செந்தில் பாலாஜிக்கு சோதனை! அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு தள்ளுபடி!


அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளிவைக்க கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தீர்ப்பினை தள்ளி வைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு ஜூலை 16ம் தேதி பிறப்பிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
Share on:

அதிமுக தொண்டர்கள் புறக்கணித்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தலையா? எடப்பாடி பழனிசாமியையா?


அதிமுக தொண்டர்கள் புறக்கணித்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தலையா இல்லை எடப்பாடி பழனிசாமியையா என முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று நடந்து முடிந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமி தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அதிமுக தொண்டர்கள் புறக்கணித்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தலையா? அல்லது எடப்பாடி பழனிசாமியையா?

மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டிய கடைசி நாளில் வாபஸ் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார். இதனால், இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எந்த வேட்பாளரும் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே காங்கிரஸ் இந்துத் தொகுதியில் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தது. தேர்தல் முடிவுகள் வெளியான போது அந்தத் தொகுதியில் நோட்டா 2.18 லட்சம் வாக்குகள் பெற்றது. இதுதான் தலைமையை தொண்டர்கள் ஏற்றுக்கொள்வது.

இதேபோல தான் அதிமுக, #விக்கிரவாண்டி இடைத் தேர்தலில், தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தேர்தல் புறக்கணிப்பு என்றால் அதிமுகவினர் யாரும் வாக்குச்சாவடி பக்கமே செல்லக்கூடாது. வாக்குப்பதிவு சதவிகிதம் குறைய வேண்டும் அது தான் தேர்தல் புறக்கணிப்பின் அர்த்தமாகும். ஆனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் 82.48%. இதன் மூலம் அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெரிகிறது. இவ்வாறு தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share on:

அதிமுகவில் மீண்டும் எழுந்த கலகக் குரல்? அடுத்து நடக்கப்போவது என்ன?


தற்போது அதிமுகவில் தலைமை யுத்தம் ஏதும் இல்லை. மீண்டும் கட்சி ஒன்றிணைகிறதா இல்லையா என்பது தான் கேள்வி. சமீப நாட்களாக EPS அவர்களின் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை பார்த்தால் அவர் இன்னும் இந்த இயக்கத்தை ஒன்றிணைக்கும் பக்குவத்திற்கு வரவில்லை என்பதை தான் காட்டுகிறது.

ஏனென்றால் 2014 தேர்தலையும் 2024 தேர்தலையும் ஒப்பிட்டால் கோவையில் அண்ணாமலை 50 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்றுவிட்டார் என்கிறார் EPS. ஆனால் 2014 தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக 2024-ல் மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளது. ஒரு கட்சித்தலைவராக வென்ற தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் குறைந்துள்ளது என்பதை அவர் பார்க்கவில்லை. அண்ணாமலை 50 ஆயிரம் வாக்குகள் குறைவாக வாங்கிவிட்டார் என்று பொதுவெளியில் கூறுவது திமுகவின் வெற்றியை கொண்டாடுவதாக தான் பார்க்கப்படும்.

ஒருங்கிணைப்பை பற்றி கேள்வி கேட்டால் ஓ.பி.எஸ் தலைமை கழகத்தை தாக்கிவிட்டார், கட்சி வாகனங்களை நொறுக்குகிவிட்டார், தொண்டர்களை தாக்கிவிட்டார் என்கிறார். அப்படி பார்த்தால் கே.சி.பழனிசாமி தலைமை கழகத்தை சூறையாடவில்லை, கட்சிக்காரர்களை தாக்கவில்லை, கட்சி வாகனங்களை நொறுக்கவில்லை. மேலும் பாஜக கூட்டணி வேண்டாம் என்று கட்சியில் இருந்து நீக்கப்படும் முன் கே.சி.பி கூறிய அதே கருத்தை தான் இன்று EPS ஏற்றிருக்கிறார். அவருடைய நீக்கம் ஏன் இன்னும் ரத்து செய்யப்படாமல் இருக்கிறது?

இன்னும் வெளியுலகிற்கே தெரியாத ஒரு விசயம் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே திரு.கே.சி.பி மற்றும் திரு.சி.வி.சண்முகம் இடையே 3 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் எந்த உறுதியான முடிவும் எடப்பாடி பழனிசாமி அவர்களால் எடுக்க முடியவில்லை. அவர் மீண்டும் மீண்டும் முயற்சிப்பது தன்னாலேயே அதிமுகவை மீண்டும் ஆளும் கட்சியாக கொண்டுவந்துவிட முடியும் என்பது தான்.

நிபந்தனை இல்லாமல் கட்சியில் இணைய தயார் என்கிறார் ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி அவர்களை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டு, அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு இரட்டை இலைக்கு கையெழுத்து போடுகிற உரிமையையும் வைத்துக்கொண்டு ஓ.பி.எஸ் அவர்களை இணைத்து அவருக்கு கௌரமாக ஒரு இடத்தை கொடுத்து, சசிகலா அவர்களையும் இணைத்து அவர்களுக்கும் ஒரு கௌரமாக ஒரு அங்கீகாரத்தை கொடுக்கலாம் என்பதற்கும் EPS தயாராக இல்லை.

ஒரு உண்மையை எடப்பாடி பழனிசாமி எப்போது புரிந்துகொள்வார் என்று தெரியவில்லை. என்ன நடந்தாலும் திமுக தற்போது கூட்டணி பலத்தோடு 45 சதவீதம் வாக்கு வங்கி வைத்துள்ளது. அதிமுக கடந்த தேர்தல் முடிவுகளின்படி 20 சதவீதம் வாக்கு வங்கி வைத்துள்ளது. எனவே அதிமுக ஒன்றாக இருக்கிறது உட்கட்சி பிரச்சனை இல்லை என்கிற “Perception” அமைத்தாலே மட்டுமே திமுக மீது உள்ள அதிருப்தியை முழுவதுமாக மக்கள் பரிசீலனை செய்வார்கள்.

ஏனென்றால் அதிமுகவின் வாக்கு வங்கி சமநிலையில் இல்லை. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் வெற்றிக்கான வாய்ப்பு சுத்தமாக இல்லை, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களிலும் இல்லை, கோவை, நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பாஜக வளர துடிக்கிறது. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் பாமக 5% வாக்குவங்கி பெற்றுள்ளது என்றால் அதிமுக 15% பெற்றுள்ளது என்கிற நிலை தான் இருக்கிறது. இதுவே போதும் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்தால் இணைப்பு தேவை இல்லை. ஆனால் மீண்டும் ஆளுகிற கட்சியாக அதிமுக உருவெடுக்கவேண்டும் என்றால் ஒன்றுபட்ட அதிமுக உருவாக்கப்பட வேண்டும்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காலத்திலும் அம்மா காலத்திலும் இருந்தவர்களை ஒன்றிணைத்துவிட்டால் மக்கள் அதிமுக தலைவர்களை சாதிய தலைவர்களாக பார்க்க மாட்டார்கள். எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா கால அதிமுகவாக இரட்டை இலை சின்னம் பொழிவுபெரும் மக்கள் இரட்டை இலைக்கு வாக்களிப்பார்கள். இதைத்தான் என் போன்றவர்கள் வலியுறுத்துகிறோம்.
கே.சி.பழனிசாமி (Ex MP, MLA)
Share on:

கள்ளக்குறிச்சியில் அடுத்த ஷாக்.. ஏழு பேருக்கு எலி காய்ச்சல்.. மிரளும் பொதுமக்கள்.. அறிகுறிகள் என்ன!


கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் ஏற்படுத்திய உயிரிழப்புகளில் இருந்தே அம்மாவட்ட மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்தச் சூழலில் கள்ளக்குறிச்சி மாவட்டம் வசதொரசலூர் என்ற கிராமத்தில் சிலருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. சிறுமி உள்ளிட்ட 7 பேருக்கு எலிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நம்ம ஊரில் இப்போது திடீரென திடீரென ஒவ்வொரு வைரஸ் பாதிப்பு பரவுகிறது. கொரோனாவை கஷ்டப்பட்டுச் சமாளித்துவிட்டோம் என நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் அடுத்தடுத்து வைரஸ் பரவுகிறது.

கேரளாவில் ஏற்கனவே மூளையை உண்ணும் அமீபா அலற விட்டுக் கொண்டு இருக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் சிலருக்கு இப்போது எலிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வசதொரசலூர் என்ற கிராமத்தில் சிலருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், வாந்தி, மயக்கம் என்று பெரும் சிரமத்தை எதிர்கொண்ட அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அறிகுறிகளைப் பார்த்த உடன் அது வழக்கமான காய்ச்சல் இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட மருத்துவர்கள் உடனடியாக ரத்தப் பரிசோதனை எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.

மருத்துவர்கள் அஞ்சியது போலவே ரத்தப் பரிசோதனை ரிப்போர்ட்டில் அவர்களுக்கு எளி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கே அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரே இடத்தில் ஏழு பேருக்கு எலிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்குமார் மருத்துவக் குழுக்களிடம் நோய்ப் பாதிப்பு குறித்துக் கேட்டறிந்தார். மேலும், பின்னர் பாதிப்பு ஏற்பட்ட வீடுகள் உள்ள பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலைமை கேட்டறிந்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இங்கு எலிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள மக்களின் ரத்த மாதிரி எடுத்து ஆய்வு செய்து மேலும் எலிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும். இதை உடனடியாக கட்டுப்படுத்தவில்லை என்றால் மஞ்சள் காமாலை போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உரியச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்” என்றார்.

இந்த எலிக் காய்ச்சல் என்பது ஒரு வகை பாக்டீரியா தொற்றாகும். இது எலிகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. அதாவது இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்படும் எலிகள் மனிதர்களைக் கடித்தால் அல்லது அந்த எலிகளின் கழிவுகளை நாம் சுவாசித்தால் கூட இந்த எலிக் காய்ச்சல் ஏற்படும்.

இந்த எலிக் காய்ச்சல் ஏற்படும் போது உடல் வெப்ப நிலை 40 டிகிரியை தாண்டி காய்ச்சல் ஏற்படும். மேலும், தீவிர தலைவலி, ரத்த அழுத்தம் குறைதல், கண் சிவத்தல், குமட்டல் ஆகியவை கூட ஏற்படும். மேலும், ஒரு நாளில் பல முறை வாந்தி, கண் பகுதியில் இருந்து ரத்தக் கசிவும் ஏற்படும். சில நேரம் நிலைமை மோசமானால் மஞ்சள் காமாலை கூட ஏற்படும் ஆபத்து இருக்கிறது.
Share on:

தமிழ்நாடு: பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை – இதுவரை நடந்தது என்ன?


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் சென்னையில் அவரது வீட்டின் அருகில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை வழக்கில், 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கொலையின் உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வசித்து வருகிறார். இதற்கு அருகிலேயே தனது பழைய வீட்டை இடித்துக் கட்டி வருகிறார். தினமும் மாலையில் அவர் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிடுவது வழக்கம். அதேபோல, இன்றும் அவர் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டுவிட்டு, சிலருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் அவரை அரிவாளாலும் கத்தியாலும் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர். உடனிருந்த இரண்டு பேருக்கும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணியளவில் நடைபெற்றது. உடனடியாக செம்பியம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டு க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். உடனிருந்த இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக வடசென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வடசென்னையின் கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், “தற்போது 8 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இது முதல் நிலை விசாரணைதான்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தினால்தான் கொலை குறித்த முழுமையான காரணம் தெரிய வரும். 10 தனிப்படைகளை அமைத்து நாங்கள் விசாரித்து வருகிறோம். கொலையில் சில கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் கொல்லப்பட்ட பிஎஸ்பியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியும் இந்த வழக்கை மத்தியப் புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரி அவரது ஆதரவாளர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.

இதனால் பரபரப்பான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் போக்குவரத்து அரை மணிநேரத்திற்கும் மேலாகத் தடைபட்டது. அவர்களுடன் காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதற்கு அவர்கள் இணங்காத நிலையில், அனைவரையும் கைது செய்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே திரண்ட அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான காலை வேளையில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே போக்குவரத்து ஒன்றரை மணிநேரத்துக்கும் மேலாகத் தடைபட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கின் உடல்கூறாய்வு முடிந்த நிலையில், அவரது உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்தனர். அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவரது உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சரணடைந்தவர்களை உண்மைக் குற்றவாளிகளாகக் கருதக்கூடாது. தீர விசாரித்து உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஆம்ஸ்ட்ராங் கொலையைத் தொடர்ந்து பெரம்பூர் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மொத்தம் ஆறு பேர் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படுகிறது. அந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைச் சேகரித்துள்ள காவல்துறை, தனிப்படை அமைத்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.
Share on:

பாம்பு கடித்து பலியான விவசாயி குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் இழப்பீடு வழங்க ஹைகோர்ட் உத்தரவு.


ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்தால், பாம்பு கடிக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் பலியான விவசாயியின் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கப்பட வேண்டிய சுகாதார நிலையம் எப்படி பூட்டியிருந்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் புதுராஜ கண்டிகை கிராமத்தை சேர்ந்த முரளி என்ற விவசாயி, அவருடைய சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 6 ம் தேதி விவசாயம் செய்து கொண்டிருந்த போது, முரளியை பாம்பு கடித்தது. இதையறிந்த அவரது குடும்பத்தினர், அருகில் உள்ள கண்ணன் கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் திருவள்ளுர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

காலதாமதமாக அழைத்து சென்றதால் முரளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 24 மணி நேரமும் இயங்க வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்தால் தான் தன்னுடைய கணவரை பலியானதாக கூறி அவரின் மனைவி அருணா வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில் கண்ணன் கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இழப்பீடாக 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்றும் குழந்தைகளின் கல்வி செலவையும் அரசு ஏற்க வேண்டும் என முரளியின் மனைவி அருணா கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பலியான முரளியின் மனைவி அருணாவுக்கு அரசு துறையில் தற்காலிக அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட்டார்.

மேலும் அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவுக்காக ரூ 2 லட்சத்தை அவர்களுடைய வங்கி கணக்கில் 2 வாரத்தில் அரசு செலுத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Share on:

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்தவர் பலி.. இருவருக்கு தீவிர சிகிச்சை!


விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன், முருகன் மற்றும் சிவச்சந்திரன். இவர்கள் மூவரும் சேர்ந்து கடந்த சனிக்கிழமை (ஜூன் 29) அன்று கள்ளச்சாராயம் குடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜெயராமன், முருகன் மற்றும் சிவச்சந்திரன் ஆகிய மூவருக்கும் திடீரென வயிற்று வலி மற்றும் எரிச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து, உடனடியாக அவர்களது உறவினர்கள் மூவரையும் அருகில் உள்ள இருவேல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு, அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் முருகன் மற்றும் சிவச்சந்திரன் ஆகியோர் சற்று உடல் தேறிய நிலையில் பொது வார்டிற்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால், ஜெயராமன் என்பவருக்கு உடல்நிலை அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளானதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் இன்று (ஜூலை 04) அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து ஜெயராமனின் மருமகன் அன்பழகன் என்பவர் கூறும்போது, “கடந்த சனிக்கிழமை எனது மாமனாருக்கு திடீரென உடல்நல கோளாறு என்று போன் வந்தது. அதன் அடிப்படையில், அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம்” என்று தெரிவித்தார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் கூறும்போது, “ஜெயராமன், முருகன் மற்றும் சிவச்சந்திரன் இவர்கள் மூவரும் புதுச்சேரியில் இருந்து வாங்கிவந்த கள்ளச்சாராயத்தை குடித்ததாக தெரிய வந்துள்ளது.

மேலும், இவர்கள் மூன்று பேரில் புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி வந்தது முருகன் தான் என்பதும் தெரிய வந்துள்ளது. ஆகவே இதன் அடிப்படையில், முருகன் மீது வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

இதற்கிடையில் தான், சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இது குறித்தும் விசாரணை நடத்தப்படும்” என தெரிவித்தார்.

மேலும், கள்ளச்சாராயம் குடித்து மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் என்பவர் தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் விழுப்புரம் பகுதியில் அதிகம் பேசுபொருளாகியுள்ளது.
Share on:

டாஸ்மாக் கடைகளில் 90 மில்லி மதுபாட்டில்கள்: தமிழ்நாடு அரசு அனுமதி; தீபாவளிக்கு வருமானம் அதிகரிக்க வழியா?


கள்ளச்சாரயம் குடித்து 67 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், டாஸ்மாக் கடையில் 90 மல்லி மதுபாட்டிகள் விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளில் 90 மில்லி (கட்டிங்) மது பாட்டில்களை விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை குடித்து 60-க்கு மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனாலும் தற்போது பூரண மதுவிலக்கு அமல்படுத்தும் சூழ்நிலையில் தமிழ்நாடு இல்லை என்று அமைச்சர் முத்துச்சாமி சட்டசபையில் தெரிவித்திருந்தார்.

மேலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால், கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று கூறி சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்திருந்தார். இதனிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் டாஸ்மாக் கடைகளில் 90 மில்லி மதுபாட்டிகள் விற்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பல உள் விவாதங்களுக்குப் பிறகு, சட்டப்பூர்வ கொள்முதல் மற்றும் மது விற்பனையில்90 மில்லி மது பாட்டில்களை விற்க அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுள்ளது டாஸ்மாக் நிர்வாகம்.

தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள, சில அண்டை மாநிலங்கள் டெட்ரா பாக்கெட்டுகளில் குறைந்த அளவிலான மதுபானங்களை விற்பனை செய்து வரும் நிலையில், டாஸ்மாக் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. மதுபான உற்பத்தியாளர்களுடனான சந்திப்புக்குப் பிறகு, டாஸ்மாக் நிறுவனம், இந்த ‘கட்டிங்’ பாட்டில்களின் விலை நிர்ணையம் குறித்து தெரிவித்துள்ளது. அதன்படி, 90 மில்லி பிராண்டின் விலை சுமார் 80 ஆக இருக்கலாம் (180ml பாட்டில், இப்போது கிடைக்கும் சிறியது, விலை சுமார் 140 ஆகும்).

“பெரும்பாலும், இந்த தீபாவளிக்கு 90 மில்லி மதுபாட்டில்கள் தங்களுக்கு கிடைத்துவிடும் என்றும், இதனை தயாரிக்க, மது உற்பத்தியாளர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் கால அவகாசம் கோரியுள்ளதாகவும், டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 90 மில்லி பாட்டில்கள் மற்றும் டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானம் விற்பனை செய்யப்படுவது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்களை சேகரித்து இந்த முடிவை எடுத்துள்ளனர். தெலுங்கானா போன்ற மாநிலங்களில், மொத்த மதுபான விற்பனையில் பெரும்பகுதி 90 மில்லி மது பாட்டில்கள் மூலம் கிடைப்பதாக கூறப்படுகறது.

அதே சமயம் கேரளா போன்ற மாநிலங்களில், அவை அதிகமாக விற்க்கப்படவில்லை என்று ஒரு அரசாங்க அதிகாரி கூறினார். மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தி கள்ளக்குறிச்சி பகுதியில், 67 மரணமடைந்த சம்பவத்திற்கு பிறகு, இந்த ‘நிப் பாட்டில்களை’ அறிமுகப்படுத்த மாநில அரசின் நடவடிக்கை வேகமாக நடந்து வருகிறது.
Share on:

அதிகரிக்கும் நாய் கடி சம்பவங்கள்! நாய்களை பிடிக்க கூடாது என மிரட்டல்! சென்னை ஐகோர்ட்டில் பரபர வழக்கு.


சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள மெட்ரோ சோன் அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்தக் கோரிய விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என சென்ன மாநகராட்சி, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சமீப காலங்களாகத் தெரு நாய்கள் குழந்தைகளைத் துரத்திக் கடிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. குறிப்பாக சென்னையில் நாய்க் கடி சம்பவங்கள் மிகப் பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது.

வீதியில் நடந்து செல்வோரை கூட நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இதற்கிடையே சென்னை கோயம்பேட்டில் கட்டப்பட்டுள்ள ‘மெட்ரோ சோன்’ என்ற மிகப் பெரிய குடியிருப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இரவு பகல் பாராமல் சுற்றித் திரிந்து அங்குச் செல்பவர்களை விரட்டி கடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த தெரு நாய்களை அப்புறப்படுத்தக்கோரி அந்த குடியிருப்பில் வசிக்கும் ஷபீனா பாத்திமா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தடுப்பூசி போடப்படாத இந்த நாய்களைப் பிடித்துச் செல்ல மாநகராட்சி ஊழியர்கள் வந்தாலும் சமூக ஆர்வலர் எனக் கூறிக் கொள்ளும் சிலர், நாய்களைக் கொண்டு செல்ல ஊழியர்களைத் தடுப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நாய்களைத் துன்புறுத்துவதாகக் கூறி ப்ளு க்ராஸ் அமைப்பு மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என மாநகராட்சி ஊழியர்களை அவர்கள் மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சிக்குக் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. சென்னை மாநகராட்சி தரப்பில், மனுதாரரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை 8 வாரங்களுக்குத் தள்ளி வைத்தனர்.
Share on:

விஏஓ முதல் தாசில்தார் வரை.. லஞ்சத்தை சட்டம் ஆக்கிடுங்க.. திருநெல்வேலியில் இளைஞர் வெளியிட்ட வீடியோ


கூட்டு பட்டாவில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தேன், அதற்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுகிறாங்க.. எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேக்குறாங்க.. தயவு செய்து லஞ்சத்தை சட்டம் ஆக்கி விடுங்கள் என்று வருவாய்த்துறைக்கு எதிராக திருநெல்வேலியைச் சேர்ந்த கண்னன் என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

பட்டா வாங்கும் விவகாரத்தில் விஏஓ முதல் நில அளவையார், தாசில்தார் வரை யாருமே லஞ்சம் கேட்கக்கூடாது என்று அரசு கடுமையாக உத்தரவிட்டுள்ளது. மேலும் பட்டா பெயர் மாறுதல், பத்திரப்பதிவு முறை போன்றவற்றில் பல்வேறு விஷயங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன. விரைவில் ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கும் அளவிற்கு நிலைமை வரப்போகிறது.

பல லட்சம் கடன் வாங்கி நிலம் அல்லது வீடு வாங்குவோர் பத்திரம் முடிக்கவும், பட்டா வாங்கவும் கையூட்டு கொடுக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்க அரசு இது வரை ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஆனாலும் ஒரு சில இடங்களில் விஏஓக்கள், நகராட்சி ஊழியர்கள், தாசில்தார்கள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் உள்ளது. வருவாய் துறையில் பணியாற்றும் சில ஊழியர்கள் லஞ்சம் கொடுத்தால் தான் பணிகளை முடித்து தருவாகவும் குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் கண்ணநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஒருவர் கண்ணன் என்பவர் வருவாய்த்துறை அதிகாரிகள் கூட்டு பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் கேட்பதாகவும், அதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில் கண்ணன் கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே, வருவாய்த்துறை என்ற துறை இருக்கிறது. வருவாய்த்துறை ஆபிஸ்களில் காலை வைத்தாலே லஞ்சம் கேட்குறாங்க. லஞ்சம், லஞ்சம், எதற்கெடுத்தாலும் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. நான் கூட்டு பட்டாவில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து இருந்தேன்.. அதற்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார்கள். அதற்கு எல்லா ஆவணங்களும் சரியாக இருப்பதால் நான் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று உறுதியாக கூறினேன்.

இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், அந்த புகார் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. கடனை வாங்கி நான் இடத்தை வாங்கினால், இவர்களுக்கு லஞ்சம் கொடுத்து தாழ முடியாத நிலை இருக்கிறது. முதல்வர் அவர்களே, தயவு செய்து லஞ்சத்தை சட்டம் ஆக்கி விடுங்கள், இல்லாவிட்டால் லஞ்சம் கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்” என வீடியோவில் கண்ணன் கூறினார்.

கண்ணன் என்பவரின் இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள சேரன்மகாதேவி உதவி ஆட்சியர், இந்த புகார் தொடர்பாக இரு தரப்பினரிடைய விசாரணை நடந்து வருகிறது. வழக்கு விசாரணையின் இறுதி ஆணையின் படியே பட்டா மாறுதல் வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.
Share on: