3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் டீம்.. ஐகோர்ட் உத்தரவுப்படி அண்ணா பல்கலை மாணவி வழக்கை விசாரிக்கும் குழு!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை விசாரிக்க 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி டிசம்பர் 23 ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர்கள் வரலட்சுமி, மோகன்தாஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், காவல்துறை, அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க நேற்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லக்ஷ்மி நாராயணன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “புகார்கள் பதிவு செய்யப்பட்டதும் எப்.ஐ.ஆர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. பாலியல் வழக்கில் எப்படி எப்.ஐ.ஆர் கசிந்தது என சைபர் கிரைம் காவல்துறை விசாரணை செய்து வருகிறது.
எப்.ஐ.ஆர் கசிந்த விவகாரத்தில், எஃப்.ஐ.ஆரை பார்வையிட்ட 14 பேர் அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. செல்போன் நிறுவனத்திடம் இருந்து குறிப்பிட்ட தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் ஒரு குற்றவாளி மட்டுமே இருப்பதாக காவல்துறை ஆணையர் தெரிவித்தார். தொடர் விசாரணைக்குப் பின்னர்தான் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரிய வரும்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரத்த நீதிபதிகள், “யார் எப்.ஐ.ஆர் பதிவிறக்கம் செய்கிறார்கள் என கண்டுபிடிக்க வசதி இருந்தும் ஏன் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை? புகார் அளிப்பதற்கு காவல் நிலையத்திற்கு மக்கள் வருவதற்கே பயப்படும் நிலைதான் தற்போது உள்ளது. அரசு அதிகாரிகள் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதில் என்ன சிரமம் உள்ளது.
மாறாக, பத்திரிகைகள் தவறாக திரித்து வெளியிட்டு விட்டதாக கூறக்கூடாது. 3 ஐபிஎஸ் அதிகாரிகள் குழு விசாரணை செய்வதில் தமிழக அரசுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. குழுவின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு இனி விசாரணை செய்யும்.” என உத்தரவிட்டனர்.
மேலும், “FIR பொதுவெளியில் கசிந்ததற்காக பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் அரசு இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த தொகையை குற்றத்தில் தொடர்புடையவர்களிடம்(காவல்துறை அதிகாரிகள் உட்பட) வசூலிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை. சென்னை காவல் ஆணையர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவியிடம் இருந்து கல்வி கட்டணம், விடுதிக் கட்டணம் என ஏதும் அண்ணா பல்கலைக்கழகம் வசூலிக்கக் கூடாது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் பதிவு செய்யப்படும் எப்ஐஆர் வெளியாகாமல் இருப்பதை காவல்துறை ஆணையர் உறுதிபடுத்த வேண்டும்” என உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிபிஐ விசாரணை கோரிக்கையை நிராகரித்தது சென்னை ஐகோர்ட். அதேசமயம், 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில், உடனடியாக குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது தமிழக அரசு. தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.