தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!


தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையிலும், கோவையிலும் உள்ள மார்ட்டின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதன் தொடர்ச்சியாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், சிக்கிம், மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் லாட்டரி விற்பனை சில விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த லாட்டரி விற்பனையில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும் கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறை மார்ட்டின் மீது வழக்குப்பதிவு செய்தது. மார்ட்டின் மீது வருமானவரித்துறை மற்றும் அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2019ஆம் ஆண்டு லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

2009 – 2010-ம் ஆண்டு காலகட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரி விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாயை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மாற்றி முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவரை மார்ட்டினுக்குச் சொந்தமான 908 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் வருமான வரித்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காலையிலிருந்து நடைபெற்று வரும் சோனையில் 10 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனை நிறைவடைந்தால் மட்டுமே என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றபட்டன என்ற விபரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முறையாக வருமான வரி செலுத்தியுள்ளார்களா?, வரி ஏய்ப்பு செய்துள்ளார்களா என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 4ஆம் தேதி வரை 4 நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி காரமடை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகே உள்ள குட்டையில் காசாளர் பழனிச்சாமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on: