கோவில் நிலத்தை அபகரித்த பாஜக எம்.எல்.ஏ-க்கள்?


புதுச்சேரியில் கோவில் நிலத்தை அபகரித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு நிரூபணமானால், சம்பந்தப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட எவரையும் விட்டுவைக்கப் போவதில்லை என அம்மாநில அரசுத் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது

புதுச்சேரியில், பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி நிலத்துக்கு போலி பத்திரம் தயாரித்து, தனியார் நிறுவனத்திடம் விற்கப்பட்டு உள்ளதாகவு, இது சம்பந்தமான விற்பனை பத்திரத்தை ரத்து செய்யக் கோரி கோவில் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி, பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டு இருந்தார்.

இரு பாஜக எம்.எல்.ஏக்கள் தரப்பிலும், தாங்கள் அப்பாவிகள் என்றும் எந்த குற்றத்திலும் தாங்கள் ஈடுபடவில்லை என்றும், குறிப்பிட்ட அந்த சொத்து கோவிலுக்கு சொந்தமானது என நிரூபித்தால் கோவில் நிர்வாகத்திடம் அதை ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்கள்.

காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, கோவில் சொத்து தனியாருக்கு விற்கப்பட்டதில் அரசு ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பது குறித்து அதிர்ச்சி தெரிவித்தார். குற்றம்சாட்டபட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதி எஸ்எம் சுப்ரமணியம், புதுச்சேரி அரசு தரப்பில் அளிக்கப்பட்ட உறுதியை சுட்டிக்காட்டி, விசாரணையை தொடர உத்தரவு பிறப்பித்தார்.

பொது சொத்தான கோவில் சொத்தை, பாதுகாக்க வேண்டியது எம்.எல்.ஏக்களின் கடமையும் கூட என்பதால் உடனடியாக கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், சிபிசிஐடி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை 6வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
Share on: