4 பள்ளிகளில் போலி என்.சி.சி முகாம் நடத்தப்பட்டது எப்படி? என்ன உள்நோக்கம்? ஐகோர்ட் சரமாரி கேள்வி!


போலி என்.சி.சி.முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில், நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை எனக் கூறிய நீதிபதிகள், இந்த நான்கு பள்ளிகளிலும் போலி என்.சி.சி. முகாம் எப்படி நடத்தப்பட்டது? என்ன உள்நோக்கம் என்பது தொடர்பாக விரிவாக விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த மாதம் என்.சி.சி பயிற்சி முகாம் நடந்தது. இதில் 13 வயது மாணவி ஒருவர், போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். மேலும் பல மாணவிகள் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன், உதவி பயிற்சியாளர்கள், பள்ளியின் முதல்வர், தாளாளர், ஆசிரியர்கள் என பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன், தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து சிவராமனின் தந்தையும் ஒரு விபத்தில் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் ஏ.பி. சூர்யபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகினர்.

பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 1.63 கோடி ரூபாய் கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

சிவராமன், பள்ளி மாணவிகளை அவரது அலுவலகத்தில் வைத்து பாலியல் தொல்லை அளித்ததும் மாமல்லபுரம், கொடைக்கானல் மற்றும் மைசூர் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா அழைத்து சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

சம்பவம் நடைபெற்றது முதல் தற்போது வரையிலான விசாரணையின் நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில் விசாரணை இருக்கும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை எனக்கூறிய நீதிபதிகள், இந்த நான்கு பள்ளிகளிலும் போலி என்.சி.சி. முகாம் எப்படி நடத்தப்பட்டது? என்ன உள்நோக்கம் என்பது தொடர்பாக விரிவாக விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்து, விசாரணையை அக்டோபர் 30 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Share on:

தொழிலாளர்களின் போராட்டத்தால் 100 மில்லியன் டாலர் இழப்பு- ஹைகோர்ட்டில் சாம்சங் வாதம்


தொழிலாளர் போராட்டத்தால் நூறு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்தநிலையில், தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை என தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில், தொழிற்சங்கத்தை துவங்கி, அதை பதிவு செய்யக் கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தங்கள் தொழில் சங்கத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சங்கத்தின் எல்லன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், நிறுவனத்தின் பெயரை தொழிற்சங்கத்திற்கு பயன்படுத்தக் கூடாது என சாம்சங் நிறுவனத்தின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் தங்கள் தொழிற்சங்கத்தை அரசு பதிவு செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து தொழிற்சங்கத்தை பதிவு செய்து சான்று வழங்கும்படி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் சாம்சங் நிறுவனம் பெயரில் தொழிற்சங்கம் துவங்க அந்த நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளதாகவும் இது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது .

இதையடுத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சாம்சங் நிறுவனம் சார்பில் ஆஜராக மூத்த விளக்கின் ஜி ராஜகோபால், தங்கள் நிறுவனத்தில் அரசியல் தலையீடு இருக்க கூடாது என்றும், நிறுவனத்தின் பெயரில் தொழிற்சங்கம் துவங்குவது அடிப்படை உரிமை அல்ல என்றும் தெரிவித்தார். தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் 100 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாகவும், தங்கள் நிறுவன பெயரை பயன்படுத்தாமல் தொழிற்சங்கத்தை தொடங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். எனவே இந்த வழக்கில் தங்களையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்..

அப்போது தொழிலாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என் ஜிஆர் பிரசாத், தொழிற்சங்க சட்டத்தின் கீழ் சங்கத்தை பதிவு செய்வது அடிப்படை உரிமை என்றும் கொரியாவில் கூட சாம்சங் பெயரை பயன்படுத்தி தொழிற்சங்கம் உள்ளதாகவும் தெரிவித்தார். தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை என்றும் இது போல் பல நிறுவனங்களின் பெயர்களில் தொழிற்சங்கங்கள் துவங்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்டு நீதிபதி சாம்சங் நிறுவன இடையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 11 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Share on:

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு எனக் கூறி ரூ.14 கோடி மோசடி! சிக்கிய கும்பல்!


ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் 500% லாபம் கிடைக்கும் எனக் கூறி விபூதி அடித்து ரூ.14 கோடி மோசடி செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிக லாபம் என ஆசை காட்டி மோசடியில் ஈடுபட்ட மிகப்பெரிய கும்பலை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் வலைவீசி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் சென்னையைச் சேர்ந்த நபரை வாட்ஸ்அப் மூலம் ஒரு கும்பல் தொடர்பு கொண்டு முதலீடு செய்ய அழைத்துள்ளது. Black Rock Asset Management Business School என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரண்டே மாதத்தில் 500% லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். அந்த நிறுவனத்திற்கு SEBI அனுமதி இருப்பதாக கூறியுள்ளனர்.

அவர் நம்பும் வகையில் முதலீடு தொடர்பான செயலிகளை உருவாக்கி அனுப்பியுள்ளனர். அதில் பலரும் அதிக லாபம் பெற்றதுபோல போலியான பரிமாற்றங்கள் செய்து நம்ப வைத்து முதலீடு செய்ய வைத்துள்ளனர்.

BR IIFL PRO என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்து முதலீடு செய்யுமாறு கூறியுள்ளனர். வாட்ஸ் அப் மூலம் தொடர்புகொண்ட அந்த கும்பலை நம்பி செயலியை பதிவிறக்கம் செய்து அந்த நபர் முதலீடு செய்துள்ளார். ஆனால், அந்தப் பணம் அதோடு போனதுதான். லாபமும் வரவில்லை, போட்ட முதலும் கிடைக்கவில்லை.

முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காத போதுதான், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து போலீசில் புகார் தெரிவித்துள்ளார். தேசிய சைபர் கிரைம் போர்டலில் அவர் புகார் அளித்ததன் பேரில் மாநில சைபர் கிரைம் பிரிவு வழக்கு பதிவு செய்தனர்.

அந்த நபரிடம் இருந்து மோசடி செய்யப்பட்ட பணம் வரவு வைக்கப்பட்ட 13 வங்கி கணக்குகள் உடனடியாக முடக்கப்பட்டன. இந்த மோசடி தொடர்பாக சுமார் 21 லட்சம் பணத்தை தனது வங்கிக் கணக்கில் பெற்ற செங்கல்பட்டை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

சுப்பிரமணியன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த மதன், திருநின்றவூரை சேர்ந்த சரவணபிரியன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஆவடியைச் சேர்ந்த சதீஷ்சிங், புளியந்தோப்பை சேர்ந்த ஷாபகத், மதுரை மணிகண்டன் ஆகியோரையும் கைது செய்தனர்.

மேலும், இந்த மோசடியில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. வடமாநில மோசடி கும்பலை சேர்ந்தவர்களை பிடிப்பதற்காக தமிழக சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Share on:

பூர்விகா உரிமையாளர் வீட்டில் 3ஆவது நாளாக ரெய்டு! வரி ஏய்ப்பு புகாரால் பெரும் சர்ச்சை


செல்போன்களை விற்பனை செய்யும் பூர்விகா நிறுவன உரிமையாளர் யுவராஜ் வீட்டில் வருமான வரித் துறையினர் 3ஆவது நாளாக சோதனை நடத்தி வருகிறார்கள். அது போல் பல்லாவரம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

செல்போன்கள், ஐபோன்கள், ஸ்மார்ட் வாட்ச், ஹெட்போன், ஏர் டோப்ஸ், இயர் பாட்ஸ் என பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களை பூர்விகா விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு கேரளா, கர்நாடகா, ஆகிய மாநிலங்களிலும் கிளைகள் உள்ளன. இங்கு குறைந்த விலையில், எளிய தவணை முறையில் செல்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

அது போல் செல்போன்களுக்கு நிறைய ஆஃபர்களையும் இந்த கடை அள்ளி வழங்குகிறது. இதனால் இந்த கடைகள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. இந்த கடையில் ரூ. 600 க்கு கூட செல்போன் கிடைக்கும். இந்த நிலையில் பூர்விகா நிறுவனம் வரி ஏய்ப்பு புகாரின் பேரில் பூர்விகா உரிமையாளர் யுவராஜ் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்படுகிறது.

நேற்று காலை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள யுவராஜின் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. அது போல் பல்லாவரம், பள்ளிக்கரணை பகுதிகளிலும் இந்த சோதனை நடத்தப்படுகிறது. 3 கார்கள் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள். சோதனையில் கிடைக்கும் ஆதாரங்களை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

அந்த வகையில் நேற்று முன் தினம் (அக்டோபர் 17) தொடங்கிய இந்த சோதனை நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது. அது போல் 3ஆவது நாளாக இன்றும் பூர்விகா உரிமையாளர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
Share on:

பதறவைத்த வீடியோ! மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்! நெல்லை நீட் பயிற்சி மைய உரிமையாளர் மீது 3 வழக்குகள்


திருநெல்வேலி நீட் பயிற்சி மையத்தில் கண்மூடித்தனமாக மாணவர்களை பிரம்பால் கொடூரமாக தாக்கியது மற்றும் மாணவி மீது காலணியை வீசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படத்தியது. இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் 3 பிரிவுகளின் கீழ் நீட் பயிற்சி மைய உரிமையாளர் ஜலாலுதீன் அஹமத் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட மருத்துவ மேற்படிப்புகளுக்கு ‛நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு முக்கிய நகரங்கள் நீட் பயிற்சி மையங்கள் உள்ளன. அந்த வகையில் திருநெல்வேலி புதிய பஸ் நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் உள்ளது.

இந்த மையத்தில் மாணவர்களும், மாணவிகளுக்கும் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் பரபரப்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் மாணவ-மாணவிகள் மீது தாக்குதல் கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதாவது பயிற்சி மைய வகுப்பறையில் மாணவ – மாணவிகள் அமர்ந்து இருக்கின்றனர். அப்போது உள்ளே வரும் ஒருவர் மாணவி மீது காலணி கொண்டு எறிந்து தாக்குகிறார். அதேபோல் மாணவர்களை ஆக்ரோஷமாக திட்டி பிரம்பால் தாக்குகிறார். இதில் சில மாணவர்கள் காயமடைந்தனர். இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதையடுத்து மேலப்பாளையம் போலீசார் விசாரணையை தொடங்கினர். உதவி காவல் ஆணையர் சரவணன் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள், மாநில மனித உரிமைகள் ஆணையத்தை சேர்ந்தவர்கள் நீட் பயிற்சி மையத்துக்கு சென்று மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட மாணவர்களில் 2 பேர் சிறார்கள் என்பது தெரியவந்தது.

அதுமட்டுமின்றி மனித உரிமைகள் ஆணையத்தை சேர்ந்தவர்கள் நீட் தேர்வு மையத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதுமட்டுமின்றி சம்பவம் தொடர்பாக விசாரித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றி மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் 21ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வருவாய்த்துறை அதிகாரிகளிடம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே தான் மேலப்பாளையம் போலீசார் நீட் பயிற்சி மையத்தின் உரிமையாளர் ஜலாலுதீன் அஹமத் மீது 3 பிரிவுகளில் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதன்படி நீட் பயிற்சி மையத்தின் உரிமையாளரான ஜலாலுதீன் அஹமத் மீது சட்டப்பிரிவு 323 (தாமாக முன்வந்து இன்னொருவரை காயப்படுத்துதல்), 355 (ஒருவரை அவமதிக்கும் நோக்கத்தில் தாக்குதல் நடத்துவது), 75 ஜேஜே சட்டத்தை (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Share on:

புரட்சித்தலைவருக்காக அர்பணிப்போடும் தியாகத்தோடும் செயல்பட்டவர்கள் இதை நோக்கி பயணிக்கிறார்கள் முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி காட்டம்.


இன்று அதிமுகவின் 53வது துவக்க நாள், இதுகுறித்து அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கூறுவதாவது, திமுகவை விட்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நீக்கப்பட்ட அநீதியை எதிர்த்து தமிழகமெங்கும் பொதுமக்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ரசிகர்களோடு இணைந்து துவக்கப்பட்ட இயக்கம். துவங்கிய 6 மாதத்திற்குள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகாலம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை முதல்வராக கொண்டு நல்லாட்சியை கொடுத்த இயக்கம்.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு தலைமைக்கான போட்டி வருகிற போது, இந்த இயக்கம் தொண்டர்களின் தேர்வாக ஜெயலலிதா அம்மா அவர்களின் பின்னால் அணிவகுத்து. மாற்றுக்கருத்து கொண்டவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள். 1991 முதல் 2016 வரை 15 ஆண்டுகாலம் முதல்வராக இருந்து இந்த இயக்கத்தை வழிநடத்தினார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா அம்மாவும் மாற்றுக்கருத்து கொண்டவர்களை அரவணைத்து ஒருங்கிணைத்து தாங்கள் தோற்கடிக்க வேண்டியது திமுகவை மட்டுமே, தமிழகத்தை பாதுகாக்க திராவிட சித்தாந்தத்தில் பயணிக்க, தேசிய கட்சிகள் தமிழகத்தில் காலூன்றாமல் தடுத்து நிறுத்திய பெருமைக்குரிய இயக்கமாக தமிழக மக்களுக்கு நல்லாட்சி செய்தது.

அம்மாவின் மறைவுக்கு பிறகு இன்றைய சூழ்நிலையில் தங்களது விசுவாசம் அதிமுகவுக்கு மட்டுமே இல்லாமல் பாஜகவை வளர்க்க துணை நிற்பதாகவும், தங்களை வழக்குகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள திமுகவுடன் மறைமுக ஒப்பந்தம் செய்துகொண்டும், திமுகவை எதிர்க்க துவங்கப்பட்ட சாதி மத அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்த இயக்கம் இன்று அதன் நோக்கத்தை தெரியாதவர்களால் பணபலத்தாலும், சாதிய பலத்தாலும் இந்த இயக்கத்திற்கு தலைவர்களாக அடையாளப்படுத்தி அதிமுகவை பல கூறுகளாக பிரித்து பதவி சண்டை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

தங்களுக்குள் யார் பெரியவர், யார் பதவிக்கு வரவேண்டும், உட்கட்சி போட்டிகளில் யார் யாரை வீழ்த்துவது என்பதில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டு திமுக ஆழ துணை நிற்கவும், பாஜக வளர துணை நிற்கவும் இந்த இயக்கத்தை சிறுமைப்படுத்தவும் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

வருகிற 2026-ல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சி மலர ஒன்றுபட்ட அதிமுக உருவாக, சாதி, மதம், லஞ்சம், ஊழல் இதற்க்கு அப்பாற்பட்ட தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிற ஒரு தலைமையை உருவாக்க வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகவும், எம்.ஜி.ஆர் தொண்டர்களின் ஏக்கமாகவும் இருந்துகொண்டிருக்கிறது.

53-வது ஆண்டில் அடியெடுத்துவைக்கும் அதிமுகவுக்கு, இந்த இயக்கத்திற்காக தியாகம் செய்த என் போன்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கால பொறுப்பாளர்கள், புரட்சித்தலைவருக்காக அர்பணிப்போடும் தியாகத்தோடும் செயல்பட்டவர்கள் இதை நோக்கி பயணிக்கிறார்கள். எம்.ஜி.ஆர் ஆன்மா எங்களை வழிநடத்தும் இந்த இயக்கத்தை வலிமைப்படுத்தும்.
Share on:

மன்னர் சார்லஸ் வழங்கிய உயரிய கௌரவத்தையே புறங்கையால் ஒதுக்கிய ரத்தன் டாடா.. காரணம் என்ன தெரியுமா?


பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். டாடா குழுமத் தலைவராக இருந்து, அதன் வளர்ச்சிக்கும், இந்திய தொழில் துறையின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர் ரத்தன் டாடா. பிசினஸ் மேக்னட்டாக இருந்த அதே ரத்தன் டாடா, உயிர்கள் மீது மிகுந்த அக்கறை செலுத்தியவர். தனது செல்லப் பிராணிகளுக்கு ஒன்று என்றால் துடித்துப்போய்விடக் கூடியவர். தனது செல்ல நாய்க்காக அவர், பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மிகப்பெரிய கௌரவத்தையே புறந்தள்ளினார்.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, தனது 86வது வயதில் நேற்று இரவு காலமானார். தனது நிறுவனங்கள் மூலம் பல லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளித்து, இந்திய தொழில்துறையில் மதிப்புமிக்க பணிகளைச் செய்த ரத்தன் டாடா போற்றுதலுக்குரியவர். இவற்றிற்கு அப்பால், அவரது மனிதாபிமான குணம், நாய்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகள் மீதான அவரது அன்பு மகத்தானது.

பலருக்கும் தெரியாத ஒரு விஷயம், தனது செல்லப் பிராணிக்காக, ரத்தன் டாடா பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மதிப்புமிக்க கவுரவத்தை நிராகரித்தார் என்பது. தற்போதைய பிரிட்டிஷ் மன்னரும் அப்போதைய வேல்ஸ் இளவசரருமான சார்லஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு, ரத்தன் டாடாவின் சிறப்பான தொண்டு நிறுவன சேவைகளுக்காக வாழ்நாள் சாதனையாளர் விருதைக் கௌரவிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.

பிரிட்டிஷ் ஆசிய அறக்கட்டளை, நடத்திய இந்த விருது வழங்கும் விழா, கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற இருந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு கௌரவம் மிக்க விருதைப் பெற ரத்தன் டாடாவும் ஒப்புக்கொண்டிருந்தார்.

ஆனால் ரத்தன் டாடா லண்டன் கிளம்பும் நாள் நெருங்கி வந்த நிலையில், திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்டு, லண்டன் செல்லாமல் இங்கேயே இருக்கும் முடிவை எடுத்தார். அதற்கு காரணம் அவரது வளர்ப்பு நாய் நோய்வாய்ப்பட்டு ஆபத்தான நிலைமையில் இருந்தது. இதனால் சார்லஸ் ஒருங்கிணைத்த விருது விழாவை ரத்து செய்துவிட்டு, தமது செல்ல நாயை கவனிக்க அவர் முடிவு செய்தார்.

டாடாவுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள லண்டன் சென்றவர்களில் ஒருவர் தொழிலதிபரான சுஹேல் சேத். பிப்ரவரி 6 ஆம் தேதி நடந்த விழாவிற்காக 2 ஆம் தேதிய லண்டன் சென்றார் சுஹேல் சேத். லண்டனில் அவர் தரையிறங்கியதும் ரத்தன் டாடாவிடம் இருந்து 11 மிஸ்டு கால்கள் வந்திருந்ததை கவனித்துள்ளார்.

உடனே அவர் ரத்தன் டாடாவை தொடர்பு கொண்டுள்ளார். ரத்தன் டாடா, தனது நாய்க்கு உடம்பு முடியவில்லை, நான் அதை பார்த்துக்கொள்ள வேண்டும் எனக் கூறி, லண்டனுக்கு வர இயலாத தனது நிலையை விளக்கியுள்ளார். மிக ஆபத்தான கட்டத்தில் இருக்கும் எனது செல்ல நாயை விட்டுவிட்டு லண்டன் புறப்பட முடியாது என ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

மேலும், பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு, தன்னால் வர இயலாததையும் முறைப்படி தெரியப்படுத்தி உள்ளார். ரத்தன் டாடா வர இயலாமல் போனதற்கான உண்மையான காரணம் மன்னர் சார்லஸு க்கு தெரியவர, அவர் ரத்தன் டாடா குறித்து பெருமையாக பேசியதாக தொழிலதிபர் சுஹேல் சேத் காணொளி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

தனது இரண்டு நாய்களான டிட்டோ (ஜெர்மன் ஷெப்பர்ட்) மற்றும் டேங்கோ (கோல்டன் ரெட்ரீவர்) ஆகிய செல்லப்பிராணிகளின் மரணம் தன்னை எப்படிப் பாதித்தது என்பதைப் பற்றி ஒருமுறை பேசிய ரத்தன் டாடா, “செல்லப்பிராணிகளாக நாய்கள் மீதான எனது அன்பு எப்போதும் அதிக பிணைப்பு கொண்டது. இது நான் உயிருடன் இருக்கும் வரை தொடரும்.

எனது செல்லப்பிராணிகளில் ஒன்று இறந்து போகும் ஒவ்வொரு முறையும் விவரிக்க முடியாத சோகம் ஏற்படுகிறது.அந்த இயற்கையின் மற்றொரு நிகழ்வு இது என என்னால் கடந்து செல்ல முடியாது. அடுத்த இரண்டு-மூன்று வருடங்களுக்கு என் வீடு மிகவும் வெறிச்சோடி, அவர்கள் இல்லாமல் நான் வாழ முடியாதபடி அமைதியாகவும் மாறுகிறது” எனக் கூறி இருக்கிறார்.
Share on:

சாம்சங் நிறுவனத்தின் கையாளாக தமிழக அரசு.. இது தான் திராவிட மாடலா? சிபிஐ கண்டனம்..


சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, போராட்ட பந்தல் அகற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். இதே போல், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க நிர்வாகிகளை இரவில் வீடு தேடி போலீஸ் அராஜகமாக கைது செய்து வருவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள ‘சாம்சங்’ தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கேட்டு, கடந்த 30 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து அமைச்சர்கள் அன்பரசன், டிஆர்பி ராஜா ஆகியோர் தலைமைச் செயலகத்தில் சாம்சங் நிர்வாகம் மற்றும் தொழிலாளர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சிஐடியு தொழிற்சங்க பதிவை தவிர மற்ற கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் ஏற்றுக் கொண்டதாகவும் ஒரு பிரிவு தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவதாக உறுதியளித்த நிலையில், சிஐடியு மட்டும் போராட்டத்தை தொடர்வதாகவும், அவர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் டிஆர்பி ராஜா நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக போராட்ட குழுவினர் அமைத்திருந்த பந்தலை போலீசார் அகற்றியதாக கூறப்படுகிறது.

மேலும் சாம்சங் தொழிலாளர்களை வீடு வீடாகச் சென்று கைது செய்வதாகவும், பேருந்துகளில் செல்பவர்களையும் தடுத்து விதிகளை மீறி கைது செய்யப்படுவதாக வீடியோக்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்று சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்வதற்காக வந்த நிலையில் அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். தொடர்ந்து தடையை மீறி அவர்கள் பேரணியாக சென்ற நிலையில் அங்கு பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க நிர்வாகிகளை இரவில் வீடு தேடி போலீஸ் அராஜகமாக கைது செய்து வருவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான பதிவில், சாம்சங் நிறுவனத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் 30 நாட்களாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்த பந்தலை நேற்று இரவு போலீஸ் அராஜகமாக அகற்றியுள்ளனர். காவலர்கள் குவிக்கப்பட்டு போராட்டத்திற்கு வருகிற தொழிலாளர்களை கைது செய்ய தயாராக உள்ளன. போராடும் இடத்தை அராஜகமாக போலீஸ் அகற்றிய பிறகும் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் 31வது நாளாகத் தொடர்கிறது. கோரிக்கை வெல்லும் வரை போராட்டம் தொடரும்” என கூறப்பட்டுள்ளது.
Share on:

திருப்பூரில் கேட்ட பயங்கர சத்தம்.. 9 மாத குழந்தை உட்பட மூவர் பலி.. நாட்டு வெடிகுண்டால் பதற்றம்.


திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருமாநல்லூர் சாலையில் உள்ளது பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 9 மாத குழந்தை உட்பட மூவர் பரிதாபமாக ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். நாட்டு வெடிகுண்டு எப்படி தயாரிக்கப்பட்டது, யார் தயாரித்தனர் என்பது குறித்து போலீஸார் விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருமாநல்லூர் சாலையில் உள்ள பாண்டியன் நகர், சத்யா காலனி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவருக்கு அப்பகுதியில் சொந்தமான வீடு உள்ளது. இந்நிலையில், கார்த்தி அங்குள்ள கோயில் விசேஷங்களுக்குப் பயன்படுத்தப்படும் பட்டாசு நாட்டு வெடிகளை தயாரித்து கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று மதியம் திடீரென அதிக சப்தத்துடன் வெடிச்சத்தமானது கேட்டுள்ளது. இதில், கார்த்தி என்பவரது வீடு முழுவதுமாக தரைமட்டமாக சேதமடைந்துள்ளது. அந்த கட்டடத்துக்குள் 10 நபர்கள் இருந்துள்ளனர். அதில், மூவர் குழந்தைகள். இந்நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகே உஉள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வெடி விபத்தில் 9 மாத குழந்தை உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அந்த வீட்டில் இருந்தவர்கள் அனைவருமே வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று முதல்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. இந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் கார்த்தி என்பவரது வீடு சேதம் அடைந்தது மட்டுமின்றி எதிரில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள் முழுவதும் சேதம் அடைந்துள்ளன.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமுருகன் பூண்டி போலீசார் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இங்கு ஏராளமான நாட்டு வெடிகள் வெடிக்காத நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி வேறு எங்கேனும் நாட்டு வெடிகள் சிதறி கிடக்கின்றனவா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த விபத்து எப்படி நடந்தது, நாட்டு வெடிகுண்டு எப்படி தயாரிக்கப்பட்டது உள்ளிட்டவை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் திருவிழாவிற்கு பயன்படுத்தும் நாட்டு பட்டாசுகள் தயாரிக்கும் போது விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
Share on:

மெரினாவில் 2 மணி நேரம்.. சாலையில் கிடந்து உயிருக்கு போராடிய நபர் மரணம்.. போலீஸ் எங்கே?


சென்னை மெரினாவில் நிகழ்ந்த கார்த்திகேயன் என்பவரின் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் போலீசார் கொஞ்சம் கூட கவனமின்றி செயல்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

நேற்று சென்னையில் மிக சிறப்பாக விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 5 பேர் மரணம், அரசு சரியாக திட்டமிடவில்லை, பாதுகாப்பு பணிகளை செய்யவில்லை என்றெல்லாம் புகார்கள் வைக்கப்படுகின்றன.

நிகழ்ச்சியை பார்த்துவிட்டு பைக்கில் திரும்பியபோது ஓமந்தூரார் மருத்துவமனை அருகே பெருங்களத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் மயங்கியுள்ளார். ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சீனிவாசன் பலியாகி உள்ளார். இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியைப் பார்வையிட வந்தவர்களில், 230 பேருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 40 ஆம்புலன்ஸ்கள் மூலமாக 93 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 4 பேர் இந்த நிகழ்வில் பலியாகி உள்ளனர் .

மெரினாவில் நிகழ்ந்த கார்த்திகேயன் என்பவரின் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் போலீசார் கொஞ்சம் கூட கவனமின்றி செயல்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. இவர் தனது மனைவி குழந்தையை மெரீனாவில் உள்ள முத்தமிழ் அறிஞர் பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு.. அங்கிருந்து பார்க்கிங் பகுதிக்கு சென்றுள்ளார்.

பார்க்கிங்கிற்கு சென்றவர் 2 மணி நேரமாக வரவில்லை. அவர் பார்க்கிங் அருகே மூச்சு திணறி , நீர் இழப்பு ஏற்பட்டு கண்கள் பாதி மூடிய நிலையில் படுத்து கிடந்துள்ளார். நீர் இழப்பு ஏற்பட்டு அங்கேயே வாந்தியும் எடுத்துள்ளார். 2 மணி நேரமாக அவர் அங்கேயே உயிருக்கு போராடியபடி அங்கேயே இருந்துள்ளார். அவரை ஒரு போலீசார் கூட மீட்கவில்லை. ஒரு நபர் கூட காப்பாற்றவில்லை. ஏன் ஆம்புலன்ஸ் கூட கூட்டம் காரணமாக வரவில்லை.

2 மணி நேரத்திற்கு பின் விஷயம் தெரிந்து கார்த்திகேயனின் மனைவி அந்த இடத்திற்கு சென்றுள்ளார். அங்கே போய் அவர் ஆம்புலன்ஸை வரவழைத்தும் கூட அது நேரத்திற்கு வரவில்லை. 3 மணி நேரத்திற்கு பின்பே அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிந்தது. அவரை ஒரு போலீசார் கூட காப்பாற்ற வரவில்லை. 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் இருந்தனர் என்றால் எங்கே இருந்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

போலீசார்.. அதிகாரிகள்.. அரசு தரப்பு நிர்வாகிகள் எங்கே இருந்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீசாரின் செயல் இதில் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை விமான சாகச நிகழ்ச்சியை காண சென்றவர்கள் 5 பேர் மரணம் அடைந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழக போலீசார் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளனர். சென்னையில் விமான சாகச நிகழ்ச்சியை காணச் சென்ற 5 பேர் பலியான சம்பவத்தில், உரிய விளக்கத்தை அறிக்கையாக சமர்ப்பிக்க தமிழ்நாடு டிஜிபிக்கு அரசு சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று சென்னையில் மிக சிறப்பாக விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 5 பேர் மரணம், அரசு சரியாக திட்டமிடவில்லை என்று புகார் வைக்கப்பட்டு உள்ளது.
Share on: