விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்தவர் பலி.. இருவருக்கு தீவிர சிகிச்சை!


விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன், முருகன் மற்றும் சிவச்சந்திரன். இவர்கள் மூவரும் சேர்ந்து கடந்த சனிக்கிழமை (ஜூன் 29) அன்று கள்ளச்சாராயம் குடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜெயராமன், முருகன் மற்றும் சிவச்சந்திரன் ஆகிய மூவருக்கும் திடீரென வயிற்று வலி மற்றும் எரிச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து, உடனடியாக அவர்களது உறவினர்கள் மூவரையும் அருகில் உள்ள இருவேல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு, அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் முருகன் மற்றும் சிவச்சந்திரன் ஆகியோர் சற்று உடல் தேறிய நிலையில் பொது வார்டிற்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால், ஜெயராமன் என்பவருக்கு உடல்நிலை அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளானதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் இன்று (ஜூலை 04) அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து ஜெயராமனின் மருமகன் அன்பழகன் என்பவர் கூறும்போது, “கடந்த சனிக்கிழமை எனது மாமனாருக்கு திடீரென உடல்நல கோளாறு என்று போன் வந்தது. அதன் அடிப்படையில், அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம்” என்று தெரிவித்தார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் கூறும்போது, “ஜெயராமன், முருகன் மற்றும் சிவச்சந்திரன் இவர்கள் மூவரும் புதுச்சேரியில் இருந்து வாங்கிவந்த கள்ளச்சாராயத்தை குடித்ததாக தெரிய வந்துள்ளது.

மேலும், இவர்கள் மூன்று பேரில் புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி வந்தது முருகன் தான் என்பதும் தெரிய வந்துள்ளது. ஆகவே இதன் அடிப்படையில், முருகன் மீது வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

இதற்கிடையில் தான், சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இது குறித்தும் விசாரணை நடத்தப்படும்” என தெரிவித்தார்.

மேலும், கள்ளச்சாராயம் குடித்து மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் என்பவர் தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் விழுப்புரம் பகுதியில் அதிகம் பேசுபொருளாகியுள்ளது.
Share on: