ஆன்லைன் ரம்மியின் தொடரும் காவு வாங்கும் படலம்!! பணத்தை இழந்த விரக்தியில் தனியார் வங்கி ஊழியரின் விபரீத முடிவு!!


தற்போது தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டு மோகம் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரையும் இந்த ஆன்லைன் விளையாட்டுகள் விட்டு வைக்கவில்லை. கடந்த ஆண்டுகளில் சிறுவர்கள் ஏராளமானோரின் உயிரிழப்புக்கு மற்றும் மனநிலை மாறுதலுக்கு முக்கிய காரணமான பப்ஜி விளையாட்டு அரசால் தடை செய்யப்பட்டது.

சிறுவர்களை போல இளைஞர்கள் ஆன்லைன் ரம்மிக்கு பலர் அடிமையாகி உள்ளனர். இதில் பணத்தைக் கட்டி விளையாடிய பலர் பணத்தை இழந்த மன உளைச்சலில் தற்கொலை செய்து வருவதும் தற்போது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை செய்த போதும் இதில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்வது குறைந்தபாடில்லை.

இதே போல சங்கரன்கோவில் அருகே தனியார் வங்கி ஊழியர் ஒருவர் ரம்மியில் பணம் இழந்த விரக்தியில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதுபற்றி கூறப்படுவதாவது,

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே வசிப்பவர் மாரி செல்வம். இவர் தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் மாரி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அடிமையானதாக தெரிகிறது. இவர் அதில் சுமார் 10 லட்சம் வரை இழந்துள்ளார்.

இதன் காரணமாக குடும்பத்தினர் கண்டிக்கவே மன வருத்தத்தில் இருந்த இருந்த அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆன்லைன் விளையாட்டால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Share on: