விடை காணாமலே விடைபெறும் கோயம்பேடு..15 வருடத்திற்கு ஒரு முறை சென்னையில் பஸ் ஸ்டாண்டுகள் மாறுவது ஏன்?


விடை காணாமலேயே சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் விடை பெறுகிறது… 15 வருடத்திற்கு ஒரு முறை சென்னையில் பேருந்து நிலையங்கள் மாறிகொண்டே இருக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

சென்னைக்கு வெளியூர் பேருந்துகள் வந்து செல்லும் பேருந்து நிலையம் சென்னை பாரிஸ் கார்னரில் இருந்தது. இந்த பேருந்து நிலையத்திற்கு அன்றைக்கு அண்ணா சாலை வழியாகவே அனைத்து பேருந்துகளும் சென்று வந்தன. அப்போது அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையின் முக்கிய வணிகப்பகுதியாக அண்ணா சாலை திகழ்ந்ததால், மக்கள் பயணிக்கவே முடியாத அளவிற்கு அண்ணா சாலை இருந்தது.. இதையடுத்து 2003ல் ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு அமைக்கப்பட்டது.

கோயம்பேட்டை தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்றால், அண்ணா சாலை வரவேண்டியது இல்லை. தாம்பரத்தில் இருந்து பைபாஸ் மூலம் நேரடியாக மதுரவாயல் சென்று அப்படியே கோயம்பேடு போக முடியும் என்பதால், வரவேற்பு கிடைத்தது. மேலும் கோயம்பேடுக்கு மணி மகுடமாக கொத்தவால் சாவடி மார்க்கெட்டும் கோயம்பேடுக்கு மாற்றப்பட்டது. அதேநேரம் வடசென்னை, தென்சென்னை என இருபகுதி மக்களும் பயணிக்க கூடிய வகையில் கோயம்பேடு மையப்பகுதியில் இருந்ததால், அந்த பகுதி அசுர வளர்ச்சி அடைந்தது. இதனால் அண்ணா சாலை போலவே வடபழனி, அசோக் நகர் செல்லும் ஜவஹர்லால் நேரு சாலை நெரிசலில் சிக்கி திணற தொடங்கியது.

இது ஒருபுறம் எனில், 2000க்கு பிறகு வேளச்சேரி பகுதிகளில் ஐடி கம்பெனிகள் வேகமாக வளர்ந்ததால், அதனை சுற்றியுள்ள கந்தன்சாவடி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், பல்லாவரம், குராம்பேட்டை, தாம்பரம், மேடவாக்கம் போன்ற பகுதிகளில் தாங்க முடியாத அளவிற்கு மக்கள் நெருக்கம் ஏற்பட்டது. இதனால் வடபழனி சாலையை விட கடுமையான நெரிசலை ஜிஎஸ்டி சாலை சந்தித்தது. குறிப்பாக பெருங்களத்தூர் முதல் ஆலந்தூர் வரை எத்தனை பாலம் போட்டாலும் மக்கள் நெருக்கத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

குரோம்பேட்டை டூ துரைப்பாக்கம் (ஓஎம்ஆர், திருவான்மியூர், வேளச்சேரி) செல்ல மேம்பாலம் அமைக்கப்பட்ட போதும், மேம்பாலத்திலேயே சிக்னல் போட வேண்டிய அளவிற்கு வாகன நெருக்கம் அதிகரித்துள்ளது. சென்னை நகரத்தைவிட தாம்பரம் டூ வேளச்சேரி, தாம்பரம் டூ ஆலந்தூர் பகுதிகளில் வாகன நெருக்கம் அதிகரித்துள்ளது. காலை, மாலை வேளைகளில் வாகனம் ஒட்டவே முடியாத அளவிற்கு நெரிசல் அதிகமாகி உள்ளது. இந்த சூழலில் ஆம்னி பேருந்துகள், அரசு பேருந்துகள் இந்த வழியாகவே தினமும் பயணிப்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண விரும்பிய தமிழக அரசு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்தது. 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.397 கோடி மதிப்பில் 2018-ம் ஆண்டு இந்த பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது பேருந்து நிலையத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. இன்று திறக்கப்படுகிறது.

இந்த கிளாம்பாக்கம் என்பது சென்னையின் மிக முக்கியமான நுழைவு வாயிலாக உள்ளது. துறைமுகம் செல்லும் லாரிகள், மீஞ்சூர் வெளிவட்ட சாலை, தாம்பரம் பெருங்களத்தூர் சாலை, காஞ்சிபுரம் வண்டலூர் சாலை, கேளம்பாக்கம் சாலை, வண்டலூர் பூங்கா, செங்கல்பட்டு திருச்சி சாலை ஆகியவை இணையும் இடத்தில் இருக்கிறது. சென்னைக்கு இங்கிருந்து எந்த பகுதிக்கும் போக முடியும் என்பதால் கிளாம்பாக்கத்தை தேர்வு செய்துள்ளார்கள். ஆனால் இதில் ஒரு சிக்கலும் உள்ளது. இன்னமும் கிளாம்பாக்கம் பேருந்துகள் நேரடியாக உள்ளே வர மேம்பாலம் அமைக்கப்படவில்லை. ரயில் நிலையமும் அமைக்கப்படவில்லை. வண்டலூரில் அல்லது ஊரப்பாக்கத்தில் இறங்கி மாறித்தான் வர வேண்டும்.

இது ஒருபுறம் எனில், பாரிஸ் கார்னருக்கு மாற்று என ஆரம்பிக்கப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையம் விடை காணாமலேயே விடை பெறுகிறது.. ஒவ்வொரு 15 வருடத்திற்கு ஒருமுறை சென்னையில் பஸ் ஸ்டாண்டுகள் மாறுவது தொடர்கதையாக உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் கிளாம்பாக்கமும் இதேபோல் அசுர வளர்ச்சி அடைய போகிறது. அதன் காரணமாக வாகன நெருக்கமும் அதிகரிக்கவே போகிறது என்பதே எதார்த்தமான உண்மை.
Share on: