
சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டை யமுனா நகரில் இன்றும் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் படகில் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 4ம் தேதி மற்றும் 5ம் தேதி பெய்த கனமழையால் சென்னை மாநகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. வெறும் 36 மணி நேரத்தில் மீனம்பாக்கத்தில் 43 செ.மீ., பெருங்குடியில் 44 செ.மீ மழை பதிவாகி இருந்தது.
சென்னையில் வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், ராயபுரம், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர், வண்ணாரப்பேட்டை, துரைப்பாக்கம், சிறுசேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், பெருங்குடி, காட்டுப்பாக்கம், பெரும்பாக்கம், கீழ்கட்டளை , கோவிலம்பாக்கம், குரோம்பேட்டை, கொரட்டூர், பட்டரை வாக்கம், கொளத்தூர், திருவொற்றியூர் கார்கில் நகர், எண்ணூர், போரூர், அய்யப்பன்தாங்கல், தியாகராய நகர், சைதாப்பேட்டை, சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், நசரதப்பேட்டை, பூந்தமல்லி , தண்டையார்பேட்டை, கொளத்தூர், கொரட்டூர், ஆவடி, வில்லிவாக்கம், மயிலாப்பூர் உள்பட பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. இதில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் குறைந்த இயல்பு நிலை தற்போது திரும்பி உள்ளது.
அதேநேரம் தண்ணீர் வெளியேற வழி இல்லாததால் வரதராஜபுரம், மண்ணிவாக்கம், பரத்வாஜ் நகர், கிருஷ்ணா நகர், மணிமங்கலம், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை நீடித்தது. அவர்களை தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்தனர். தற்போது ஓரளவு இயல்பு நிலை அங்கும் திரும்பி வருகிறது. ஆனால் இன்னமும் முழுமையாகதிரும்பவில்லை.. இதேபோல் செம்மஞ்சேரி, எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளிலும் பாதிப்புஅதிகமாக இருந்தது. அங்குமே ஓரளவு இயல்பு நிலை திரும்பி உள்ளது.
சென்னை நகரை பொறுத்தவரை எங்குமே பெரிய அளவில் பாதிப்பு தற்போது இல்லை.. அதேநேரம் சென்னையின் புறநகர் பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகும் என்கிற நிலை தான் உள்ளது. அதற்கு சாட்சியாக வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது. சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டை யமுனா நகரில் இன்றும் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் படகில் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர்.
திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள நசரத்பேட்டை யமுனா நகரில் தண்ணீர் வெளியேற முறையான வசதி இல்லாத பகுதியாக உள்ளது. இதுதான் மழை நின்று ஒரு வாரம் ஆன பின்னரும் தண்ணீர்தேங்க காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த வீடியோவை வெளியிட்டுள்ள சிலர், சென்னையில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக கூறுவோர், இதை பாருங்கள் என்று தெரிவித்துள்ளனர்.