சினிமா நடித்து வருஷமாச்சு. கர்ஜனை பேச்சை கேட்டு காலம் பல ஆச்சு.ஆனாலும் அலை அலையாய் மக்கள் வெள்ளம்!


தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலை காண லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ளதை பார்க்கும் போது இதுதான் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளம் என்பது நிரூபணமாகிறது

ஒரு மனிதன் தான் வாழ்ந்த காலத்தில் என்ன செய்தார் என்பதை அவருடைய இறப்பிற்கு வந்த கூட்டம்தான் சொல்லும். பொது வாழ்வில் இருந்த அந்த மனிதர் எப்படியெல்லாம் மக்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார் என்பதும் தெரியும்.

இது நிறைய அரசியல் கட்சியினர், பிரபலங்கள் இறப்பில் நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். அந்த வகையில் விஜயகாந்த் அரசியல் கட்சியில் இருந்தாலும் அவருக்கு எதிரி என யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர் நன்மை செய்துள்ளார். விஜயகாந்த் நடித்து பெரிய ஸ்டாராக வந்த காலத்தில் அனுபவம் வாய்ந்த இயக்குநர்களின் படங்களிலேயே முன்னணி நடிகர்கள் நடித்துக் கொண்டிருந்தார்களாம்.

ஆனால் விஜயகாந்த் அந்த பாணியை மாற்றி 54 புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ளாராம். அது போல் ஷூட்டிங்கில் ஹீரோ, ஹீரோயினுக்கு ஒரு வகையான உணவு, டெக்னீசியன்களுக்கு ஒரு மாதிரியான உணவு என இருந்தது. அதிலும் டெக்னீசியன்களுக்கு ஒரு வேளைதான் உணவு என இருந்தது.

ஆனால் இதை மாற்றி 3 வேளையும் உணவு அளிக்க ஏற்பாடு செய்தவர் விஜயகாந்த். மேலும் வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் கட்டாயம் அசைவ சாப்பாடு போட வேண்டும் என்றாராம். அது போல் ஹீரோ, ஹீரோயின் முதல் லைட் பாய் வரை அனைவருக்கும் ஒரே சாப்பாடுதான் என்ற நிலையையும் கொண்டு வந்தார்.விஜயகாந்தின் ஆபிஸில் 24 மணி நேரமும் உணவு கொடுத்து கொண்டே இருப்பார்களாம்.

அது மட்டுமல்லாமல் யாராவது இல்லை என்று கேட்டால் அவர்கள் சொல்வது உண்மையா பொய்யா என்று கூட விசாரிக்காமல் உடனே கையில் இருக்கும் பணத்தை கொடுத்துவிடுவாராம். மேலும் தனது கல்லூரியில் நிறைய ஏழை எளியவர்கள் படிக்க இலவசமாக சீட்டு கொடுத்துள்ளார்.

இப்படி பல உதவிகளை செய்த விஜயகாந்த் இன்று காலை நிமோனியா தொற்றால் காலமானார். இந்த செய்தியை அறிந்த தேமுதிக தொண்டர்கள் கதறி அழுகிறார்கள். இதையடுத்து கட்சி அலுவலகம் முன்பு அவர்கள் கூடினர். விஜயகாந்தின் உடல் காலை 10 மணிக்கு கட்சி அலுவலகத்திற்கு புறப்பட்டது. வழிநெடுகிலும் மக்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் 4 கி.மீ., தூரத்தை கடக்க 4 மணி நேரம் ஆனது.

கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தை சுற்றிலும் மக்கள் தலைகள் காட்சியளிக்கின்றன. மேம்பாலத்திற்கு மேல் மக்கள் தலைகளாக உள்ளன. கீழேவும் இப்படித்தான் கடல் அலை போல் மக்கள் திரண்டுள்ளார்கள். கட்சி அலுவலகத்திற்கு அஞ்சலி செலுத்த தொண்டர்கள் வந்து கொண்டிருப்பதால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

விஜயகாந்த் அண்மைக்காலமாக கட்சி பணிகளில் ஈடுபடவில்லை, படங்களில் கூட நடிக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக எந்த பேட்டியும் கொடுக்கவில்லை. ஆனால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படி கூடியிருக்கிறார்கள். இதுதான் அவர் வாழ்ந்த வாழ்கையின் அடையாளம்.
Share on: