விவசாயிகள் போராட்டம் தீவிரம்! போருக்கு செல்வதுபோல் படையெடுப்பு.


இரும்பு தடுப்புகள், முக கவசம், பீரங்கிபோல் மாற்றியமைக்கப்பட்ட டிராக்டர், அதிகசக்தி உடைய புல்டோசர்கள் என, போருக்கு செல்வது போல், பஞ்சாப் விவசாயிகள் டில்லியை நோக்கி தங்கள் பேரணியை நேற்று மீண்டும் துவக்கினர். இதனால், போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம், விவசாயக் கடன் தள்ளுபடி உட்படபல கோரிக்கைகளை முன் வைத்து, பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர், 13ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘டில்லி சலோ’ எனப்படும் டில்லியை நோக்கி என்ற பேரணியைத் துவக்கினர்.

கடந்த, 2020 – 2021ல் விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் மிகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நாள் நீடித்ததால், அந்த சட்டங்களை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது.அதையடுத்து, தற்போதைய போராட்டத்தை தடுக்கும் வகையில், பஞ்சாப் – ஹரியானா எல்லையில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஹரியானாவுக்குள் விவசாயிகள் நுழைய முடியாதபடி, பல அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன. கான்கிரீட் தடுப்புச்சுவர்கள், இரும்பு முள் வேலிகள் என, தடுப்புகள் அமைக்கப்பட்டன.

இதனால், பஞ்சாப் – ஹரியானா எல்லையிலேயே விவசாயிகள் முகாமிட்டிருந்தனர். கடந்த போராட்டத்தைப் போல, டிராக்டர்கள் மற்றும் பஸ்கள், வேன்கள் என, பலவகையான வாகனங்களில் விவசாயிகள் பேரணியாக வந்தனர். அடுத்த சில மாதங்களுக்கு தேவையான சமையல் பொருட்களையும் எடுத்து வந்தனர்.

போராட்டத்தை திரும்பப் பெற வைப்பதற்காக மத்திய அரசு சார்பில், பியுஷ் கோயல், அர்ஜுன் முண்டா, நித்யானந்த் ராய் அடங்கிய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்த அமைச்சர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன், நான்கு சுற்று பேச்சு நடத்தினர்.

மத்திய அரசு பல திட்டங்களை தெரிவித்தும், விவசாய சங்கத்தினர் மசியவில்லை. டில்லியை நோக்கி தங்களுடைய பேரணி தொடரும் என அறிவித்தனர்.கடந்த சில நாட்களாக, ஹரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு, ஹரியானா போலீசார், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறு விமானம் வாயிலாக, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.

போலீசின் இந்த முயற்சியை தடுக்க, விவசாயிகள், காற்றாடிகளைப் பயன்படுத்தி, ட்ரோன்களை சேதப்படுத்தினர்.மேலும், ‘முல்தானி மிட்டி’ எனப்படும் மூலிகை மண்ணை முகத்தில் பூசிக் கொண்டனர். இதன் வாயிலாக புகைக் குண்டுகளால் ஏற்படும் வெப்பத்தை தணித்தனர். இதைத் தவிர, ஈரம் செய்யப்பட்ட கோணிப்பைகளைப் பயன்படுத்தி, கண்ணீர் புகைக் குண்டுகளை செயலிழக்க வைத்தனர்.

தற்போது போராட்டத்தை தீவிரபடுத்தியுள்ள விவசாயிகள், அடுத்தக்கட்டத்துக்கு தயாராகி உள்ளனர். மொத்தம், 14,000 விவசாயிகள், 1,200 டிராக்டர்கள், 300 கார்கள், 10 மினி பஸ்களுடன் வந்துள்ளனர். இதைத் தவிர, இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்டவையும் வைத்துள்ளனர்.

தடுப்புகளை தகர்த்தெறிவதற்காக, புல்டோசர்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களையும் எடுத்து வந்துள்ளனர். தடுப்புகளை தகர்த்தெரிவதுடன், அதை அப்புறப்படுத்தவும் இவற்றை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.இதைத் தவிர போருக்கு தயாராவது போல், இரும்பு தகடுகளாலான கேடயம், டிராக்டர்களின் முன்பகுதியில் கனமான இரும்பு பாலங்கள் பொருத்தியுள்ளனர். இதற்கு ஒருபடி மேலாக, சில டிராக்டர்களை, கவச பீரங்கிபோல் வடிவமைத்துள்ளனர்.

டிராக்டர்களின் முன்பகுதியில், இரும்பு தகடுகளை பொருத்தியுள்ளனர். போலீசார் தடியடி நடத்தினால் தடுப்பதற்கு இந்த ஏற்பாடு. இதைத் தவிர, உடலில் பொருத்திக் கொள்வதற்கான தகடுகளையும் வடிவமைத்துள்ளனர்.

கண்ணீர் புகைகுண்டுகளை சமாளிக்க, முக கவசம், கண்களை பாதுகாக்கும் கவசம் உள்ளிட்டையும் தயாராக வைத்துள்ளனர். இதற்கிடையே, ஹரியானா எல்லையில், விவசாயிகளை கலைப்பதற்காக போலீசார் நேற்று கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதில், சுபகரண் சிங், 21, என்ற இளைஞர் இறந்ததாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து நடந்த மோதலில், 12 போலீசார் காயமடைந்தனர்.இதையடுத்து, போராட்டத்தை இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நாளை அறிவிப்பதாகவும், விவசாய சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
Share on: