
கடனை செலுத்திவிட்ட பின்னரும் அடமான பத்திரங்களை கொடுக்கவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கில், கரூர் வைஸ்யா வங்கியின் மேனேஜருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
ஏழை மக்களை துன்புறுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. வழக்கமாக வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அபராதம் விதித்து வந்த நிலையில், தற்போது வங்கி மேனேஜருக்கே அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
தென்காசியை சேர்ந்த மாரித்துரை என்பவர் ஆவணங்களை அடமானமாக வைத்து வங்கியில் கடன் பெற்றிருந்தார். பெற்ற கடனை கொஞ்சம் கொஞ்சமாக அவர் அடைத்திருக்கிறார். ஆனால் முழு கடனை அடைத்த பின்னரும் கூட, அடமானமாக வைக்கப்பட்ட ஆவணங்களை திருப்பி தர வங்கி மறுத்திருக்கிறது. காரணம் கேட்டால், கூடுதலாக ரூ.5 லட்சம் வரை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதனையடுத்து மாரித்துரை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.
வழக்கு விசாரணை இன்று வந்த நிலையில், இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டார். விசாரணையின் முடிவில் கரூர் வைஸ்யா வங்கியின் தலைமை மேலாளர் ஸ்ரீநாத் குமாருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மட்டுமல்லாது, வரும் 17ம் தேதிக்குள் அடமானத்திற்கு பெறப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் மனுதாரரின் வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். உரிய கடனை செலுத்திய பின்பும் ஆவணங்களை வழங்க மறுத்தது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி, ஏழை மக்களை துன்புறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
வழக்கமாக மினிமம் பேலன்ஸ் இல்லை, வேறு வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுத்துவிட்டீர்கள், எஸ்எம்எஸ் சேவை கட்டணம் என வாடிக்கையாளர்களிடமிருந்துதான் வங்கிகள் பணம் பிடுங்கும். ஆனால், வங்கி தலைமை மேனேஜருக்கே நீதிமன்றம் அபராதம் விதித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
கடந்த 2019-20 மற்றும் 2023-24ம் ஆண்டுகளுக்கு இடையில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று கூறி, ரூ.8,495 கோடியை பொதுத்துறை வங்கிகள், பொதுமக்களிடமிருந்து அபராதமாக பிடித்தம் செய்திருக்கின்றன. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக தமிழக அரசு ஓராண்டுக்கு செலவிடும் தொகையை விட இது அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.
குழுவில் இணைய