெண் புகார்!


என் உடம்பில் கத்தியால் கீறி ரத்தம் சொட்ட சொட்ட அடித்தார்கள் என்று கருணாநிதி எம்எல்ஏவின் மருமகள் மீது இளம்பெண் குற்றம் சாட்டியுள்ளார். மிளகாய் பொடியை கரைத்து ஊற்றி சித்ரவதை செய்தார்கள் என்றும் கண்ணீர் மல்க புகார் கூறியுள்ளார் பாதிக்கப்பட்ட இளம்பெண்.

வீட்டு வேலைக்காக வந்த பெண்ணை கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்துள்ளனர் பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியின் மகனும், மருமகளும். புகார் அளித்த பெண்ணின் பெயர் ரேகா. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநருங்குன்றம் காலனி பகுதியை சேர்ந்த வீரமணி- செல்வி தம்பதியின் மகளாவார்.

12ம் வகுப்பு வரை படித்துள்ள ரேகா குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னையில் வாட்ச்மேன் வேலை பார்த்து வரும் உறவினர் வழியாக சித்ரா என்ற புரோக்கர் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி வீட்டில் வீட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் படிப்படியாக வேலைகளை கற்றுக்கொண்டு செய்து வந்துள்ளார். காய் நறுக்க சொன்னதோடு உணவு சமைக்க சொல்லியிருக்கிறார்கள். துணி துவைத்து காயப்போடுவது, வீடு துடைப்பது என எல்லா வேலைகளையும் செய்யச்சொல்வார்களாம். செய்த வேலையில் குற்றம் குறை கண்டுபிடித்து அடித்து உதைத்துள்ளனர்.

பொங்கல் விழாவிற்காக போகிபண்டிகை அன்று இரவு எம்எல்ஏ குடும்பத்தினர் தங்களது காரில் ரேகாவை அழைத்துச் வந்து ரோகாவின் சொந்த ஊரான திருநரங்குன்றத்தில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இரண்டு நாள் கழித்து காணும் பொங்கல் அன்று ரேகா தன் தாயிடம் கடந்த சில மாதங்களாக எம்எல்ஏ மகன் ஆண்ரோ மதிவாணன் மருமகள் மெர்லினா ஆகியோர் என்னை அடித்து உதைத்து உடம்பில் சிகரெட்டால் சூடு வைத்ததாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணை உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் அம்மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி இந்த பிரச்சினை திருவான்மியூர் பகுதியில் நடைபெற்றதால் திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளதால் இச்சம்பவம் குறித்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, சிறுமியை கொடுமைப்படுத்திய எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் மெர்லினா மீது நீலாங்கரை போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரேகாவிற்கு கொலை மிரட்டல் வந்ததை அடுத்து உடனடியாக மதுரைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ரேகா, தனக்கு நேரிட்ட கொடுமைகளை விவரித்துள்ளார்.

வீட்டு வேலைகளை நான் கற்றுக்கொண்டு செய்தாலும் குற்றம் கண்டுபிடித்து அடிப்பார்கள் என்று கூறினார். நாம் எம்எல்ஏவின் மருமகள் என்று சொல்லி சொல்லியே அடிப்பார்கள். என் அம்மா மீது போலீசில் புகார் கொடுத்து விடுவதாக மிரட்டுவார்கள். சாம்பார் கரண்டி, தோசைக்கரண்டி, கத்தியால் தாக்குவார்கள். அடியால் வலி தாங்க முடியாது அழுவேன். அப்படியும் விடாமல் ரத்தம் சொட்ட சொட்ட அடிப்பார்கள். போய் கழுவி விட்டு வா என்று சொல்லி அடிப்பார்கள்.

ரத்த காயத்தில் நான் துடித்த போது மிளகாய் பொடியை கரைத்து மேலே ஊற்றுவார்கள். எனக்கு நிறைய தலைமுடி இருக்கும் அதனை எல்லாம் வெட்டி விட்டார்கள் அப்போது கூட நான் எம்எல்ஏவின் மருமகள் என்று சொல்லிதான் அடித்து சித்ரவதை செய்தார்கள் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார் பாதிக்கப்பட்ட ரேகா.வீட்டு வேலைக்கு வந்த இளம் பெண்ணை சித்ரவதை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது மட்டும் போதாது அவர்களை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் எவிடென்ஸ் கதிர். இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இதுவரை வாய் திறக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் எவிடென்ஸ் கதிர்.
Share on: