
வணிக நோக்கத்திற்காக (பைக் டாக்ஸி) பயன்படுத்தப்படும் பைக்குகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
பெரு நகரங்களில் போக்குவரத்து சிக்கலை தவிர்க்கவும், குறைந்த கட்டணத்தில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரவும் பைக் டாக்ஸிகள் மிகவும் உதவியாக இருக்கின்றன. சென்னையிலும் தமிழகத்தின் இதர நகரங்களிலும் பைக் டாக்ஸிக்கு மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. இது கிக் எனப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை பெரும் அளவில் உயர்த்தியிருக்கிறது. ஆனால் மறுபுறம் ஆட்டோ மற்றும் கார் டாக்ஸி டிரைவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மட்டுமல்லாது பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது ஏராளமான புகார்கள் வந்தன. குறிப்பாக பெண் பயணிகளிடம் சில பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட தொடங்கினர். ஆபத்தான முறையில் பயணிப்பது, விபத்தை ஏற்படுத்தும் வகையிலும், மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனத்தை இயக்குவது போன்ற புகார்களில் பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் தொடர்ந்து சிக்கினர். இதனையடுத்து இதற்கு உரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று புகார்கள் எழுந்தன.
ஆட்டோவைவிட கட்டணம் குறைவாக இருப்பதால், ஆட்டோ ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. பைக் டாக்ஸியை கைவிட வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர். போராட்டங்கள் தீவிரமடையும்போது பைக் டாக்ஸி முறை நிறுத்தப்படும் என்று அமைச்சர்கள் அறிவித்து வந்தனர். ஆனால் இது குறித்த உறுதிப்பூர்வமான உத்தரவு எதுவும் வெளியாகாமல் இருந்தது. இப்படி இருக்கையில் திடீரென பைக் டாக்ஸி குறித்து அதிரடி அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது வணிக நோக்கத்திற்காக (Bike-Taxi) பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மண்டல மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டு மண்டலம் வாரியாக தினசரி மாலை 7 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
வாடகை வாகனத்தில்தான் பயணிகளை ஏற்ற முடியும். தொழில்முறைக்கு வாடகை வாகனங்களைதான் பயன்படுத்த வேண்டும். இந்த வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால், பைக் டாக்ஸிக்கு பயன்படுத்தப்படுவது சொந்த வாகனங்களாகும். சொந்த வாகனத்தை தொழில்முறையாக வாடகைக்கு பயன்படுத்தவது போக்குவரத்து சட்டத்தின்படி குற்றமாகும். எனவேதான் பைக் டாக்ஸி முறைக்கு எதிரான வாதங்கள் பலமானதாக இருக்கின்றன.
குழுவில் இணைய