ஓ.பி.எஸ்., டிடிவி நிலையை எடப்பாடி பழனிசாமி ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது – கே.சி.பழனிச்சாமி
பா.ஜ.கவுக்கு ஆதரவளித்ததால், ஓ.பி.எஸ்., டிடிவியை அதிமுக தொண்டர்கள் புறந்தள்ளி உள்ளனர். அதே நிலையை எடப்பாடி பழனிசாமியும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தல் உணர்த்துவது என்ன? என்னும் தலைப்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
திமுக இந்த தேர்தலில் 35 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறலாம் ஆனால் அது மக்களின் நம்பிக்கையை பெற்றதால் அல்ல. சரியான மாற்று கட்டமைப்பு ஏற்படாததால் மட்டுமே. திமுகவின் அடிப்படை தொண்டர்கள் கூட இந்த ஆட்சியால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை. எல்லாமே மையப்படுத்தப்பட்டு விட்டது. எந்தவித முக்கியத்துவமும் இல்லை என்று மன வருத்தத்தில் உள்ளார்கள்.
பெண்களுக்கு இலவச பேருந்து மற்றும் ஆயிரம் ரூபாய் போன்றவை தாக்கத்தை கொடுத்தாலும், சொத்துவரி, மின்கட்டண உயர்வு, ஊழல், போதைப்பொருள் புழக்கங்கள் அதிகரிப்பு , கட்டுப்பாடற்ற மது விற்பனை, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது 90 நாளில் நடவடிக்கை எடுப்பேன் என்று தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி கொடுத்துவிட்டு ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏதோ ஒரு மறைமுக ஒப்பந்தம் இவர்களுக்குள் ஏற்பட்டுவிட்டது என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இவை மக்கள் மத்தியில் கடுமையான எதிர் விளைவுகளை இந்த அரசாங்கத்தின் மீது ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை, சீனியர்களை ஓரம் கட்டி, தான் மட்டுமே பாஜக என்றும், தான் ஒரு மாற்றத்துக்கான தலைவர் என்றும் சமூக வலைதள பிரச்சாரங்களை மட்டுமே முன்னெடுத்து தன்னை முன்னிறுத்திக்கொண்டார். அவர் வெற்றியடைய பயணித்த பாதை மக்கள் மத்தியில் நம்பிக்கை பெறுவதாக அமையவில்லை. ஊழலுக்கு அப்பாற்பட்டவர் என்று தன்னை உயர்த்தி பிடிக்க முயன்றும் கோவையில் மார்ட்டின் போன்றவர்களிடம் பாஜக பணம்பெற்றது மற்றும் தமிழகம் முழுக்க தொழிலதிபர்களிடம் அழுத்தம் கொடுத்து நிதி பெற்றதும், வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று அறிவித்தாலும் அந்தந்த பகுதிகளில் இருக்கும் தொழிலதிபர்கள் மூலமாக பாஜகவாலும் திமுகவிற்கு இணையாக பணம் செலவிடப்பட்டது. இதன்மூலம் இவரும் ஒரு சராசரி அரசியல்வாதி என்பதாக தான் பொதுமக்களால் பார்க்கப்படுகிறது.
ஒரு வேட்பாளராக இருக்கிறவர் தேர்தல் காலத்தில் என்ன பேச வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்பது கூட புரியாமல் இன்னும் தன்னை ஒரு போலீஸ் அதிகாரியாக நினைத்துக் கொண்டு “உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது” என்பதும் “தேர்தலுக்கு பிறகு அதிமுக காணாமல் போய்விடும்” , “ஓ.பி.எஸ் தலைமைக்கு அதிமுக சென்றுவிடும்” , “தினகரன் கைக்கு அதிமுக சென்றுவிடும்” என்கிற தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கியது மற்றும் பத்திரிகையாளர்கள், காவல்துறை அதிகாரிகளோடு தினசரி சண்டையிடுவதை மட்டுமே செய்தார். மத்தியில் ஆளுகிற கட்சியின் தமிழக தலைவர் போட்டியிடுகின்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலை கூட சரிபார்க்காமல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சாட்டுவது வினோதமாக உள்ளது. #கோவை மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டங்களை பற்றி எதுவும் பெரிதாக பேசவில்லை. அந்த வகையில் அவர் மக்களின் நம்பிக்கையை பெற தவறிவிட்டார்.
அதிமுக தலைமையைப் பொறுத்தவரை பாஜகவை எதிர்த்து தனித்து போட்டி என்கிற ஒரு சரியான முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும். வேட்பாளர் தேர்வு, பிரச்சார யுக்திகள், சமூக வலைதளம், ஊடகங்கள், பத்திரிகைகள் போன்ற பிரச்சார களம் கட்டமைக்கப்படவில்லை. தேர்தலில் புதியவர்கள் என்கிற கேள்விக்கு, அம்மா காலத்தை போல என்று சொன்னாலும் கூட எடப்பாடியார் தான் ஒன்றும் எம்.ஜி.ஆரோ, அம்மாவோ அல்ல என்பதை மறந்துவிட்டார்.
பொருளாதார பின்புலமே பிரதானம் என்கிற அடிப்படையில் கட்சிக்கு புது வரவுகளுக்கும், காண்ட்ராக்டர்களுக்கும் பணபலத்தின் அடிப்படையில் வாய்ப்பு கொடுத்தது களம் கடுமையான போட்டியை சந்திக்கிற பொழுது இன்னும் கடுமையாக போராடுவதற்கு பதிலாக பின்வாங்கிவிட்டார்கள். கட்சி உணர்வாளர்களாக இருந்திருந்தால் கடும் போட்டியிலும் கடைசிவரை போராடியிருப்பார்கள்.
பாஜகவில் பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா மற்றும் கூட்டணி பிரபலங்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அதே போல திமுகவில் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், உதய நிதி, கனிமொழி மற்றும் கூட்டணி பிரபலங்கள் பிரச்சாரம் செய்தார்கள். இவர்கள் எல்லாம் ஊடகம் மற்றும் சமூக வலைதளத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டார்கள். ஆனால் தான் மட்டுமே அதிமுக என்று நிரூபிப்பதற்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி முயற்சித்தாரே ஒழிய தேர்தலில் நாற்பதிலும் வெல்லவேண்டும் என்கிற முனைப்பு இல்லை. மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான கட்சிக்கு பலம் சேர்க்கிற கேசிபி போன்ற பலர் இருந்தும் அவர்கள் பயன்படுத்திக்கொள்ளப்படவில்லை.
எடப்பாடி பழனிசாமி தனது போட்டியாளர்கள் ஒதுக்கப்பட்டே வைத்திருக்கப்பட வேண்டும் என்றும், தன் தலைமையை நிலை நிறுத்திக் கொள்வதிலும் மட்டுமே அம்மா மறைந்து 7 ஆண்டுகள் கழித்தும் இன்னும் போராடுகிறார். உட்கட்சி பிரட்சனையில் தன் போட்டியாளர்களை ஒதுக்கிவிட்டு தலைமையை மட்டும் கைபற்றிவிட்டாலே தேர்தல்களில் வெற்றிபெற்றுவிடலாம் என்று நினைக்கிறார். ஆனால் அந்த உட்கட்சி போட்டியினால் மட்டுமே கட்சி பலவீனமாகிறது என்பதை உணர தவறுகிறார். தான் மீண்டும் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று ஆசைப்படுவதில் கூட தவறில்லை. ஆனால் தான் மட்டுமே தான் அதிமுக கட்சி என்று நிரூபிக்க மட்டுமே அவர் கட்சியை வழிநடத்துவதும் அதனால் கட்சியினுடைய வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படுவதும் பொதுமக்கள் மற்றும் அடிமட்ட தொண்டர்கள் ரசிக்கவில்லை.
பாஜகவை கடுமையாக எதிர்க்க தவறியது, மோடி,அமித்ஷா அவர்களுக்கு எதிரான பிரச்சாரங்களை முன்வைக்காதது போன்றவை எதிர்மறை விளைவுகளை கொடுத்தது. 10 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு எதிரான வாக்குகளையும், 3 ஆண்டுகால திமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகளையும் மடை மாற்றி அதிமுகவுக்கு கொண்டுவர, எம்ஜிஆர் கால முன்னணியினர்களை களம் இறக்கியிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் இன்னும் 18 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் களம் தயாராகிவிடும் அதை எதிர்கொள்ள கட்சியை ஒன்றுபடுத்தி உட்கட்சி பிரச்சினைகளை சரி செய்து வலிமையான அதிமுகவை கட்டமைக்க வேண்டும். உட்கட்சி போட்டியாளர்களை வீழ்த்த பாஜகவோடும், திமுகவோடும் அனுசரித்து செல்வதை விட, உட்கட்சி போட்டியாளர்களிடம் அனுசரித்து பாஜகவையும் திமுகவையும் வீழ்த்துவதற்கு எடப்பாடி பழனிசாமி முயற்சிக்க வேண்டும் அது தான் தமிழக மக்களும் அதிமுக தொண்டர்களும் விரும்புவது, அதுவே அதிமுகவின் எதிர்காலத்திற்கும் சிறந்தது. இதை சிந்திப்பாரா எடப்பாடி?
எதிர்காலம் என்பது திமுகவுக்கும், அதிமுகவுக்கும் ஆன போட்டியாக மட்டுமே அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் அமையும். ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாஜகவின் அறிவுஜீவிகள் வாக்கு சதவீதத்தில், கூட்டல் கழித்தல்களை கணக்கிட்டு பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்தால் வெற்றி பெற்று விடலாம் என்கிற சித்தாந்தத்தை புகுத்துவார்கள். ஒருவேளை மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால், அதிமுகவில் மீண்டும் ஒரு உட்கட்சி குழப்பத்தை உருவாக்க முயற்சிப்பார்கள். முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். அதனால் மீண்டும் பாஜக உறவு எந்த சூழ்நிலையிலும் வேண்டாம் என்கிற முடிவை மாற்றிக்கொள்ள கூடாது. ஓ.பி.எஸ், தினகரன் பாஜகவோடு இணைந்து செயல்பட்டதற்கு பிறகு அவர்களை அதிமுக தொண்டர்கள் புறக்கணித்துவிட்டார்கள். மீண்டும் பாஜக உறவு என்றால் அதே நிலை எடப்பாடிக்கும் ஏற்படும்.
திராவிட கட்சிகள் தங்களை சுதாரித்துக் கொள்வதிலும் தமிழகத்தை தொடர்ந்து திராவிட பூமியாக பண அரசியலை தாண்டி நேர்மையான ஊழல் அற்ற, மக்கள் நலனில் கவனம் செலுத்துகிற, தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்கிற சிந்தனையை நோக்கி பயணிக்க வேண்டும். அண்ணாமலைக்கு நடுநிலை வாக்காளர்களிடமும், இளம் வாக்காளர்களிடமும் ஏற்படுகிற வரவேற்பு என்பது ஒரு மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு. ஆனால் அவர் அதற்க்கு தகுதியானவராக நடந்துகொள்ளவில்லை என்பது வேறு, ஆனால் அந்த எதிர்பார்ப்பை திராவிட சக்திகள் பூர்த்தி செய்ய முன்வரவேண்டும். அதிகார பலத்தாலும், பணபலதாலும் மட்டுமே அதை வெற்றிகொள்ள முயலாமல் மக்கள் சக்தியால் இளைஞர்கள், நடுநிலையாளர்கள் மனதை வெற்றிகொண்டு எதிர்வரும் தேர்தல்களை சந்திக்க திராவிட இயக்கங்கள் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.