
‛ஜிபே’ மூலம் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடலூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் வசந்தா, இளவரசன் உட்பட 3 பேருக்கு எதிராக ஊழல் புகாரை திட்டக்குடி காவல் நிலையத்தில் அளித்திருந்தார். ஆனால் போலீசார் அந்த புகாரை பெற்று கொண்டு வழக்குப்பதிவு செய்யவில்லை.
புகார் மீது விசாரிக்க வேண்டும் என்றால் லஞ்சம் வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. அதன்படி 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டும் என காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி கேட்டுள்ளார்.
ஆனால், விஜயலட்சுமி லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. இருப்பினும் வேறு வழியின்றி புகார் மீது நடவடிக்கை எடுக்க ஜி பே மூலம் 1500 ரூபாயை காவல் உதவி ஆய்வாளருக்கு விஜயலட்சுமி அனுப்பியுள்ளார். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விஜயலட்சுமி சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளிக்கப்பட்டது.
அதில், புகார் மனுவை விசாரித்ததாக கூறி எந்த நடவடிக்கையும் எடுக்காமல், எதிர் தரப்பிடமும் பேரம் பேசி புகார் மனுவை முடித்து வைத்துள்ளார்’ என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி லஞ்ச ஒழிப்பு துறையிடம் அளித்த புகார் மனுவை பரிசீலித்து, சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஜய லட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், திட்டக்குடி காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மீதான புகாரில் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது, ஜிபே மூலம் பணம் வாங்கிய ஆதாரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் பணி ஓய்வு பெற இருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டார்.