விளம்பரம் பார்த்தால் பணம் எனக் கூறி மோசடி? My V3 Ads நிறுவனர் சக்தி ஆனந்த் போலீஸ் விசாரணைக்கு ஆஜர்!


போனில் விளம்பரம் பார்த்தால் வருமானம் கிடைக்கும் என ஆசைகாட்டி காட்டி லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றி வருவதாக மை வி3 நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜர் ஆனார் MyV3 Ads நிறுவன அதிபர் சக்தி ஆனந்த்.

மொபைல் ஆப்பில், விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும் என ஏமாற்றி லட்சக்கணக்கானோரிடம் நூதன MLM மோசடி நடைபெறுவதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், கடந்த ஜனவரி 19ஆம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, MyV3 Ads நிறுவனத்திற்கு ஆதரவாக வாடிக்கையாளர்கள் அண்மையில் கோவையில் திரண்டனர்.

கடந்த திங்கட்கிழமை அன்று, கோவை நீலாம்பூர் எல்&டி பைபாஸ் பகுதியில் சுமார் 5 ஆயிரம் பேர் திரண்டனர். வெளியூர்களில் இருந்தும் பேருந்துகளில் வந்து மக்கள் கோவையில் குவிந்தனர். தங்களுக்கு வருவாய் வழங்கும் ஆன்லைன் செயலிக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறி ஆயிரக் கணக்கானோர் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரூ.300 கட்டி, ஆப்பில் சேர்ந்து, விளம்பரம் பார்த்தால், தினரி ரூபாய் 4 வங்கி கணக்கில் ஏறும். முதலீட்டு தொகை அதிகரிக்க அதிகரிக்க வருமானமும் அதிகரிக்கும். ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் கட்டி ஆயுர்வேத கேப்சூல்கள் வாங்கிக் கொள்ளலாம். அப்போது விளம்பரம் பார்த்தால் தினசரி ரூ.400 வருமானம் கிடைக்கும். மேலும், நீங்கள் மற்றவர்களை உறுப்பினராகச் சேர்த்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் கூறி MyV3 Ads நிறுவனம் லட்சக்கணக்கானோரிடம் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் பார்க்கலாம் என ஆசை காட்டி மோசடியில் ஈடுபட்டதாக MyV3 Ads எம்.டி சக்தி ஆனந்த் மீது 5 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்காக, மை வி3 ஆட்ஸ் நிறுவனர் சக்தி ஆனந்த் கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆனார். தனது வழக்கறிஞருடன் சென்று ஆஜர் ஆனார் சக்தி ஆனந்த்.

இதற்கிடையே, கோவை MyV3 Ads நிறுவன அதிபர் சக்தி ஆனந்த் மீது, 16 பேர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். சக்தி ஆனந்த் ஏற்கனவே நடத்திய V3 ஆன்லைன் டிவி மூலம் மோசடியில் ஈடுபட்டு தங்களை ஏமாற்றியதாக புகார் தெரிவித்துள்ளனர்.
Share on:

மல்லிகையில் மலர்ந்த அறிஞர் அண்ணா : கோவை இளைஞரின் அசத்தல் ஓவியம்.


சமத்துவத்தை நிலைநாட்ட அவர், ஏழை எளியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, திராவிட அரசியலை ஆட்சி அரியணையில் ஏற்றிய முதல் தலைவர் அண்ணா. பேரறிஞர் அண்ணாவின் “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு” என்ற வாசகத்தை நினைவு கூர்ந்து, மல்லிகையில் பேரறிஞர் அண்ணாவின் ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார்.

தமிழ்நாட்டின் முன்னால் முதல்வர், திமுகவை தோற்றுவித்தவரான, பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று. தமிழ்நாடு இன்று ஒட்டுமொத்த இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, மேலை நாடுகளுக்கு இணையான கல்வி, தொழில், வேலைவாய்ப்பில் முன்னேறிய மாநிலமாக வருகின்றது. அதற்கான அடித்தளமிட்ட தமிழ்நாட்டின் அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணா என்றால் மிகையல்ல.

சமத்துவத்தை நிலைநாட்ட அவர், ஏழை எளியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, திராவிட அரசியலை ஆட்சி அரியணையில் ஏற்றிய முதல் தலைவரான அண்ணா, ஒரு தத்துவ ஞானி. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒற்றுமை நல்லிணக்கத்தை போதித்த பேரறிஞர் அண்ணா, எதிர் தரப்பின் கருத்துக்கும் மதிப்பளிக்கும் விதத்தில், மாற்றான் தோட்டத்து மள்ளிகைக்கும் மனம் உண்டு என்றார்.

இன்றளவும் நமக்கு தேவைபடும் இந்த தத்துவத்தை தந்த தத்துவ ஞானியாக போற்றப்படுகின்ற பேரறிஞர் அண்ணாவின் நினைவை போற்றும் வகையில், கோவையை சார்ந்த ஓவியர் யு.எம்.டி. ராஜா, மல்லிகை பூவில் அண்ணாவின் ஓவியத்தை வரைந்து மலர் அஞ்சலி செய்துள்ளார். மல்லிகையில் மலர்ந்த அண்ணாவின் முகம் போலவே, அவரின் தத்துவமும் மனிதர்களின் மனங்களில் விசட்டும் என்பது அனைவரின் எண்ணமாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Share on:

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை.


தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்திவருகிறது.

சட்டவிரோதமாக ஆயுதம் தயாரிக்கப்பட்டது தொடர்பான ஒரு வழக்கு தொடர்பாகவே இந்த சோதனைகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள பல இடங்களில் பிப்ரவரி இரண்டாம் தேதி அதிகாலை முதல் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இருக்கும் விஸ்வநாதபேரியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் என்பவர் வீட்டில் 5 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். இவர் 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.

சோதனையின் முடிவில் 3 செல்போன்கள், புத்தகங்களை கைப்பற்றிய என்ஐஏ அதிகாரிகள் வரும் 7ஆம் தேதி சென்னை தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு மதிவாணனுக்கு சம்மன் கொடுத்து விட்டு சென்றுள்ளனர்.

திருச்சி சண்முகா நகரில் வசிக்கும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகனின் வீட்டிற்கு அதிகாலையில் வந்த என்ஐஏ அதிகாரிகள், சில மணி நேரம் சோதனை நடத்திவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர்.

அதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி பிரமுகரான விஷ்ணு பிரதாப் என்பவரது வீட்டிலும் அதிகாலை ஐந்து மணி முதல் என்ஐஏ சோதனை நடத்திவருகிறது. இவர் நாம் தமிழர் கட்சியில் தகவல் தொழில்நுட்ப பாசறையின் மாவட்ட நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். யு டியூப் சானல் ஒன்றையும் நடத்திவருகிறார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் ஆலாந்துறை ஆர்.ஜி. நகரில் வசிக்கும் ரஞ்சித் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. காளப்பட்டியில் முருகன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

அதேபோல, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான இடும்பாவனம் கார்த்திக்கு, விசாரணைக்கு ஆஜராகும்படி கட்சி அலுவலக முகவரிக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி அவர் ஆஜராக வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
Share on:

கல்வியில் டாப் தமிழ்நாடு! நாமதான் நம் 1; ஆனா சமூகநீதி?


இந்தியாவிலேயே மாணவர்கள் பட்டப்படிப்பில் சேர்வதில் தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது.உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு 47% பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இது தேசிய சராசரியான 28.4% ஐ விட அதிகமானதாகும்.

2021-2022 ஆண்டுக்கான GER அறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் Aishe (All India Survey on Higher Education) வெளியிட்டுள்ளது. அதன்படி ஜிஇஆர் (Gross Enrolment Ratio) அதாவது உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை விகிதமானது தமிழ்நாட்டில்தான் அதிகமாக உள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

ஒரு மாநிலத்தில் 18 முதல் 23 வயதுக்குள்ளாக உள்ள மக்கள் தொகையைக் கணக்கிடுவார்கள். அதில் எத்தனைப் பேர் உயர்கல்வி பெறுகிறார்கள் என்பது அளவிடுவார்கள். அதாவது பள்ளிப்படிப்பை முடித்ததும் கல்லூரி படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள்? அதைக் கணக்கிடுவதுதான் இந்த Gross Enrolment Ratio. இதன் சுருக்கமாக ஜிஇஆர்.

அப்படி நடத்தப்பட்ட உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை கணக்கெடுப்பில் (2021-22) அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இந்திய அளவில் தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்து சாதனைப் படைத்துள்ளது. இதன் மூலம் கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்பது நிரூபணமாகி உள்ளது.

2017 -18 ஆண்டுக்கான அறிக்கையின்படி உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 46.2% ஆக இருந்தது. அதே பெண்களின் எண்ணிக்கை 47.7% ஆக இருந்துள்ளது. இந்த நிலை 2019-20க்கான ஆண்டில் மளமளவென உயர்ந்து உச்சத்தை எட்டி உள்ளது. இந்த ஆண்டில் ஆண்களின் எண்ணிக்கை 48.1% ஆகவும் பெண்களின் எண்ணிக்கை 49.9% ஆக இருந்துள்ளது.

அதன்பிறகு கொரோனா பரவல் காரணமாகக் கல்வி கற்பதில் மாணவர்களுக்குப் பெரிய நெருக்கடி ஏற்பட்டது. ஊரடங்கு காரணமாகப் பல தடைகள் வந்தன. ஆனாலும் தமிழ்நாட்டில் இந்தக் கல்வியாண்டில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து 45.4% ஆகவும் பெண்களின் எண்ணிக்கை 48.6% ஆகவும் இருந்தது.

இந்நிலையில் 2021-22 ஆண்டுக்கான கல்வியாண்டில் மக்கள் தொகை அடிப்படையில் உயர்கல்விக்கான மாணவர் சேக்கை விகிதத்தில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது இந்தக் கல்வியாண்டில் 46.8% மாணவர்களும் 47.3% மாணவிகளும் உயர்கல்வியில் சேர்ந்துள்ளன என்று ஜிஇஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடங்களில் உள்ள மாநிலங்கள் பட்டியல்: தமிழ்நாடு 47.0% ஆந்திரப் பிரதேசம் 36.5% கர்நாடகா 36.2% மகாராஷ்டிரா 35.3% மத்தியப் பிரதேசம் 28.9% ராஜஸ்தான் 28.6% மேற்கு வங்கம் 26.3% உத்திரப் பிரதேசம் 24.1% குஜராத் 24.0% பீகார் 17.1% தமிழ்நாடு 47.0% என்றால் மாணவர்கள் எத்தனை?

அதாவது 2017இல் உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை, 37,62,200 பேர். பெண்களின் எண்ணிக்கை 35,70,000 பேர். ஆக மொத்தம் அந்த ஆண்டில் உயர்கல்வியில் சேர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 73,32,200 பேர். இது அப்படியே 2019இல் குறைந்துள்ளது. அந்த ஆண்டில் இரு பாலரும் சேர்த்து உயர்கல்வியில் சேர்ந்தவர்கள் 71,82,600 பேர்தான்.

இந்நிலை 2020இல் கொரோனா காரணத்தால் இன்னும் குறைந்துள்ளது. இந்த ஆண்டில் ஆண்கள் 36,60,800 பேர், பெண்கள் 34,47,000 பேர். ஆக மொத்தம் 71,07,800 பேர். இறுதியாக எடுக்கப்பட்ட 2021 கணக்கெடுப்பின்படி உயர்கல்வியில் இணைந்தவர்களின் மொத்த 70,33,000 பேர்தான். இது கடந்த 2017விட மிகக் குறைவு.

தமிழ்நாட்டில் உயர்கல்வி சேரும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் இடத்தை இந்தக் கல்வியாண்டில் பிடித்திருந்தாலும், கடந்த 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிலைமை மோசமாகி உள்ளது.

தமிழக அரசு உயர்கல்வி பெறும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியும் 2021 கல்வியாண்டில் மொத்தம் 34,06,000 பெண்கள்தான் உயர்கல்வியில் இணைந்துள்ளனர். ஆண்களோ 36,27,000 பேர் சேர்ந்துள்ளனர். சமூகநீதியைக் கல்வியில் நிலைநாட்டத் தமிழ்நாடு இன்னும் அதிகம் உழைக்க வேண்டி உள்ளது.
Share on:

குஷியில் டாஸ்மாக்.. விலையால் “தள்ளாடுது” மதுபாட்டில்.. கொட்டபோகும் பணம்.. நாளை தமிழக அரசு அறிவிப்பு?


டாஸ்மாக் மதுபானங்களின் விலைகள் உயரக்கூடும் என்ற தகவல்கள் பரபரத்த நிலையில், அதுகுறித்த கூடுதல் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மதுவிலக்கு என்பது கனவாகவே போய் கொண்டிருக்கும் நிலையில், மற்றொருபுறம், டாஸ்மாக்குகள் மூலம் கிடைக்கும் வருவாய் அரசுக்கு பெருகி வருகிறது. மொத்த நிதி ஆதாரத்தில் 3.ல் ஒரு பங்கு வருமானம், இந்த டாஸ்மாக், மதுக்கடைகள் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் இப்போது மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது.. இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை தினங்களில் அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாகின்றன.

இந்நிலையில், அரசின் நிதிச்சுமையை குறைப்பதற்காகவும், வருவாயை பெருக்குவதற்காகவும், டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த போவதாவும், டாஸ்மாக் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்தன.

காரணம், மூலப்பொருட்களின் விலை உயர்வால், மதுபானங்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று மதுபான ஆலை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்களாம்.. அதனால்தான், குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்ற அளவில் உயர்த்த முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. மது பாட்டிலுக்கான விலை நிர்ணயம் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், மதுபானங்களின் புதிய விலை உயர்வு நாளை முதல் அதாவது பிப்ரவரி 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சொல்கிறார்கள்.

அதன்படி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட சாதாரண மது வகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்கிறது. ஆஃப் பாட்டில் ரூ.20 அதிகரிக்அதிகரிக்கும், முழு பாட்டில் விலை ரூ.40 கூடும்.. பிரீமியம் மதுபாட்டில்கள் குவார்ட்டர் பாட்டில் ரூ.20-ம், முழு பாட்டில் ரூ.80 வரை விலை அதிகரிக்கிறது. அனைத்து வகையான பீர் விலை 10 ரூபாய் உயர்வதாக தெரிகிறது.

இப்படிப்பட்ட சூழலில், டாஸ்மாக் குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது.. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நாளை வெளியாகும் என்கிறார்கள்.. இந்த விலை நிர்ணயம் அமலுக்கு வந்தால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு, 2,400 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

கடந்த, 2022 – 23ல் மது வகைகள் மீதான ஆயத்தீர்வை வாயிலாக தமிழக அரசுக்கு 10,401 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்ததாம்.. அதேபோல, மதிப்பு கூட்டு வரியாக, 33,697 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. ஆக மொத்தம், 44,098 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. நாளை முதல் மதுபானம் விரல உயரும் பட்சத்தில், 2400 கோடி ரூபாய் கூடுதலாக கிடைக்கும் என கணக்கீடப்படுகிறதாம். இதனால் குடிமகன்கள் கலங்கி போயுள்ளனர்..

நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, இத்தனைக்கும் டாஸ்மாக் கடைகளை குறைத்தாகிவிட்டது, டாஸ்மாக் நேரத்தையும் குறைத்தாகிவிட்டது.. ஆனாலும், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு உள்ள கிராக்கி எகிறி கொண்டே போகிறது. ஆக.. இதெல்லாம் பார்த்தால், மதுவிலக்கு என்பது நமக்கு கடைசிவரை கனவுதான் போல??
Share on:

யூடியூப் சேனல் மூலம் ஆசையை தூண்டி பொதுமக்களிடம் நூதன மோசடி: விளம்பரம் பார்த்தாலே பணமோ பணம் கோவை நிறுவனம் மீது போலீஸ் வழக்கு: உரிமையாளருக்கு ஆதரவாக 10 ஆயிரம் பேர் குவிந்ததால் பரபரப்பு!


விளம்பரம் பார்த்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அளிக்கப்பட்ட புகாரில் கோவை தனியார் நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அந்த தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக 10 ஆயிரம் பேர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கோவை மாநகர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

நான் சமூக வலைத்தளங்களில் சைபர் குற்றங்கள் தொடர்பாக பார்த்து கொண்டிருந்தபோது, அதில் யூ டியூப் ஒன்றில் தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பர வீடியோவை பார்த்தேன். அந்த வீடியோவில் ரூ.5 முதல் ரூ.1,800 வரை சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் அந்த விளம்பரத்தில் பல்வேறு நிலைகளில் பல்வேறு தொகைகளை செலுத்தி உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டு இருந்தது. அடிப்படை உறுப்பினராக சேர ரூ.360-லிருந்து ரூ.1,21,260ம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் தொகைகளுக்கு ஆயுர்வேத மாத்திரைகள் மற்றும் ஹெர்பல் பொருட்கள் (இந்த பொருட்களை நிறுவனத்தின் உரிமையாளர் முறையான அனுமதியின்றி தயாரித்து விற்பதாக கூறப்படுகிறது) வழங்கப்படும்.

அவ்வாறு சேர்ந்த நபர்கள் அவர்களுக்கு கீழ் மேலும் புது நபர்களை அறிமுகப்படுத்தும்போது அவருக்கு ஏற்கனவே இருக்கும் உறுப்பினரில் இருந்து பதவி உயர்வு கொடுத்தும், புதிதாக சேரும் நபர்கள் கட்டும் தொகைக்கு ஏற்பவும், தினமும் விளம்பரம் பார்த்தால் அதிக வருமானம் ஈட்டலாம் என்று பொதுமக்களுக்கு பேராசையை தூண்டும் வண்ணம் அந்த விளம்பரம் இருந்தது. அந்த கேப்ஸ்யூலின் தரம் என்ன? என்பதைப் பற்றியோ, அவ்வளவு பெருந்தொகைக்கு வாங்கப்படும் அந்த ஆயுர்வேத பொருட்களை ஒரு சாதாரண மனிதன் என்ன செய்ய முடியும்? என்ற சிந்தனையோ இல்லாமல் அதிக வருமானம் பெற வேண்டி அவற்றை வாங்க பொதுமக்கள் தூண்டப்படுகிறார்கள்.

அவ்வாறு பெருந்தொகை கட்டி சேரும் நபர்களுக்கு விளம்பரம் பார்த்தால் பணம் கொடுப்பதாக கூறுவதில் எந்தவித சாத்திய கூறும் இருப்பதாக தெரியவில்லை. விளம்பரம் பார்த்தால் பணம் கொடுப்பதாக விளம்பரப்படுத்துபவர்கள் மேற்கண்ட ஸ்கீமில் சேருபவர்களுக்கு வருமானத்தை எந்த அடிப்படையில் கொடுப்பார்கள் என்ற எந்த ஒரு விபரமும் அவர்களது இணையதளத்தில் தெளிவாக தெரிவிக்காமல் பொதுமக்களை ஏமாற்ற வேண்டும் என்ற ஒரே கெட்ட நோக்கத்தோடு செயல்படுவதாக தெரிகிறது. மேலும் மருத்துவரின் பரிந்துரையின்றி கொடுப்பது தவறு என்று தெரிந்தும் தருவது சட்டத்திற்கு புறம்பானது.

எனவே மேற்கண்ட நிறுவனத்தில் உறுப்பினராகும் நபர்கள் அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு பல நிலைகளை கொண்ட அந்த நிறுவனத்தில் உறுப்பினராக பெரும் தொகையை செலுத்தி சேர்த்து விடவும் தூண்டப்படுகிறார்கள். மேலும் பொதுமக்களுக்கு ஆசை காட்டி, மருத்துவ துறையால் பரிந்துரைக்கப்படாத மற்றும் உறுதிப்படுத்தப்படாத பொருட்களை பொதுமக்களுக்கு கொடுப்பதாக ஏமாற்றி பெரும் தொகையை வசூலிக்கின்றனர். அந்த நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

அதன்பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் அந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே இந்த நிறுவனத்தின் உரிமையாளர் தமக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் ஒன்று கூட வேண்டும் என யூ டியூபில் வீடியோ பதிவிட்டு இருந்தார். இதையடுத்து கோவை நீலாம்பூர் எல்.அண்டு.டி பைபாஸ் அருகே நேற்று தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலத்தை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக திரண்டனர்.

அவர்கள் பொய் புகாரின் பேரில், நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். அவர்களிடம் போலீசாரும் நிறுவனத்தின் உரிமையாளரும் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர். கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் இந்தியா முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளதாக தெரிகிறது. கோவையில் இந்த நிறுவனத்துக்கு ஆதரவாக திரண்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
Share on:

பொன்முடி தண்டனை நிறுத்திவைப்பா? – முடியவே முடியாது.. DVAC-க்கு அதிரடி உத்தரவு போட்ட உச்ச நீதிமன்றம்!


திமுக ஆட்சி நடந்த 2006 – 2011 காலகட்டத்தில் உயர்கல்வி மற்றும் கனிம வளத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் பொன்முடி. இந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.76 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இவ்வழக்கை விசாரணை செய்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவியை 2016ஆம் ஆண்டு விடுதலை செய்தது. இதனை எதிர்த்து 2017ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கு பல ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தில் விசாரனையில் இருந்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பொன்முடி தரப்பு வருமானத்திற்கு அதிகமாக 64.90 சதவிகிதம் சொத்து சேர்த்தது நிரூபணமாகியுள்ளது என்று தீர்ப்பளித்த…
Share on:

Continue Reading

முல்லை பெரியாற்றில் புதிய அணை – கேரள அரசு திட்டவட்டம்! தமிழக அரசின் நடவடிக்கை என்ன?


முல்லை பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட உள்ளதாக கேரள மாநில அரசு தெரிவித்து உள்ளது. கேரள சட்டப் பேரவை கூட்டத் தொடர் இன்று (ஜன. 25) தொடங்கி வரும் ஜனவரி 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.

அதன்படி கேரள ஆளுநர் முகமது ஆரிப் கான் மாநில கொள்கை அறிக்கையை சட்டப் பேரவை கூட்டத் தொடரில் வாசித்தார். அந்த அறிக்கையில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள 125 ஆண்டுகள் பழமையான முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2018 முதல் 2021 ஆண்டு வரையில் பருவமழை காலத்தில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கையும் குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை கருத்தில் கொண்டு ஆற்றங்கரையோரம் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பு கருதியும், தமிழ்நாட்டின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டும் புதிய அணை கட்ட திட்டமிடப்பட்டு உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய அணையின் கட்டுமானம், நவீன தொழில்நுட்பம் மற்றும் தற்கால கட்டுமானங்களின் நுட்பங்களை கொண்டும் கட்டமைக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பான அனைத்து இடங்களிலும் கேரள அரசு இந்த கருத்தை வெளிப்படுத்தி உள்ளதாகவும், தமிழகத்துடன் இணக்கமான தீர்வுக்கு சாத்தியமான பின் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணை கடந்த 1895 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசு நிர்வகித்து வரும் நிலையில், அணை மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரள அரசு நீண்ட நாட்களாக குரல் கொடுத்து வருகிறது.

முன்னதாக சட்டமன்றத்தில் உரையை வசித்த ஆளுநர் முகமது ஆரிப் கான் அறிக்கையில் உள்ள முதல் பத்தி அனைத்தையும் தவிர்த்து விட்டு கடைசியாக உள்ளவற்றை மற்றும் வாசித்தார். இந்த சம்பவம் சட்டமன்ற உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் அவையில் சிறிது நேரத்திற்கு சலசலப்பு நிலவியது.
Share on:

பல்லடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை வெட்டிய கும்பல் யார்? கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது?


திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவில் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியாளராக உள்ள நேசபிரவு என்பவரை மர்ம நபர்கள் நேற்று நோட்டம் விட்டு கொடூரமாக வெட்டியுள்ளனர். அவர் கடைசியாக போலீசிடம் போனில் உதவி கேட்டபடி பேசிக்கொண்டிருக்கும் போதே வெட்டப்பட்டிருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காமநாயக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நேசபிரபு, இவர் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருகிறார். நேசபிரபு நேற்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் இவரை தொடர்ந்து வேவு பார்த்தபடி சென்றுள்ளனர். நேசபிரபு யார், எந்த ஊர் என்று கேட்டு அவரது தந்தையிடமே தகவல்களையும் விசாரித்துள்ளனர்.

இதனிடையே தன்னை நோட்டம் விடும் மர்ம நபர்கள் குறித்து காவல்துறைக்கு நேசபிரபு தகவல் கொடுத்துள்ளார். தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக போலீசிடம் நேசபிரபு கூறியுள்ளார். அப்போது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. நேரில வந்து புகார் அளிக்குமாறு கூறினார்களாம்.

இதையடுத்து மீண்டும் மர்ம நபர்கள் பின்தொடர பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்குச் சென்று மீண்டும் மீண்டும் காவல்துறையினரின் உதவியை நேசபிரபு கேட்டிருக்கிறார். அப்போது காமநாயக்கன்பாளையம் தலைமை காவலர் கண்ணன் என்பருடன் நேசபிரபு பேசுகையில், “வந்துட்டே இருக்கானுங்க சார்… எவ்ளோ தடவைதான் பாக்றது? பல்லடம் போலீஸ்கிட்டே சொல்லி பிடிக்க சொல்லுங்க சார். எல்லா கேமராலயும் அவங்க முகம் பதிஞ்சிருக்கும். இந்த பெட்ரோல் பங்க் கேமரால கூட இருக்கும். எதுவேணா நடக்கலாம் சார்..எல்லாருக்குமே வயசு 26க்குள்ள தான் இருக்கும். எல்லாமே தமிழ்காரங்கதான்.. இந்திக்காரங்க இல்லை.. என் அப்பாவிடமே அட்ரஸ் கேட்டு போய்ருக்காங்க. ஆறு பேர் இருப்பாங்க..

ஒரு டைம் இல்லை ரெண்டு இல்லை சார்.. இது நாலு தடவை.. இரண்டு பைக்கில் ஹெல்மெட் போட்டு வந்தாங்க… என்றார். அப்போது போலீசார் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறும், இன்ஸ்பெக்டருக்கு அழைக்குமாறும் கூறியுள்ளனர். அப்போது திடீரென அங்கு அந்த கும்பல் வந்ததை பார்த்த நேசபிரபு போலீசிடம், “வந்துட்டாங்க சார்.. வாழ்க்கையே முடிஞ்சது” என காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, 5 கார்களில் வந்த மர்ம கும்பல் நேசபிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதனால் கை, கால், முகம் என உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த செய்தியாளர் நேசபிரபுவை, தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்கு காவல்துறை வேகமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே தாக்குதல் நிகழும் சற்று முன் கூட போலீசிடம் செய்தியாளர் பாதுகாப்பு கோரும் செல்போன் ஆடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே செய்தியாளரை தாக்கிய மர்ம கும்பல் யார் என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Share on:

சரணடையும் நாளிலேயே ஜாமீன் கேட்ட பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு!


பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக வன்கொடுமைத் தடைச் சட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன், மருமகள் சரணடையும் நாளிலேயே அவர்களின் ஜாமீன் மனுவை சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வேலை செய்து வந்த 18 வயது பணிப்பெண்னை துன்புறுத்தியதாக, ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மெர்லினா ஆன் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை மாவட்டத்தில் பதிவு செய்யப்படும் வன்கொடுமை தடைச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடையும் நாளிலேயே, தங்களது ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்படி அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

அவர்களது மனுவில், இளம்பெண் அளித்த புகாரில் கூறியுள்ளபடி எந்த தாக்குதல் சம்பவமும் நடைபெறவில்லை என்றும், சொந்த மகளை போல பார்த்துக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர். டிசம்பர் 26ஆம் தேதி அவரது பிறந்தநாளை தங்கள் வீட்டில் கொண்டாடியதாகவும், அப்போது எடுத்த புகைப்படங்களிலிருந்தே எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார் என தெரியவரும் எனவும், ஆனால் அடுத்த 15 நாட்களில் எப்படி புகார் அளிக்கும் அளவிற்கு மாறினார் என புரிந்துகொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

காதலில் ஈடுபாடு கொண்டது தெரிந்தவுடன், அதை ஆட்சேபித்ததாகவும், எதிர்காலம் வீணாகிவிடும் என அறிவுறுத்தியும் பணிப்பெண் கருத்தில் கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இருவரும் சரணடையும் நாளிலேயே அவர்களது ஜாமீன் மனுவை பரிசீலித்து, இரு தரப்பிற்கும் வாய்ப்பளித்து, சட்டத்திற்குட்பட்டு முடிவெடுக்கும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.
Share on: