முல்லை பெரியாற்றில் புதிய அணை – கேரள அரசு திட்டவட்டம்! தமிழக அரசின் நடவடிக்கை என்ன?


முல்லை பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட உள்ளதாக கேரள மாநில அரசு தெரிவித்து உள்ளது. கேரள சட்டப் பேரவை கூட்டத் தொடர் இன்று (ஜன. 25) தொடங்கி வரும் ஜனவரி 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.

அதன்படி கேரள ஆளுநர் முகமது ஆரிப் கான் மாநில கொள்கை அறிக்கையை சட்டப் பேரவை கூட்டத் தொடரில் வாசித்தார். அந்த அறிக்கையில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள 125 ஆண்டுகள் பழமையான முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2018 முதல் 2021 ஆண்டு வரையில் பருவமழை காலத்தில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கையும் குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை கருத்தில் கொண்டு ஆற்றங்கரையோரம் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பு கருதியும், தமிழ்நாட்டின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டும் புதிய அணை கட்ட திட்டமிடப்பட்டு உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய அணையின் கட்டுமானம், நவீன தொழில்நுட்பம் மற்றும் தற்கால கட்டுமானங்களின் நுட்பங்களை கொண்டும் கட்டமைக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பான அனைத்து இடங்களிலும் கேரள அரசு இந்த கருத்தை வெளிப்படுத்தி உள்ளதாகவும், தமிழகத்துடன் இணக்கமான தீர்வுக்கு சாத்தியமான பின் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணை கடந்த 1895 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசு நிர்வகித்து வரும் நிலையில், அணை மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரள அரசு நீண்ட நாட்களாக குரல் கொடுத்து வருகிறது.

முன்னதாக சட்டமன்றத்தில் உரையை வசித்த ஆளுநர் முகமது ஆரிப் கான் அறிக்கையில் உள்ள முதல் பத்தி அனைத்தையும் தவிர்த்து விட்டு கடைசியாக உள்ளவற்றை மற்றும் வாசித்தார். இந்த சம்பவம் சட்டமன்ற உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் அவையில் சிறிது நேரத்திற்கு சலசலப்பு நிலவியது.
Share on: