செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அமர்வில் காரசாரமாக நடைபெற்ற விசாரணை!


சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எட்டு மாதங்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார்.

ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்று முறை மனு தாக்கல் செய்தும் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் தலா ஒரு முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் நடைபெற்று வந்தது.

செந்தில் பாலாஜி சார்பாக மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதாடினார். செந்தில் பாலாஜி மீது 30 வழக்குகள் உள்ளதாக குறிப்பிட்டதற்கு மறுத்துள்ளார். “செந்தில் பாலாஜி மீதான அனைத்து வழக்குகளும் தேர்தல், போராட்டங்கள் தொடர்பானவை. சண்முகம் என்பவருக்கும் செந்தில் பாலாஜிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முறைகேட்டுக்கான முகாந்திரம் இல்லாமல் சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுக்கு நேரடியாக எந்த ஆதாரமும் இல்லை. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு தயார், எனவே ஜாமீன் வழங்க வேண்டும்” என கோரினார்.

அமலாக்கத்துறை தரப்பில், “தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களில் எந்த திருத்தத்தையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. அனைத்தும் நேர்மையான ஆவணங்கள் தான். ஆதாரங்கள் அனைத்தும் மற்றொரு புலனாய்வு அமைப்பால் சேகரிக்கப்பட்டவை” என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்திவைத்தார்.
Share on:

அவதூறு பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! – நடிகை திரிஷா திட்டவட்டம்


தன்னை பற்றி அவதூறு பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகை திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இணையத்தில் நடிகை திரிஷா தொடர்படுத்தி அவதூறு கருத்துகள் பரவின. அதற்கு திரைத்துறையில் இருந்து இயக்குநர் சேரன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே நடிகை திரிஷா இந்த விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மற்றும் கேவலமான மனிதர்களைத் திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர் மீது உறுதியான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் சொல்ல வேண்டிய மற்றும் செய்ய வேண்டிய அனைத்தையும் எனது சட்ட வல்லுநர்கள் மேற்கொள்வார்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Share on:

அம்மா இருந்த பதவியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?


* தி.மு.க-வினருடன் திரை மறைவு தொடர்பு வைத்திருப்பவர்களை கட்சியிலிருந்து நீக்கி, அதிமுக-வை கட்டுக்கோப்பாக வைத்திருந்த ஜெயலலிதா அம்மா இருந்த பதவியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?

* சட்டசபை தேர்தலின் போது சென்னை திருவல்லிக்கேணியில் உதய நிதியை எதிர்த்து போட்டியிட நடிகை குஷ்பு பாஜக-வில் சீட் கேட்டார். அதை பாஜக-விற்கு கொடுக்காமல் அந்த தொகுதியை கேட்காத பா.ம.க-வுக்கு கொடுத்து சுலப வெற்றியை அளித்தவுடன் அவர் மாநிலம் முழுவதும் சுற்றி சுற்றி பிரச்சாரம் செய்ய மறைமுகமாக உதவியது யார்?

* பொன்முடி, எ.வ.வேலு ஆகியோருக்கு எதிராக அதிமுக சார்பில் வலுவான வேட்பாளர்களை நிறுத்தி நெருக்கடி கொடுக்காமல் அப்போது வலுவில்லாத பா.ஜ.க-விடம் தள்ளிவிட்டு அவர்களுக்கு சுலப வெற்றியை பரிசளித்தது ஏன் என்று எடப்பாடி பழனிசாமி விளக்க வேண்டும்.

* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக-வின் கோட்டையாக இருந்த கோவை உள்ளிட்ட கொங்கு பகுதிகளில் பெயரளவிற்கு கூட போராடாமல் 100 சதவீத வெற்றியை திமுகவிற்கு அள்ளிக்கொடுத்ததன் பின்னணியை எடப்பாடி பழனிசாமி விளக்க வேண்டும்.

* அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் ஒரு பெட்டியில், “லஞ்ச ஒழிப்புத் துறைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஒரு துரும்பை கூட கிள்ளிப் போட வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு ஆளும்கட்சியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அ.தி.மு.க-வினர் மீது நடவடிக்கை இல்லை” என்கிறார். இது எந்த வகையான ஒப்பந்தம்?

* இவற்றையெல்லாம் விட சட்டசபையில் ஆளும் தி.மு.க-வை மயிலிறகால் வருடுவது போல் EPS & Co பேசுவதும். முதல்வர் ஸ்டாலின் பெரிய மனதுடன் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஒதுக்குவதும் எப்படி நடக்கிறது?
Share on:

சரியான எதிர்க்கட்சி அரசியலை செய்கிறாரா எடப்பாடி பழனிசாமி?


* எதிலும் உறுதியான முடிவில்லை பாஜக – திமுக மோதல்களைச் சாதகமாக்கி, அரசியல் செய்வதிலும் தடுமாறுகிறார் எடப்பாடி பழனிசாமி. கிளாம்பாக்கம் சர்ச்சை, ஆளுநர்-சபாநாயகர் சர்ச்சை போன்ற கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் தவறவிடுகிறார் எதிர்க்கட்சி தலைவராக சட்டமன்றத்தில் அவரது குரல் வலுவாக ஒலிக்கவில்லை.

* கடந்த ஓராண்டாக, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு ஆதரவாக EPS பேசாத மேடை இல்லை. ஆனால், அந்தத் திட்டத்துக்கு எதிராக, சட்டமன்றத்தில் திமுக தனித் தீர்மானம் கொண்டுவந்தபோது ஆணித்தரமாகத் தன் வாதத்தை EPS பேசியிருக்க வேண்டும். அதை செய்யவில்லை ஆளுநர்-சபாநாயகர் சர்ச்சையில் கூட ‘இது ஆளுநருக்கும் சபாநாயகருக்கு இடையேயுள்ள பிரச்சனை நாங்கள் இதுகுறித்து என்ன சொல்வது ஆளுநரையும் அரசையும்தான் கேட்க வேண்டும்’ எனப் பூசி மெழுகிவிட்டுக் கழண்டுகொண்டார். ஆளுநருக்கும் அரசுக்கும் இடையேயான பிரச்சனையில்தானே ஒரு எதிர்க்கட்சி அரசியல் செய்ய முடியும்.

* அதிமுக ஆட்சியின்போது, மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு அம்மாவின் பெயரைச் சூட்ட முடிவெடுக்கப்பட்டது. அதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு, அப்போதைய ஆளுநருக்கு அனுப்பியும் வைக்கப்பட்டது. ஆளுநராக ஆர்.என்.ரவி வந்த பிறகு, அந்த மசோதாவையும் சேர்த்து மொத்தம் பத்து மசோதாக்களைத் திருப்பியனுப்பியுள்ளார்.ஆளுநரைக் கண்டிக்குவிதமாக கடந்த ஆண்டு நவம்பரில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.செப்டம்பர் மாதமே பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு EPS அவையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டார்.

* இரட்டை குதிரைச் சவாரி தலைகுப்புறத்தான் கவிழ்ந்துவிலும். அதுபோல ஆளுநர் விவகாரத்தில் ஆதரவுமில்லை… எதிர்ப்புமில்லை என EPS தயங்குவது கட்சியின் பின்பதையே பலவீனமாகும்.

* நாடாளுமன்றத்தில் MP-க்கள் நீக்கம் நடந்தபோது, மாநிலங்களுக்கான நிதிப் பங்கீடு விவகாரம் பற்றியெரிந்தபோது உறுதியாக எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை. ராமர் கோவில் விவகாரத்தில் சரி, விவசாயிகள் போராட்டத்திலும் சரி தனது நிலைப்பாட்டை தெரிவிக்க தவறிவிட்டார் EPS.

* கடந்த பிப்ரவரி 1-ம் தேதி, மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலானது. நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கு கருத்து தெரிவித்த நிலையில், அதிமுக மட்டும் எதுவும் சொல்லவில்லை. தமிழ்நாட்டை 31 ஆண்டுகள் ஆண்ட ஒரு கட்சி மத்திய பட்ஜெட்டுக்கு கருத்து தெரிவிக்கவில்லை என்பது அரசியல்ரீதியாக எவ்வளவு பெரிய பின்னடைவு? பட்ஜெட்டுக்கு ஆதரவாகக் கருத்து சொன்னால் ‘கூட்டணி முறிவு என்பது நாடகம்’ என திமுக வசை பாடும். பட்ஜெட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் டெல்லியின் அஸ்திரங்கள் பாயும் ‘நமக்கேன் வம்பு’ என்று அமைதியாகிவிட்டாரா EPS?
Share on:

‛‛கேன்சர் தரும் ரசாயனம்’’.. உறுதி செய்த ஆய்வு! மெரினா பஞ்சுமிட்டாயின் ஷாக் பின்னணி..


பஞ்சு மிட்டாய் கண்ணை பறிக்கும் நிறத்தில் இருக்க அதில் உடல் நலத்திற்கு கேடு ஏற்படுத்தும் ரசாயனம் சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாயை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்து சோதனை செய்தனர். சோதனையில், ஆபத்தான ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

பஞ்சு மிட்டாய் எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும் உணவு பொருள். கடற்கரை தொடங்கி கடை வீதிகள் வரை இவற்றை பார்க்க முடியும். ஆனால் இந்த பஞ்சு மிட்டாயில் ஆபத்தான ரசாயனம் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்திருக்கிறது. அதாவது, புதுச்சேரி கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களில் வடமாநில இளைஞர்கள் இந்த பஞ்சுமிட்டாயை விற்பனை செய்து வந்திருக்கின்றனர். இதில் பயன்படுத்தப்படும் ரசாயன பொருள் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் தீப்பெட்டி மற்றும் ஊதுவத்தி ஆகியவற்றில் கலக்கப்படும், ‘ரோடமின் பி’ என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இந்த ரசாயனம் நமது வயிற்றிற்குள் போனால் புற்றுநோயை ஏற்படுத்தும். பஞ்சு மிட்டாய் ரோஸ், சிவப்பு என கண்ணை பறிக்கும் நிறத்தில் இருப்பதற்காக நிறமிகள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், குறைந்த விலை என்பதால் ‘ரோடமின் பி’ போன்ற ஆபத்தான ரசாயனங்களை பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

இது தொடர்பாக பஞ்சு மிட்டாய் விற்பனையாளர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மட்டுமல்லாது புதுச்சேரி முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்பனையில் ஈடுபட்டுவருபவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், “புதுச்சேரியில் ஆய்வின் போது பஞ்சு மிட்டாயில் ஆபத்தான ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே பஞ்சுமிட்டாய் உற்பத்தி செய்யும் பகுதிகளில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது. இனி பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய வேண்டும் எனில் உணவு பாதுகாப்பு துறையின் தர சான்றிதழ் அவசியம் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. சில வியாபாரிகள் தமிழகத்திலிருந்து பொருட்களை வாங்கி வந்ததாக கூறியிருக்கிறார்கள். எனவே அங்கும் இதுபோன்று சோதனை நடைபெறும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து கடந்த 8ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யும் வடமாநில தொழிலாளர்களிடமிருந்து பஞ்சு மிட்டாய் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பல்லாவரத்தில் பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் ஆலையிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்கு சேகரிக்கப்பட்ட ரசாயனங்களும் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பஞ்சுமிட்டாய்களில் ஆபத்தான ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து பஞ்சு மிட்டாய் விற்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
Share on:

எப்படி நம்புறது? 30 வழக்குகளில் சிக்கியுள்ளார் செந்தில் பாலாஜி.. கிடுக்கிப்பிடி போட்ட அமலாக்கத்துறை!


செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் இன்று அதிரடியாக வாதங்களை வைத்துள்ளார் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரால் சுந்தரேசன். 30 கேஸில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவரை ஜாமீனில் விட்டால் அவர் எந்த குற்றமும் செய்யமாட்டார் என எப்படி நம்புவது என கேள்வி எழுப்பியுள்ளது அமலாக்கத்துறை.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பு நேற்று வைத்த வாதங்களுக்கு பதிலளித்து, அமலாக்கத் துறை தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது அவர், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பதவிக்கு ஏற்றவாறு, 2 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை என மொத்தம், 67 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு மூன்று வழக்குகள் தொடர்ந்துள்ளது.

இந்த வழக்குகளில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், சென்னை எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறபு நீதிமன்றத்தில் உள்ளன. அந்த ஆதாரங்களை, உயர் நீதிமன்ற உத்தரவின்படி மட்டுமே அமலாக்கத் துறை பெற்றது. அந்த ஆதாரங்கள் திருத்தப்படவில்லை என விளக்கினார்.

மேலும், முந்தைய ஜாமீன் மனு தள்ளுபடிக்கு பிறகு இந்த வழக்கில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தவிர, வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதுவும் ஜாமீன் மனு விசாரணை துவங்குவதற்கு ஒரு நாள் முன் தான் ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும் இன்னமும் அவர் செல்வாக்கான நபராகவே உள்ளார்.

ஏற்கனவே பணம் கொடுத்தவர்களிடம் செந்தில் பாலாஜி சமரசம் செய்திருக்கிறார். வழக்கில் சாட்சிகள் இன்னும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படாத நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைக்கக் கூடும். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சண்முகம், சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.

தொடர்ந்து, வழக்கில் உள்ள ஆதாரங்கள் அனைத்தும் மற்றொரு புலனாய்வு அமைப்பால் சேகரிக்கப்பட்டவை. அவை 2020ஆம் ஆண்டில் பெறப்பட்டு, தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அமலாக்கத்துறை எந்த ஆதாரத்தையும் உருவாக்கவும் இல்லை, திருத்தவும் இல்லை. மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கு ஆவணங்களை மட்டுமே நம்பியுள்ளது எனக் குறிப்பிட்டார் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன்.

30 வழக்குகளில் சிக்கியுள்ளவரை ஜாமீனில் விட்டால்: மேலும், 30 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர் ஜாமீனில் விடுதலையானால் எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டார் என நம்ப எந்த காரணமும் இல்லை. சாட்சி விசாரணை துவங்க அமலாக்கத் துறை தயாராக உள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதத்தை நிறைவு செய்தார்.
Share on:

சென்னையில் மணல் ஒப்பந்ததாரர் கரிகாலன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!


சென்னையில் மணல் ஒப்பந்தாரரான கரிகாலன் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரிகாலன் வீட்டுக்கு ஏற்கனவே அமலாக்கத்துறை சீல் வைத்த நிலையில் நீதிமன்ற அனுமதி பெற்று சீலை அகற்றி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு அதன்மூலம் பணம் சம்பாதிக்கும் செயலில் ஈடுபடுவதாக புகார்கள் சென்றன. இதுபற்றி அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு முதல் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மணல் ஒப்பந்தாரரார்கள், மணல் குவாரி அதிபர்களின் வீடு, அலுவலகங்கள், மண் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள், வங்கி கணக்கும், ரொக்கப்பணம், பறிமுதல் செய்யப்பட்டன.

குறிப்பாக கடந்த வாரம் சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 17 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது இரண்டரை கோடி ரொக்கம் உள்பட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோத மணல் அள்ளிய விவகாரம் தொடர்பாக சண்முக ராமச்சந்திரன், கருப்பையா ரத்தினம், பன்னீர் செல்வம், கரிகாலன் உள்ளிட்டவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையின்போது ரூ.130 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. மேலும் சண்முக ராமச்சந்திரன், கருப்பையா ரத்தினம், கரிகாலன் உள்ளிட்டவரின் வங்கி கணக்குகளிலும் இருந்து ரூ.2.50 கோடி வரையிலான பணம் என்பது முடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தான் சென்னை நந்தனத்தில் உள்ள சிஐடி நகரில் மணல் ஒப்பந்ததாரரான கரிகாலன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் அவரது உறவினர் அருண் என்பவரின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

கடந்த முறை அமலாக்கத்துறை சோதனையின்போது கரிகாலன் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். இதையடுத்து அவரது வீட்டுக்கு அமலாக்கத்துறை சீல் வைத்தது. இதையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் சீல் அகற்றப்பட்டு இன்றைய சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் கரிகாலனுக்கு சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தது, முந்தைய ரெய்டுகளில் சிக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இன்றைய சோதனை என்பது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Share on:

சென்னை வந்தடைந்தது வெற்றி துரைசாமியின் உடல்! இன்று மாலை கண்ணம்மாபேட்டையில் நல்லடக்கம்


இமாச்சல் பிரதேசத்தில் இறந்த வெற்றி துரைசாமியின் உடல் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது. அங்கிருந்து தாம்பரத்தை அடுத்த ராஜ கீழ்ப்பாக்கத்தில் அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

இமாச்சல பிரதேசத்தில் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் சட்லஜ் நதியில் கவிழ்ந்தது. இதையடுத்து அவரை 8 நாட்களாக ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், போலீஸார், மீட்பு படையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் வெற்றியின் உடலை ஸ்கூபா டைவ் வீரர்கள் மீட்டனர். இத்தனை நாளாக வெற்றி உயிருடன் வருவார் என காத்திருந்த குடும்பத்தினருக்கு பேரிடியாக வந்தது இந்த செய்தி!

இதையடுத்து வெற்றியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிம்லாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு எம்பாமிங் செய்யப்பட்டு அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே தனது மகனை கண்டுபிடித்து கொடுத்தால் தான் வழங்குவதாக அறிவித்த ரூ 1 கோடி சன்மானத்தை ஸ்கூபா டைவிங் வீரர்களிடம் சைதை துரைசாமி வழங்கினார்.

இந்த நிலையில் வெற்றியின் உடல் இன்று காலை இமாச்சலில் இருந்து நாக்பூருக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் புறப்பட்டது. இதையடுத்து அங்கு எரிபொருளை நிரப்பிக் கொண்டு சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மாலை 4 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்த வெற்றியின் உடல், அங்கிருந்து தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள வெற்றியின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

பிறகு அங்கிருந்து சிஐடி நகரில் உள்ள சைதை துரைசாமியின் வீட்டில் வெற்றியின் உடல் வைக்கப்படுகிறது. அங்கு அரசியல் கட்சியினர், மனிதநேய அறக்கட்டளை மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், அங்கு படித்துவிட்டு அதிகாரிகளாக இருப்பவர்கள் இறுதி அஞ்சலி செலுத்துகிறார்கள். இதையடுத்து அங்கிருந்து மாலை 6 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அஜித்தும் வெற்றியும் நண்பர்கள். அந்த வகையில் அஜித்திற்கு வெற்றியின் இழப்பு தாங்கிக் கொள்ள முடியாததாகிவிட்டது. இதையடுத்து அவர் ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள வெற்றியின் வீட்டிற்கு சென்று அங்கு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on:

தேசிய கீதத்தை புறக்கணித்த ஆளுநர்! திடீரென சபையில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு..!


இன்று சட்டசபையில் ஆளுநர் உரையை புறக்கணித்த ஆளுநர் ரவி அதன் பின்னர் தேசிய கீதம் இசைக்கும் முன்பே திடீரென சபையில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசின் உரையை படிக்க மறுத்ததை அடுத்து சபாநாயகர் அப்பாவு அந்த உரையை வாசித்தார்.

மேலும் சட்டசபை தொடங்கும் முன்பே தேசிய கீதம் பாட வேண்டும் என்றும் அதேபோல் சட்டசபை முடியும் போதும் தேசிய கீதம் பாட வேண்டும் என்றும் ஆளுநர் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவருடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இதனை அடுத்து ஆளுநர் உரையை ரவி புறக்கணித்த நிலையில் சட்டசபை அலுவல் முடிந்ததும் தேசிய கீதம் பாடப்பட்டது. ஆனால் தேசிய கீதம் இசைக்கும் முன்னரே ஆளுநர் ரவி திடீரென சபையில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Share on:

கிளாம்பாக்கத்தில் பயணிகள் மறியல்! 6 மணி நேர காத்திருப்பு.. பேருந்துகள் இல்லாததற்கு காரணம் இதுதான்!


கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் இன்று அதிகாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படாததற்கான காரணத்தை தொழிற்சங்கத்தினர் விளக்கியுள்ளனர்.

இன்றும், நாளையும் வார இறுதி நாட்கள் என்பதால் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல நேற்றிரவு கிளாம்பாக்கத்தில் குவிந்தனர். ஆனால் ஊருக்கு போக போதுமான பேருந்துகள் இல்லாததால் அவர்கள் ஜிஎஸ்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இந்த சாலையில் சுமார் 1 மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. “எங்கள் ஊருக்கு போகவே 5 மணி நேரம்தான் ஆகும். ஆனால் கிளாம்பாக்கத்தில் 6 மணி நேரம் காத்திருக்கிறோம்” என பயணிகள் பலர் வேதனை தெரிவித்துள்ளனர்.

விழா நாட்கள், தொடர் விடுமுறை, வார இறுதி போன்ற நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை சார்பில் அவ்வப்போது அறிவிப்பு வெளியாகிறது. ஆனால், இந்தமுறை போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் கொந்தளித்துள்ளனர். இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து தொழிற்சங்கங்கள் விளக்கமளித்துள்ளன.

சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் இது குறித்து கூறியதாவது, “இந்த பிரச்னைக்குள் இரண்டு பிரதான சிக்கல்கள் இருக்கின்றன. ஒன்று ஊழியர்கள் பற்றாக்குறை. மற்றொன்று பேருந்துகளின் குறைவான எண்ணிக்கை.

லாபமா? நஷ்டமா?: தனியார் பேருந்துகள் லாபத்தில் ஓடும்போது, போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்ற தவறான கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது. போக்குவரத்து கழகங்களுக்கு தனியார் பேருந்து உரிமையாளர்களை போல லாபம் மட்டுமே நோக்கம் கிடையாது. 10,000க்கும் மேற்பட்ட கிராமப்புற, மலை வழித்தடங்களில் சேவை நோக்கத்துடன் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பகுதிகளில் லாபம் கிடைக்காது. நஷ்டம்தான் ஏற்படும். ஆனால், இந்த பகுதியில் இருக்கும் மக்களுக்கும் பேருந்து சேவை கிடைக்க வேண்டும் எனபதுதான் அரசின் நோக்கம்.

இதுதவிர மாணவர்கள், பெண்கள் என சமூகத்தின் பல பிரிவினருக்கு இலவச பேருந்து சேவை அளிக்கும் அரசின் திட்டம் போக்குவரத்து கழகங்களால் அமல்படுத்தப்படுகிறது. இதிலும் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நஷ்டத்தை அரசுதான் சரிகட்ட வேண்டும். தமிழக மின்வாரியம், சிவில் சப்ளை கார்ப்பரேசன் போன்றவற்றிற்கு முழுமையான இழப்பை ஈடுகட்டும் அரசு, தினமும் 2 கோடி மக்களுக்கு சேவை செய்யும் போக்குவரத்து கழகங்களைப் புறக்கணிக்கின்றது. இந்த நஷ்டத்தை சரி செய்தால்தான் அரசு பேருந்து சேவை தரமானதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும்.

பேருந்துகளின் எண்ணிக்கை: ஒருவேளை அரசு இந்த நஷ்டத்தை அரசு சரி செய்யவில்லையெனில், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதில் சிக்கல் ஏற்படும். 2017ம் ஆண்டு 23,000 பேருந்துகள் இயங்கி கொண்டிருந்தது. ஆனால் 2018ஆம் ஆண்டு பேருந்து எண்ணிக்கை 19,500ஆக குறைக்கப்பட்டது. 8 ஆண்டுகளாக பணி ஓய்வுபெற்ற, மரணமடைந்த தொழிலாளர்களுக்குப் பதிலாக, புதிய தொழிலாளர்கள் நியமிக்கப்படவில்லை. சுமார் 20,000 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஏற்கனவே பேருந்து எண்ணிக்கை குறைக்கப்பட்ட நிலையில், பணியாளர் பற்றாக்குறையால் தினமும் சுமார் 1500 பேருந்துகளை இயக்க முடியவில்லை.

ஒட்டுமொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் 4000 பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் பயண உரிமை மறைமுகமாக பறிக்கப்பட்டு வருகிறது. எனவே, நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க வேண்டும். காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டிய 8000 பேருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். தனியார்மயம், காண்ட்ராக்ட் என்ற பெயரால் போக்குவரத்து கழகங்களை சீர்குலைக்க கூடாது. இதையெல்லாம் அரசு சரி செய்தால்தான் தற்போது கிளாம்பாக்கத்தில் ஏற்பட்டதை போன்ற பிரச்னை மீண்டும் உருவாகாது” ன்று கூறியுள்ளனர்.
Share on: