அதிமுக தொண்டர்கள் EPS-ஐ நம்பிக்கைக்குரிய தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லையா? அல்லது தொண்டர்களுக்கு விசுவாசம் இல்லையா?


* புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதா அம்மாவோ பணபலத்தால் தலைமை பதவியை அடையவில்லை. தொண்டர்கள் அவர்கள் மீதி வைத்த நம்பிக்கையால், தொண்டர்கள் பலத்தால் தலைமைப் பதவியை அடைந்தார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி முழுக்க முழுக்க தன்னுடைய பணபலத்தால் மட்டுமே அந்த தலைமை பதவியை அடைந்து பணத்தையே பிரதானமாக எடுத்துக்கொண்டு செயல்படும்பொழுது நீங்கள் எப்படி தொண்டர்களை குறை சொல்லமுடியும்?

* கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று EPS பேசினார்,ஆனால் தனித்து களம் காணும் நிலை அதிமுக தொண்டனுக்கு ஏற்பட்டது. அவர்கள் அதற்க்கு அஞ்சுபவர்கள் அல்ல அம்மா காலத்தை போல நாற்பதிலும் தனித்து போட்டி என்றிருந்தால் அதற்க்கு தயராகியிருப்பார்கள். மெகா கூட்டணி அமைப்பேன் என்று உறுதி கொடுத்து ஏமாற்றியது யார்?

* அதிமுக என்கிற இயக்கமே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால், அவரது அபிமானிகள், ரசிகர்கள், பக்தர்களால் உருவாக்கப்பட்டது. அம்மா காலத்தில் கூட எம்.ஜி.ஆர் பெயரும்,படமும் புறக்கணிக்கப்பட்ட தேர்தல்களில் வெற்றிபெற இயலவில்லை. அப்படி இருக்கிற பொழுது வெளிப்படையாக எம்.ஜி.ஆர் தொண்டர்களை புறக்கணிக்கவேண்டும் என்று நீங்கள் செய்கிற முயற்சிகளை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்.

* எம்.ஜி.ஆர் காலத்து கட்சியினரின் வாரிசுகள் இன்றளவும் அதிமுகவினராக இருக்கிறார்கள். அவர்களிடத்தில் எடப்பாடியின் தலைமை மீது ஒரு பிடிப்பும், நம்பிக்கையும் ஏற்படவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் பணம் வாங்காமல் எந்த ஒரு தொண்டனுக்கும் எந்த காரியமும் நடைபெற்றதே இல்லை. தேர்தல் கால உழைப்பு என்பது அந்த தொண்டர்களுக்கு தலைமையின் மீது இருக்கிற நம்பிக்கை, விசுவாசம் அதன் அடிப்படையில் உழைப்பை தருவார்கள். ஆனால் எடப்பாடி மீது அந்த நம்பிக்கை ஏற்படவில்லை.

* எடப்பாடி பழனிசாமியே திமுகவில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அனைத்து மூத்த அமைச்சர்களோடும் பரஸ்பர நல்லுறவில் இருக்கிறார். அதிமுக ஆட்சி காலத்தில் அதிமுக கட்சிக்காரர்களை விட அதிக பலனடைந்தவர்கள் இன்றைய திமுக முக்கியஸ்தர்கள். அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று மேடைக்கு மேடை முழங்கிய திரு.ஸ்டாலின் அவர்களே திமுக ஆட்சி அமைந்ததும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதை பெருமையாக அதிமுக முன்னாள் அமைச்சர்களே நாங்கள் சரி செய்துகொண்டோம் என்று தெரிவிக்கிறார்கள். இப்படி இருக்கும்போது உங்களை நம்பி எப்படி அதிமுக தொண்டர்கள் கடுமையான எதிர்போராட்டத்திற்கு இறங்குவார்கள். இதுபோன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காலத்திலும் அம்மா காலத்திலும் இருந்ததா?

* கிட்டத்தட்ட எல்லா முன்னாள் அமைச்சர்களுமே EPS உட்பட பாஜகவோடு சமரசம் செய்துகொண்டு தங்களை வழக்கு நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றிக்கொள்வதில் மட்டுமே முனைப்புடன் இருக்கிறார்கள். பெயரளவில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினாலும், தேர்தல் பரப்புரையின் இறுதி கட்டத்தில் கூட கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கடுமையான விமர்சனத்தை பாஜக மீது எடப்பாடி பழனிசாமியே முன் வைக்கவில்லை

* ஏதோ அண்ணாமலையின் தவறான வார்த்தை பிரயோகங்களால் “அதிமுக காணாமல் போகும்” என்று பேசியதன் விளைவு! வெகுண்டெழுந்த அதிமுக தொண்டர்கள் EPS மீது அதிருப்தியில் இருந்தாலும் கூட கட்சியை பாதுகாக்கவேண்டும் என்று வாக்குகளை முனைப்போடு உயர்த்தினார்கள்.

* திமுக எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு இந்த இரண்டையும் தலைமையே சரிவர முன்னெடுக்காமல் சம்பரதாயத்திற்கு திமுக எதிர்ப்பும் ஒட்டுமொத்த களத்தையும் அண்ணாமலைக்கு எதிராக மட்டுமே அமைத்து செயல்படுகிற பொழுது தொண்டர்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும்? அம்மா காலத்தில் இப்படியா இருந்தது? “மோடியா?லேடியா?” என்று ஜெயலலிதா அம்மா சவால் விடவில்லையா?

* இதற்கான மாற்று OPS அல்ல. அண்ணாமலை சிபாரிசு செய்யும் ஓ.பி.எஸ், தினகரன் தலைமைகளை அதிமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள். பாஜகவுக்கு அதிமுகவை அடிமைப்படுத்த நினைக்கிற முயற்சியை தொண்டர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

தேர்தல் முடிவுக்கு பிறகு ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் ஒரு சரியான முடிவை நோக்கி பயணிப்பார்கள்.
Share on: