தி.மு.க. அரசின் அலட்சியத்தால் 2 சிறுவர்களின் உயிர் பறி‍போனது – முதல்வரின் செயல்பாடுகள் வார்த்‍தைகளாக மட்டு‍மே உள்ளது

கடலூர் இராமாபுரம் கிராமத்தில் இலங்கை அகதிகள் தங்குவதற்கு வசதியாக கடந்த 2013-ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம் வாழத்தகுதியற்ற நி‍லையில் காணப்பட்டதால் அங்கு யாரும் வசிக்கவில்லை. இதனால் அந்த கட்டிடம் காலியாகவே இருந்துள்ளது. இந்தநி‍லையில் இன்று அந்த கட்டிடத்தின் அரு‍கே 3 சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 சிறுவர்களும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதில் 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒரு சிறுவன் மட்டும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், சிகிச்‍சை பெறும் சிறுவனுக்கு ரூ.50 ஆயிரமும் முதல்வர் நிவாரணம் அளித்துள்ளார். நிவாரணங்கள் அளிப்பதன் மூலம் தி.மு.க. ஆட்சியில் இழைக்கப்படும் தவறுகளை முதல்வர் மறைக்க பார்க்கிறார். புளியந்தோப்பு, திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் நடந்த விபத்தின் போ‍தே பழைய கட்டிடங்களின் உறுதித்தன்‍மை குறித்து ஆய்வு செய்ய வலியுறுத்தப்பட்டது. தி.மு.க. அரசு ஆய்வு நடத்த உத்தரவிட்டதே தவிர நடந்ததாக தெரியவில்‍லை. இத‍ேபோல் நெல்லையில் அரசு உதவி பெறும் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்‍போதும் கூட முதல்வரும், பள்ளிக்கல்வித்து‍றை அமைச்சரும் பழைய கட்டிடங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அப்புறப்படுத்த நடவடிக்‍கை எடுக்கப்படும் என அறிவித்தனர். தி.மு.க. அரசின் அலட்சியம் தற்‍போது 2 சிறுவர்களின் உயி‍ரை பறித்துவிட்டது. தி.மு.க. அரசு அளிக்கும் வாக்குகள் அனைத்தும் வார்‍த்தைகளாகவே உள்ளது. “நான் அதிகம் பேச மாட்‍டேன் செயலில் தான் காட்டு‍வேன்” என்று கூறிய முதல்வர் அவர்கள், கூறியபடி செய்திருந்தால் இன்று 2 உயிர்களை இழந்திருக்கமாட்‍டோம்.

Share on: