“ரூ.4500 கோடி!” சென்னை உயர்நீதிமன்றத்தில் மணல் குவாரி வழக்கில் அமலாக்க துறை பரபரப்பு குற்றச்சாட்டு!


சென்னை: சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறை சில பரபர வாதங்களை முன்வைத்தது.

கடந்த செப். 12ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கும் மணல் குவாரிகள், சேமிப்பு கிடங்குகள், குவாரி அதிபர்களின் வீடுகளில் என மொத்தம் 34 இடங்களில் அமலாக்கத் துறை அதிரடியாகச் சோதனை நடத்தினர். அதில் ரூ.12.82 கோடி ரொக்கம், 1,024 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.

இந்த விவகாரத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையா உள்ளிட்டோர் நேரில் ஆஜராகும்படி அமலாக்க துறை சம்மன் அனுப்பியிருந்தது.

அதைத் தொடர்ந்து நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையா அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இதற்கிடையே கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் 5 மாவட்ட கலெக்டர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அதில் அமலாக்கத் துறை அதிகார துஷ்பிரயோகம் செய்து, வரம்பு மீறி சோதனை நடத்தி வருவதாகவும் மாநில நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் விதமாக மத்திய அரசின் கைப்பாவையாக உள்நோக்கத்துடன் அமலாக்கத் துறை செயல்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.

மேலும், முக்கியமாகச் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் கனிமவளம் சேர்க்கப்படவில்லை என்றும் அப்படியிருக்கும் போது, மாவட்ட ஆட்சியர்களுக்குச் சம்மன் அனுப்பவே அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், அதிகார வரம்பை மீறியும் வகையிலும் மாநில அரசு அதிகாரிகளைத் துன்புறுத்தும் நோக்கிலும் இந்த சம்மனை அமலாக்கத் துறை அனுப்பியுள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் சேர்க்கப்படாத சட்டத்தின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியாது என்றும் சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக விசாரணை நடத்துவது மாநில அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் வாதிட்டார்.
Share on: