கல்வியில் டாப் தமிழ்நாடு! நாமதான் நம் 1; ஆனா சமூகநீதி?


இந்தியாவிலேயே மாணவர்கள் பட்டப்படிப்பில் சேர்வதில் தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது.உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு 47% பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இது தேசிய சராசரியான 28.4% ஐ விட அதிகமானதாகும்.

2021-2022 ஆண்டுக்கான GER அறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் Aishe (All India Survey on Higher Education) வெளியிட்டுள்ளது. அதன்படி ஜிஇஆர் (Gross Enrolment Ratio) அதாவது உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை விகிதமானது தமிழ்நாட்டில்தான் அதிகமாக உள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

ஒரு மாநிலத்தில் 18 முதல் 23 வயதுக்குள்ளாக உள்ள மக்கள் தொகையைக் கணக்கிடுவார்கள். அதில் எத்தனைப் பேர் உயர்கல்வி பெறுகிறார்கள் என்பது அளவிடுவார்கள். அதாவது பள்ளிப்படிப்பை முடித்ததும் கல்லூரி படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள்? அதைக் கணக்கிடுவதுதான் இந்த Gross Enrolment Ratio. இதன் சுருக்கமாக ஜிஇஆர்.

அப்படி நடத்தப்பட்ட உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை கணக்கெடுப்பில் (2021-22) அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இந்திய அளவில் தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்து சாதனைப் படைத்துள்ளது. இதன் மூலம் கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்பது நிரூபணமாகி உள்ளது.

2017 -18 ஆண்டுக்கான அறிக்கையின்படி உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 46.2% ஆக இருந்தது. அதே பெண்களின் எண்ணிக்கை 47.7% ஆக இருந்துள்ளது. இந்த நிலை 2019-20க்கான ஆண்டில் மளமளவென உயர்ந்து உச்சத்தை எட்டி உள்ளது. இந்த ஆண்டில் ஆண்களின் எண்ணிக்கை 48.1% ஆகவும் பெண்களின் எண்ணிக்கை 49.9% ஆக இருந்துள்ளது.

அதன்பிறகு கொரோனா பரவல் காரணமாகக் கல்வி கற்பதில் மாணவர்களுக்குப் பெரிய நெருக்கடி ஏற்பட்டது. ஊரடங்கு காரணமாகப் பல தடைகள் வந்தன. ஆனாலும் தமிழ்நாட்டில் இந்தக் கல்வியாண்டில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து 45.4% ஆகவும் பெண்களின் எண்ணிக்கை 48.6% ஆகவும் இருந்தது.

இந்நிலையில் 2021-22 ஆண்டுக்கான கல்வியாண்டில் மக்கள் தொகை அடிப்படையில் உயர்கல்விக்கான மாணவர் சேக்கை விகிதத்தில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது இந்தக் கல்வியாண்டில் 46.8% மாணவர்களும் 47.3% மாணவிகளும் உயர்கல்வியில் சேர்ந்துள்ளன என்று ஜிஇஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடங்களில் உள்ள மாநிலங்கள் பட்டியல்: தமிழ்நாடு 47.0% ஆந்திரப் பிரதேசம் 36.5% கர்நாடகா 36.2% மகாராஷ்டிரா 35.3% மத்தியப் பிரதேசம் 28.9% ராஜஸ்தான் 28.6% மேற்கு வங்கம் 26.3% உத்திரப் பிரதேசம் 24.1% குஜராத் 24.0% பீகார் 17.1% தமிழ்நாடு 47.0% என்றால் மாணவர்கள் எத்தனை?

அதாவது 2017இல் உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை, 37,62,200 பேர். பெண்களின் எண்ணிக்கை 35,70,000 பேர். ஆக மொத்தம் அந்த ஆண்டில் உயர்கல்வியில் சேர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 73,32,200 பேர். இது அப்படியே 2019இல் குறைந்துள்ளது. அந்த ஆண்டில் இரு பாலரும் சேர்த்து உயர்கல்வியில் சேர்ந்தவர்கள் 71,82,600 பேர்தான்.

இந்நிலை 2020இல் கொரோனா காரணத்தால் இன்னும் குறைந்துள்ளது. இந்த ஆண்டில் ஆண்கள் 36,60,800 பேர், பெண்கள் 34,47,000 பேர். ஆக மொத்தம் 71,07,800 பேர். இறுதியாக எடுக்கப்பட்ட 2021 கணக்கெடுப்பின்படி உயர்கல்வியில் இணைந்தவர்களின் மொத்த 70,33,000 பேர்தான். இது கடந்த 2017விட மிகக் குறைவு.

தமிழ்நாட்டில் உயர்கல்வி சேரும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் இடத்தை இந்தக் கல்வியாண்டில் பிடித்திருந்தாலும், கடந்த 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிலைமை மோசமாகி உள்ளது.

தமிழக அரசு உயர்கல்வி பெறும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியும் 2021 கல்வியாண்டில் மொத்தம் 34,06,000 பெண்கள்தான் உயர்கல்வியில் இணைந்துள்ளனர். ஆண்களோ 36,27,000 பேர் சேர்ந்துள்ளனர். சமூகநீதியைக் கல்வியில் நிலைநாட்டத் தமிழ்நாடு இன்னும் அதிகம் உழைக்க வேண்டி உள்ளது.
Share on: