
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளி சதீஷுக்கு, தூக்கு தண்டனை விதித்தும் 35 ஆயிரம் அபராதம் விதித்தும் சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், அபராத தொகை 35 ஆயிரம் ரூபாயில் 25 ஆயிரம் ரூபாயை பலியான சத்திய பிரியாவின் சகோதரிகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும், தமிழக அரசின் இழப்பீட்டு நிதியத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் மாணிக்கம். இவருடைய மகள் சத்யபிரியா. அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் . இவர் சத்யபிரியாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
இதனால் அவ்வப்போது சத்யாவை நேரில் சந்தித்து தன்னை காதலிக்குமாறு சதீஷ் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது. இப்படித்தான் கடந்த 2022 அக்டோபர் 13 ஆம் தேதி கல்லூரிக்கு செல்ல கல்லூரிக்குச் செல்ல சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்திற்கு சத்யபிரியா வந்தார்.
அப்போது அங்கு சதீஷும் வந்தார். ரயில் வரும் வரை காத்திருந்த சத்யபிரியாவிடம் போய் தன்னை காதலிக்குமாறு சதீஷ் வற்புறுத்தியுள்ளார். அதற்கு சத்யபிரியா என்னால் உன்னை காதலிக்க முடியாது. என் பின்னால் சுற்றுவதை நிறுத்திவிடு” என சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், சத்யபிரியாவை, தாம்பரம் சென்ற மின்சார ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக சதீஷ் கைது செய்யப்பட்டார்.
சிபிசிஐடி விசாரித்த இந்த வழக்கு தொடர்பாக, சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை நீதிபதி ஸ்ரீதேவி விசாரித்தார். சிபிசிஐடி தரப்பில் 70 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டனர். அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்ததை அடுத்து, சதீஷை குற்றவாளி என அறிவித்து டிசம்பர் 27ம் தேதி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
தண்டனை விவரங்கள் குறித்த விசாரணைக்காக வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளி சதீஷ், புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு, ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் தண்டனை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு வயதான பெற்றோர் இருப்பதாலும் தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாலும் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என சதீஷ் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு குற்றவாளிக்கு தூக்கு தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அபராத தொகை 35 ஆயிரம் ரூபாயில் 25 ஆயிரம் ரூபாய் பலியான சத்திய பிரியாவின் சகோதரிகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும், தமிழக அரசின் இழப்பீட்டு நிதியத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த தீர்ப்பை உறுதி செய்வதற்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். சத்யாவின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சத்யாவின் தாயாரும் உயிரிழந்தது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது. சத்யாவின் தங்கையான 8 வயது சிறுமி பெற்றோர் இன்றி நிர்கதியாக நிற்கும் நிலையில் அவருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குழுவில் இணைய