
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டது. இந்நிலையில் செஞ்சி ஒன்றியத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 167 மாணவிகள் மிகவும் கடினமான வேதியியல் பாடத்தில் 100க்கு 100 எடுத்து சென்டம் வாங்கியிருப்பதால், வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த மே 8 ஆம் தேதி வெளியானது. மொத்தம் 7,92,494 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர்.. இதில் மாணவிகள் 96.70 சதவீதம், மாணவர்கள் 93.16 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். தேர்வு முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வு மையமாகவும் உள்ளது. அங்கு இந்த வருடம் 414 மாணவிகள், 210 மாணவர்கள் உள்பட 624 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியிருந்தனர். இதில் 167 மாணவர்கள் வேதியியல் பாடத்தில் சென்டம் எடுத்துள்ளனர்.
வேதியல் மிகவும் கடினமான பாடம். பொறியியல் கட் ஆஃப்க்கு அந்த மதிப்பெண் மிகவும் முக்கியமானது. அதில் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 167 மாணவர்கள் தேர்ச்சியாகியிருப்பதால் வினாத்தாள் கசிந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஒரு மையத்தில் மட்டுமல்ல, செஞ்சி ஒன்றியத்தில் உள்ள பல மையங்களில் பல மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து சென்டம் எடுத்துள்ளனர்.
அதே பகுதியைச் சேர்ந்த மேலும் பலர் 100 க்கு 99 மதிப்பெண் எடுத்துள்ளனர். பல மாணவர்கள் 90க்கும் மேல் மதிப்பெண் எடுத்துள்ளனர். இது கல்வித்துறை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் வேறு எந்த பகுதியிலும் இல்லாத வகையில் செஞ்சி பகுதியில் மட்டும் மாணவர்கள் எப்படி சென்டம் எடுத்தார்கள் என்று விசாரணை நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.