தமிழகம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தல்.. ரூ. 108 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்.


ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலும் சென்னையிலும் நடத்திய சோதனையில் ரூ. 108 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்து 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பிரகாஷ் என்பவரிடம் சோதனை செய்ததில் இரண்டு பைகளில் இருந்த 10 பொட்டலங்களில் 15 கிலோ பவுடர் 15 கிலோ திரவ வடிவிலான 30 கிலோ மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை நந்தனத்தில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி ஆதரவுடன் போதைப்பொருள் தங்கு தடையின்றி நடமாடுவதாக குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் குறித்து ஏராளமான செய்திகள் வெளியாவதாக தெரிவித்த மோடி,கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

குழந்தைகளின் எதிர்காலத்தை பாழாக்கும் கட்சியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போதைப் பொருளால் நாளைய தலைமுறையும் பாதிக்கப்படும் எனவும் மோடி எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து உடனடியாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

தமிழக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 2 மாதங்களில் போதைப்பொருள், மனமயக்க பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 470 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்றைய தினம் சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் மண்டபம் கடலோர காவல் படையினர் இணைந்து சோதனை நடத்தினர். 99 கிலோ எடையுள்ள ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்து 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share on:

“நீங்கள் ஒன்றும் சாமானியர் அல்ல, அமைச்சர்!” – உதயநிதி மீது உச்ச நீதிமன்றம் காட்டம்


“நீங்கள் சொன்ன கருத்துகளின் விளைவுகள் உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஒன்றும் சாமானியர் அல்ல, அமைச்சர்” என்று சனாதனம் தொடர்பான வழக்கில் உதயநிதி மீது காட்டமாக அதிருப்தியை வெளியிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம்’ என்று பேசினார்.

உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே, உதயநிதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மாநிலங்களையும் தொடுக்கப்பட்ட வழக்குகளை தொகுத்து ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, “நான் பேசியதன் விளைவை நன்கு அறிவேன். 6 மாநிலங்களில் வெவ்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. எல்லா மாநிலங்களுக்கும் என்னால் செல்ல முடியாது. பொதுவான ஒரு இடத்தில் விசாரிக்க வேண்டும், விசாரணையை எதிர்கொள்ள நான் தயார்” என்று உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. உதயநிதியின் மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, “அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(ஏ) பிரிவின் கீழ் உங்கள் உரிமையை தவறாகப் பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் சட்டப்பிரிவு 25-ன் கீழ் உங்களின் உரிமையை துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள். கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி விட்டு தற்போது பாதுகாப்பு கோரி நீதிமன்றம் வந்துள்ளீர்கள்.

சனாதனம் தொடர்பாக நீங்கள் சொன்ன கருத்துக்களின் விளைவுகள் உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஒன்றும் சாமானியர் அல்ல, அமைச்சர். ஓர் அமைச்சராக இருந்து தனது சொற்களில் கவனமாக இருக்க வேண்டும். சொல்லும் கருத்துக்களின் விளைவுகளை அறிந்திருக்க வேண்டும்” என்று அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கின் மீதான விசாரணையை மார்ச் 15-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Share on:

போதைப்பொருள் கடத்தல்.. ஜாபர் சாதிக் வங்கிக்கணக்குகள் முடக்கம்.. கூட்டாளிகளையும் வளைக்கும் போலீஸ்


போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக்கின் 8 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஜாபர் சாதிக்கின் வீட்டு பூட்டை உடைத்து அங்கிருந்த ஆவணங்களை பறிமுதல் செய்த போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வீட்டுக்கு சீல் வைத்த நிலையில் தற்போது வங்கிக்கணக்குகளை முடக்கியுள்ளனர்.

குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜாபர் சாதிக்கின் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி. பல ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக சென்னை வந்தவர், சொந்தமாக தங்கும் விடுதி, ஓட்டல், ஏற்றுமதி நிறுவனம், உணவு பதப்படுத்தும் நிறுவனம் என குறுகிய காலத்தில் உச்சம் தொட்டார். அப்போதுதான் அவருக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஹெராயின் வகை போதைப் பொருட்கள் கடத்தலில், வெளிநாட்டு கும்பல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த போதைப் பொருளுக்கு நிகராக போதை தரக்கூடியது மெத்தாம்பெட்டமைன் வகை போதைப் பொருள் ஆகும். இதற்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக தேவை ஏற்பட்டுள்ளது.

இந்த போதைப் பொருளைத் தயாரிக்க சூடோபெட்ரின் என்ற மூலப்பொருள் அவசியம். இதன் விலை ஒரு கிலோ ரூ.1.50 கோடி ஆகும். இந்த சூடோபெட்ரினை கடத்தியதாக ஜாபர் சாதிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 3,500 கிலோ சூடோபெட்ரின்: இவரது கூட்டாளிகள் 450 முறை, 3,500 கிலோவுக்கும் அதிகமான சூடோபெட்ரினை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர்.

இதன்மூலம் பல கோடி ரூபாய்களை சம்பாதித்த ஜாபர் சாதிக், தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் மற்றும் சினிமா துறைக்குள் நுழைந்துள்ளார். பலரது நட்பும் கிடைத்துள்ளது. இதுதவிர, ஹவாலா தொழிலையும் இவர் கையாண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக, டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடத்தல் கும்பல், மேற்கு டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. கடந்த 15ஆம் தேதி அங்கு நுழைந்த போலீஸார், அங்கிருந்த சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.2,000 கோடி.

கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, தங்கள் அலுவலகத்தில் பிப்ரவரி 26ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார், கடந்த 23ஆம் தேதி ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் ஒட்டினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து, அவரையும், அவரது கூட்டாளிகளையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்களை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் உள்ளவர்கள், அவரது பினாமிகள், அவரால் ஆதாயம் அடைந்தவர்கள் குறித்தும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் விவரங்களை சேகரித்து வருகின்றனர். விரைவில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் வீட்டில் நடத்திய சோதனையின் போது பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் சென்னையில் ஜாபர் சாதிக்கின் 8 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Share on:

ரயிலில் கடத்திவரப்பட்ட ரூ.90 கோடி மதிப்பிலான போதைப்பொருள்: மதுரையில் சிக்கியது எப்படி?


மதுரையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.90 கோடி சர்வதேச சந்தை மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து மதுரையில் சர்வதேச போதைக் கும்பலுடன் தொடர்புடைய நபர்கள் உள்ளனரா? என போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக குஜராத் கடல் பகுதியில் ஈரானில் இருந்து கப்பல் மூலம் கடத்திவரப்பட்ட 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 150 கிலோவுக்கு மேலாக மெத்தப்பெட்டமைன் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சர்வதேச போதைக் கும்பலைச் சேர்ந்த 5 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். இதில் தமிழகத்தில் இருந்தும் போதைப்பொருள் கடத்தலுக்கு தொடர்புடையவர்கள் இருப்பது தெரியவந்தது.

தமிழகத்தில் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் 5 பேரை டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்த தேடியபோது ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் தலைமறைவாகினர். எனினும், ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த வாரம் மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தமிம் அன்சாரி என்பவரது வீட்டிலும் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையைச் சேர்ந்த அருண் மற்றும் அன்பு என்ற இருவர் போதைப்பொருளை வைத்துச் சென்றதாக கூறினார். அதனடிப்படையில் இருவரையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தேடி வருகின்றனர்.

இதனிடையே இன்று (மார்ச் 1) அதிகாலை மதுரை ரயில் நிலையத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ்சில் 200 கோடி சர்வதேச சந்தை மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்திய நபர் கைது செய்யப்பட்டார். பிள்ளமன் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது.

ரயிலில் மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மத்திய வருவாய்பிரிவு புலனாய்வுத்துறை அதிகாரிகள் (DIRECTOR REVENUE INTELLGENGE ) நேற்று சென்னையில் இருந்து புறப்பட்ட பிள்ளமன் பிரகாஷ் என்பவரை பின் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். சென்னையில இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு பேக்குடன் சென்னையை சேர்ந்த பிள்ளமன் பிரகாஷ் புறப்பட்டுள்ளார். இதனையடுத்து புலனாய்வுத்துறை அதிகாரிகளும் பிரகாஷை ரயிலில் பின் தொடர்ந்தனர்.

அதிகாலை 4.20 மணிக்கு மதுரை வந்த பொதிகை ரயிலில் இருந்து இறங்கிய பிரகாஷை சுற்றிவளைத்த அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்து இரண்டு பேக்குகளையும் சோதனை செய்தனர். அதில் இருந்த 15 பொட்டலங்களில் 15 கிலோ பவுடர் மற்றும் 15 கிலோ திரவ வடிவிலான பொருள் என 30 கிலோ மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மத்திய வருவாய்பிரிவு புலனாய்வுத்துறை இயக்குநரக அதிகாரிகள் பிரகாஷை பிடித்து மதுரை ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காலை 5 மணி முதல் 12 மணி வரை என 7 மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக பிரகாஷை அழைத்துச் சென்றனர்.பிரகாஷிடம் நடத்திய விசாரணையில் சென்னை தேனாம்பேட்டை கண்ணதாசன்நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் இவருடன் தொடர்புகொண்ட ஒரு மர்ம நபர் ஒருவர் இதனை ரயிலில் மதுரை எடுத்துசெல்ல வேண்டும் பணம் தருவதாக கூறியதன் அடிப்படையில் எடுத்துவந்துள்ளதாகவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளளது. பிரகாஷிடம் கைப்பற்றிய 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.90 கோடி வரை இருக்கலாம் என முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.

போதைப்பொருளை மதுரையில் இறக்க முற்பட்டதன் மூலம், மதுரையில் விநியோகம் செய்ய முயற்சித்தாரா அல்லது ராமேஸ்வரம் கொண்டு சென்று இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டாரா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சர்வதேச அளவில் இருக்கக்கூடிய போதைப் பொருட்களை ஒரே இடத்தில் வைக்காமல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரித்து பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
Share on:

பாஜகவை நம்பி ஏமாந்த ஓ.பி.எஸ் !-முன்னாள் எம்பி.KC.பழனிசாமி


உறவாடி கெடுப்பதற்கு சிறந்த உதாரணம் பாஜக. உறவுக்கு கைகொடுத்த ஓ.பன்னீசெல்த்தை தாமரை சின்னத்தில் நிற்க வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தாமரையில் போட்டியிடுவாரா? அல்லது தனித்து நின்று தன்மானம் காப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ”அதிமுக-வை சிறு சிறு குழுக்களாக சிதறடித்து அதன் வலிமையை குறைத்து அந்த குழுக்களை தனித்தனியாக பாஜகவுடன் இணைத்து பலம்பெறுவது தான் பாஜகவின் நோக்கம்.இதுபோல் நடக்கும் என்று 2018-லே ஓபிஎஸ் & இபிஎஸ் இருவரையும் எச்சரித்ததால் ஏற்பட்டது தான் கே.சி.பி-யின் நீக்கம்.

2018-லிருந்து பாஜக எதிர்ப்பில் உறுதியான நிலைப்பாட்டில் கே.சி.பி இருப்பதால் தான் எடப்பாடி பழனிசாமியோடு கருத்து வேறுபாடு இருந்தாலும் பாஜக எதிர்ப்பு என்ற நிலையில் உறுதியாக அதிமுக-வை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருக்கும் கே.சி.பழனிசாமி ”என்று தெரிவித்துள்ளார்.
Share on:

தமிழகத்தில் ராமரை புகழாமல்.. எம்ஜிஆரை புகழ்ந்து வாக்குகளை பெற முயற்சிக்கிறதா பாஜக?.. கே.சி பழனிசாமி கேள்வி


தமிழகத்தில் ராமரை புகழ்ந்து வாக்கு பெற முடியாததால் எம்.ஜி.ராமச்சந்திரனை போற்றி வாக்குகளை பெற முயற்சிக்கிறதா பாஜக? என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி

பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “என்னை மிகவும் கவர்ந்த மொழி தமிழ். தமிழகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட செங்கோல், நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது. வாரணாசியில் காசி தமிழ் சங்கம் நடைபெற்றது.

தமிழ்நாடு மக்கள் இதயத்தால் சுத்தமானவர்கள், புத்திசாலிகள் ஆவார்கள். தமிழ்நாட்டிற்கு மூன்றரை கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கிவருகிறோம். தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு நிதியை பாஜக அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லாத போதும், தமிழ்நாட்டை தன் இதயத்தில் வைத்துள்ளது பாஜக.

மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு திமுக எதுவும் செய்யவில்லை. பல ஆண்டுகளாக தமிழ்நாட்டை கொள்ளை அடித்தவர்கள், பாஜகவின் வளர்ச்சியைப் பார்த்து பயப்படுகிறார்கள். இன்று தமிழ்நாடு வந்துள்ள நான் எம்.ஜி.ஆரை நினைத்துப் பார்க்கிறேன். எம்.ஜி.ஆர் ஏழைகளுக்கு செய்த உதவியால் இன்னும் நினைவில் இருக்கிறார்.

எம்.ஜி.ஆர் குடும்ப ஆட்சி செய்யவில்லை, அவருக்குப் பிறகு தமிழ்நாட்டில் நல்ல ஆட்சியை கொடுத்தது ஜெயலலிதா மட்டுமே” என்று எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார் பிரதமர் மோடி. இந்த நிலையில் இதனை விமர்சித்து முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “தமிழகத்தில் ராமரை புகழ்ந்து வாக்கு பெற முடியாததால் எம்.ஜி.ராமச்சந்திரனை போற்றி வாக்குகளை பெற முயற்சிக்கிறதா பாஜக?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Share on:

பில்டப் கொடுத்த அண்ணாமலை – கடைசியில் `ஒத்திவைப்பு’ – சொதப்பியதா இணைப்பு விழா?!


நாடாளுமன்ற தேர்தல் களம் சூடாகிக் கொண்டிருக்கிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் புள்ளிகள் மாற்றுக் கட்சிகளில் இணைவது இயல்புதான். அந்த வகையில் கடந்த சில நாள்களாக அதிமுக உள்ளிட்ட கட்சியின் முக்கியப் புள்ளிகள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘ கோவையில் திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் பாஜக-வில் இணைய உள்ளார்கள்.’ என்று கூறியிருந்தார். இதையடுத்து பாஜக-வினரும் சமூகவலைதளங்களில், ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்.’ என்று சொல்லி அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பெயர்களை சொல்லி பில்டப் ஏற்றினார்கள்.

பிரதமர் மோடி கலந்துகொள்ளும் கூட்டம் பல்லடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதால் பாஜக தங்களது செல்வாக்கை நிரூபிக்க உள்ளதாக அக்கட்சியினர் கூறிவந்தனர். நேரம் ஆக.. ஆக.. முன்னாள் அமைச்சர்.. சிட்டிங் எம்எல்ஏ என்று பலரின் பெயர்கள் அடிபட்டன. இதனிடையே கோவை விமானநிலையம் வந்த அண்ணாமலை, ‘ரெசிடன்ஸி ஹோட்டல்ல பிரஸ்மீட் இருக்கு. அங்க வாங்க. சுடச்சுட செய்தி தரேன்.’ என்று கூறினார்.

பாஜகவினர் அளித்தத் தகவலின் அடிப்படையில் செய்தியாளர்கள் மாலை 5 மணியளவில் ரெசிடன்ஸி ஹோட்டல் சென்றுவிட்டனர். அங்கு கதவில் ஒருபுறம் பிரதமர் மோடி புகைப்படமும், மறுபுறம் தாமரை சின்னத்தின் படமும் வைக்கப்பட்டிருந்தது. சில புதிய பாஜக துண்டுகளும் வைக்கப்பட்டிருந்தன. அங்கு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன் என்பவர் மட்டும் நீண்ட நேரமாக காத்திருந்தார்.

பாஜக நிர்வாகிகள் அவ்வபோது வருவதும், போவதுமாக இருந்தனர். ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாகியும் இணைப்பு விழா தொடங்கவில்லை. அண்ணாமலை அங்கு வரவும் இல்லை. ஒருகட்டத்தில் பாஜகவினரே, ‘நிகழ்ச்சி இல்லை.’ என கூறி சென்றார்கள்.

இதையடுத்து பாஜக மூத்தத் தலைவர்கள் சுதாகர் ரெட்டி, எல். முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அங்கு வந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ‘மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா நிகழ்ச்சி தள்ளி போய் உள்ளது. பாதுகாப்பு அம்சம் உள்ளிட்ட காரணங்களால் இணைப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சியில் இருந்தும் பாஜகவுக்கு வர உள்ளார்கள். மாற்றுக் கட்சியினர் மோடி ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்து அவர்களாக வருகிறார்கள்.’ என்றனர்.

நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு , எல். முருகன் கடும் கோபமடைந்தார். ‘நான் வக்கீல். வானதியும் வக்கீல். எங்கு எப்படி பேச வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். நீங்க எப்படிக் கேட்டாலும் ஒரே பதில்தான். இணைப்பு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.’ என்று மீண்டும் மீண்டும் அதே பதிலை கூறினார்.

இந்நிலையில் அங்கு நீண்ட நேரமாக காத்திருந்த ராஜா அம்மையப்பன் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘நான் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டேன். இங்கு வேறு வேலையாக வந்தேன்.’ `ஹோட்டலில் தங்கியிருந்தேன்.’ `நான் வேறு கட்சியில் இணைந்துவிட்டேன்.’ `ஏமாற்றம் எல்லாம் இல்லை.’ ` பாஜகவில் சேரவில்லை என்றும் சொல்ல மாட்டேன்.’

`பிரதமரை சந்திக்க வாய்ப்பு கொடுத்துள்ளனர்.’ `நான் இங்கு கட்சியில் எல்லாம் இணைய வரவில்லை.’ `அது நாங்கள் இல்லை.’ `கட்சியில் இணைவதை அப்பறம் பார்த்துக் கொள்ளலாம்.’ என்று செய்தியாளர்களின் கேள்விக்கு மாறி மாறி குழப்பி குழப்பி பதிலளித்து சென்றார்.
Share on:

ஐ.பெரியசாமிக்கு நீதிபதி செக்.. 2012 முதல் 2024 வரை வீட்டு வசதி முறைகேடு வழக்கு கடந்து வந்த பாதை.


அமைச்சர் என்பவர் மக்கள் மத்தியில் சுத்தமானவராக இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஐ. பெரியசாமிக்கு எதிரான வழக்கில் கருத்து தெரிவித்துள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் இருந்து ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் விசாரிக்க ஆணை பிறப்பித்துள்ளார் ஹைகோர்ட் நீதிபதி.

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஐ.பெரியசாமி. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அமைச்சரவையில் முக்கியமான துறைகளின் அமைச்சராகவும் இருந்தவர் ஐ.பெரியசாமி. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். நகைக்கடன் ரத்து தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற முக்கியக் காரணமாக இருந்தார்.

2006 முதல் 2011 வரையிலான ஆண்டு திமுக ஆட்சியின் போது, வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். கடந்த 2008ஆம் ஆண்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது.

இந்த புகார் தொடர்பாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012ஆம் ஆண்டு , அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

பத்தாண்டுகளுக்கும் மேலாக வழக்கு நடைபெற்றது. விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இதனால் வீட்டு வசதி வாரிய துறைக்கு எந்த ஒரு இழப்பும் ஏற்படவில்லை, சந்தை விலைக்குதான் விற்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இதற்கு அமைச்சர் உடந்தையாக இருந்தார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரங்கள் இல்லை என்றும் சுட்டிக்காட்டினர். மேலும் வழக்குத் தொடர்வதற்கு முறையான அனுமதி பெறவில்லை என்றும், புகாருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வாதிட்டனர். அத்துடன், அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட இந்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் ஐ.பெரியசாமியை வழக்கில் இருந்து விடுவித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய, சென்னை உயநீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, வழக்கில் சாட்சி விசாரணை துவங்கிய பின்பு விடுவிக்க கோரியது ஏன்? வழக்குப்பதியும் போது குற்றம் சாட்டப்பட்டவர் என்ன பொறுப்பில் இருந்தார்? என்பன உள்ளிட்ட ஐந்து கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இதுசம்பந்தமாக விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

அதற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், முதல் தகவல் அறிக்கையில் ஐ.பெரியசாமியின் பெயர் இல்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபோதுதான் அவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

ஐ.பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநரிடம் ஒப்புதல் பெறாமல் சபாநாயகரிடம் ஒப்புதல் பெறப்பட்டது சட்டப்படி தவறு என்பதால்தான் சாட்சி விசாரணை தொடங்கிய பின்னர் விடுவிக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. முறையான அனுமதியில்லாமல் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க முடியாது. அப்படி விசாரிப்பது நீதிமன்ற நேரத்தையும், பொதுமக்களின் பணத்தையும் வீணடிப்பதாகும் என்றும் தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார். சபாநாயகரின் ஒப்புதல் சட்டப்படி செல்லாது என்பதால் சிறப்பு நீதிமன்றம் மனதைச் செலுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளது. அது சரியானது என்று வாதிட்டார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பு வாதம் முடிந்ததையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பு தனது தரப்பு வாதத்தை முன் வைத்தது. லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “அரசிடம் சம்பளம் பெறும் பொது ஊழியர் என்பதால் வழக்கு தொடர ஆளுநரிடம் தான் அனுமதி பெற வேண்டும். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது” என்று வாதிட்டார்.

இதனை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், ஆளுநரிடம் அனுமதி பெறவில்லை என்று கூறுகிறீர்கள்.. லஞ்ச ஒழிப்புத் துறை ஏன் ஆளுநரிடம் அனுமதி பெற முறையாக முயற்சி செய்யவில்லை” என்றும் கேள்வி எழுப்பினார். இந்த விஷயத்தில் இன்னும் காலம் கடந்துவிடவில்லை, இனி மேலும் சென்று ஆளுநருடைய அனுமதியை பெறலாம் என்று என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து ஏன் மேல்முறையீடு செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதி, “இது லஞ்ச ஒழிப்புத் துறையின் செயல்பாடின்மையை காட்டுகிறது. இதனால்தான் இந்த வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அதேபோல சிறப்பு நீதிமன்றமும் ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிடவில்லை என்றும் குறிப்பிட்டார் ஆனந்த் வெங்கடேஷ்.

அமைச்சர் என்பவர் மக்கள் மத்தியில் சுத்தமானவராக இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கின் தீர்ப்பை பிப்ரவரி 26ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் ஐ பெரிய சாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 26 ஆம் தேதிக்குள் எம்பி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு மாற்று நடவடிக்கை முடிந்த பிறகு மார்ச் 28ஆம் தேதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் எம் பி எம் எல் ஏக்கருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கான பிணையை செலுத்த வேண்டும் எனவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாவிட்டால் அவர்களுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பிக்கலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

தினந்தோறும் வழக்கின் விசாரணையை நடத்த வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்திற்குள் முடித்து உயர் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
Share on:

கோமலவள்ளி டூ அம்மா.. MGR கொடுத்த வாள்; ஜெயலலிதா சிங்கமான கதை!


எம்ஜிஆரை சந்தித்தது ஜெயலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கான விதையாக அமைந்தது. எம்ஜிஆர் தன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக ஜெயலலிதாவை நியமித்தார்.

பிறப்புசந்தியா – ஜெயராம் தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக 1948 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ந்தேதி மைசூரில் பிறந்தார் ஜெயலலிதா. இவரது இயற்பெயர் கோமலவள்ளி. இவரை குடும்பத்தினர் அம்மு என செல்லமாக அழைத்தனர்.ஜெயலலிதாவிற்கு ஒரு வயது ஆன போது அவரது தந்தை ஜெயராம் மறைந்தார். இதற்கிடையில் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவிற்கு சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன. கற்கோட்டை என்ற படத்தின் மூலம் திரை உலகில் கால் பதித்தார். அப்போது சென்னையில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் அம்முவும் அவரது சகோதரரும் சேர்க்கப்பட்டனர். ஆனால் குழந்தைகளை சரியாக கவனிக்க முடியாத தாய் சந்தியா அவரை பெங்களூருவில் பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இதையடுதது பிஷப் கார்ட்டன்ஸ் பள்ளியில் சேர்க்கப்பட்டார். மீண்டும் சென்னைகே அழைத்து வரப்பட்ட ஜெயலலிதா சர்ச் பார்க் கான்வென்டில் சேர்க்கப்பட்டார்.

1963ல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவர் இளம் வயதில் கல்லூரி விரிவுரையாளராக விரும்பினார். ஆனால் காலம் அவரை சினிமா, அரசியல் என்று கை பிடித்து அழைத்து வந்து விட்டது. சினிமா நாடகத்துறையில் பிஸியாக இருந்த ஜெயலலிதா ஆர்.எம்.வீரப்பனின் முன்னிலையில் நடந்த நாட்டிய நிகழச்சி ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வுக்கு வித்திட்டது.

எம்ஜிஆரை சந்தித்தது ஜெயலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கான விதையாக அமைந்தது. எம்ஜிஆர் தன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக ஜெயலலிதாவை நியமித்தார். 1986ல் மதுரை மாநாட்டில் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி செங்கோலை ஜெயலலிதா எம்ஜிஆருக்கு கொடுத்தார். அதை ஜெயலலிதாவிற்கே எம்ஜிஆர் திருப்பி கொடுத்தார்.

இதற்கிடையில் 1987 டிசம்பர் 24ந்தேதி எம்ஜிஆரின் மறைவிற்கு பின் ஜானகி முதல்வரானார். ஆனால் வெறும் 24 நாட்களில் அவரது ஆட்சி கவிழ்ந்தது. அதிமுக ஜா, ஜெ என இரு அணிகளாக பிரிந்து அடுத்து வந்த 1989ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்தித்தன. இதில் ஜெ. அணி 27 இடங்களில் வெற்றி பெற்றது. ஜானகி அணி ஒரு இடத்தை பெற்று படுதோல்வி அடைந்தது.

ஜெ அணியினர் 21.15 சதவிதம் வாக்குகள் பெற்றனர். இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் முதல் எதிர்க்கட்சி தலைவராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.1989 பிப்ரவரி மாதம் அதிமுகவின் இரு பிரிவுகளும் ஜெயலலிதா தலைமையில் இணைந்தது. பின் 1991ல் ஜெயலிலிதா தலைமையில் போட்டியிட்ட அதிமுக 168 தொகுதிகளில் போட்டியிட்டு 164 இடங்களில் வென்றது. ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். 1996ம் ஆண்டு தேர்தலில் போலி எண்கவுண்டர், வளர்ப்பு மகன் திருமணம் உள்ளிட்ட பல காரணங்களால் படு தோல்வியை தழுவினார்.

மீண்டும் 2001ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வர் ஆனார். டான்சி வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதால் தகுதியிழப்பில் அவர் முதல் பதவியை இழக்க நேரிட்டது.இதையடுத்து 2006 சட்டமன்றதேர்தலில் மதிமுக, விடுதலை சிறுத்தைகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வெறும் 69 இடங்கள்தான் கிடைத்தது. பின்னர் 2009ல் நடந்த மக்களவை தேர்தலிலும் அதிமுகவிற்கு தோல்வியே கிடைத்தது.ஆனால் 2011ம் ஆண்டு 150 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைத்தார். பின்னர் 2016 ம்ஆண்டு நடந்த சட்ட மன்ற தேர்தலிலும் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வர் பதவியை அலங்கரித்தார்.

இந்நிலையில் 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ந்தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவால்,சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.75 நாட்கள் சிகிச்சைக்குப்பின் உடல் நலம் தேறிவந்ததாகக் கூறப்பட்ட நிலையில் திடீர் மாரடைப்பால் டிசம்பர் மாதம் 5-ம் தேதி நள்ளிரவு 11.30 மணியளவில் இறந்தார்.பல்வேறு மக்கள் நல திட்டங்களால் தமிழக மக்களுக்கு மிகவும் நெருக்கம் ஆனார். பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதி உதவி திட்டம், மாணவர்களுக்கு இலவச சைக்கிள், அம்மா உணவகம் என தமிழகம் தலை நிமிர ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார். இதனால் அதிமுகவினர் மட்டும் இன்றி அனைத்து தரப்பினராலும் அம்மா என்று அழைக்கப்பட்டார் என்றால் மிகையல்ல.
Share on:

விவசாயிகள் போராட்டம் தீவிரம்! போருக்கு செல்வதுபோல் படையெடுப்பு.


இரும்பு தடுப்புகள், முக கவசம், பீரங்கிபோல் மாற்றியமைக்கப்பட்ட டிராக்டர், அதிகசக்தி உடைய புல்டோசர்கள் என, போருக்கு செல்வது போல், பஞ்சாப் விவசாயிகள் டில்லியை நோக்கி தங்கள் பேரணியை நேற்று மீண்டும் துவக்கினர். இதனால், போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம், விவசாயக் கடன் தள்ளுபடி உட்படபல கோரிக்கைகளை முன் வைத்து, பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர், 13ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘டில்லி சலோ’ எனப்படும் டில்லியை நோக்கி என்ற பேரணியைத் துவக்கினர்.

கடந்த, 2020 – 2021ல் விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் மிகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நாள் நீடித்ததால், அந்த சட்டங்களை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது.அதையடுத்து, தற்போதைய போராட்டத்தை தடுக்கும் வகையில், பஞ்சாப் – ஹரியானா எல்லையில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஹரியானாவுக்குள் விவசாயிகள் நுழைய முடியாதபடி, பல அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன. கான்கிரீட் தடுப்புச்சுவர்கள், இரும்பு முள் வேலிகள் என, தடுப்புகள் அமைக்கப்பட்டன.

இதனால், பஞ்சாப் – ஹரியானா எல்லையிலேயே விவசாயிகள் முகாமிட்டிருந்தனர். கடந்த போராட்டத்தைப் போல, டிராக்டர்கள் மற்றும் பஸ்கள், வேன்கள் என, பலவகையான வாகனங்களில் விவசாயிகள் பேரணியாக வந்தனர். அடுத்த சில மாதங்களுக்கு தேவையான சமையல் பொருட்களையும் எடுத்து வந்தனர்.

போராட்டத்தை திரும்பப் பெற வைப்பதற்காக மத்திய அரசு சார்பில், பியுஷ் கோயல், அர்ஜுன் முண்டா, நித்யானந்த் ராய் அடங்கிய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்த அமைச்சர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன், நான்கு சுற்று பேச்சு நடத்தினர்.

மத்திய அரசு பல திட்டங்களை தெரிவித்தும், விவசாய சங்கத்தினர் மசியவில்லை. டில்லியை நோக்கி தங்களுடைய பேரணி தொடரும் என அறிவித்தனர்.கடந்த சில நாட்களாக, ஹரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு, ஹரியானா போலீசார், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறு விமானம் வாயிலாக, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.

போலீசின் இந்த முயற்சியை தடுக்க, விவசாயிகள், காற்றாடிகளைப் பயன்படுத்தி, ட்ரோன்களை சேதப்படுத்தினர்.மேலும், ‘முல்தானி மிட்டி’ எனப்படும் மூலிகை மண்ணை முகத்தில் பூசிக் கொண்டனர். இதன் வாயிலாக புகைக் குண்டுகளால் ஏற்படும் வெப்பத்தை தணித்தனர். இதைத் தவிர, ஈரம் செய்யப்பட்ட கோணிப்பைகளைப் பயன்படுத்தி, கண்ணீர் புகைக் குண்டுகளை செயலிழக்க வைத்தனர்.

தற்போது போராட்டத்தை தீவிரபடுத்தியுள்ள விவசாயிகள், அடுத்தக்கட்டத்துக்கு தயாராகி உள்ளனர். மொத்தம், 14,000 விவசாயிகள், 1,200 டிராக்டர்கள், 300 கார்கள், 10 மினி பஸ்களுடன் வந்துள்ளனர். இதைத் தவிர, இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்டவையும் வைத்துள்ளனர்.

தடுப்புகளை தகர்த்தெறிவதற்காக, புல்டோசர்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களையும் எடுத்து வந்துள்ளனர். தடுப்புகளை தகர்த்தெரிவதுடன், அதை அப்புறப்படுத்தவும் இவற்றை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.இதைத் தவிர போருக்கு தயாராவது போல், இரும்பு தகடுகளாலான கேடயம், டிராக்டர்களின் முன்பகுதியில் கனமான இரும்பு பாலங்கள் பொருத்தியுள்ளனர். இதற்கு ஒருபடி மேலாக, சில டிராக்டர்களை, கவச பீரங்கிபோல் வடிவமைத்துள்ளனர்.

டிராக்டர்களின் முன்பகுதியில், இரும்பு தகடுகளை பொருத்தியுள்ளனர். போலீசார் தடியடி நடத்தினால் தடுப்பதற்கு இந்த ஏற்பாடு. இதைத் தவிர, உடலில் பொருத்திக் கொள்வதற்கான தகடுகளையும் வடிவமைத்துள்ளனர்.

கண்ணீர் புகைகுண்டுகளை சமாளிக்க, முக கவசம், கண்களை பாதுகாக்கும் கவசம் உள்ளிட்டையும் தயாராக வைத்துள்ளனர். இதற்கிடையே, ஹரியானா எல்லையில், விவசாயிகளை கலைப்பதற்காக போலீசார் நேற்று கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதில், சுபகரண் சிங், 21, என்ற இளைஞர் இறந்ததாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து நடந்த மோதலில், 12 போலீசார் காயமடைந்தனர்.இதையடுத்து, போராட்டத்தை இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நாளை அறிவிப்பதாகவும், விவசாய சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
Share on: