செய்யாறு சிப்காட்: நிலத்திற்காக போராடிய விவசாயிகளுக்கு உண்மையில் என்ன நடந்தது?


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற் பேட்டைக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை அங்குள்ள விவசாயிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். எதிர்த்த விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது, அப்பகுதியினரிடம் கூடுதலான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

“எனக்கு 55 வயதாகிறது. எனது மகன் மாற்றுத் திறனாளி. என்னிடம் இருக்கும் மூன்றரை ஏக்கர் நிலத்தில் பயிர் செய்து குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். இந்த நிலம் நான்காவது தலைமுறையாக என்னிடம் இருக்கிறது. இதை எடுத்துக்கொண்டு, பணத்தைக் கொடுக்கிறேன்; வேலை கொடுக்கிறேன் என்கிறார்கள்.

இந்த வயதில் எனக்கு என்ன வேலை கொடுப்பார்கள்? என் மகனுக்கு என்ன வேலை கொடுப்பார்கள்? எங்களை நிம்மதியாகவிட்டால், நாங்கள் பாட்டுக்கு பிழைத்துக் கொள்வோமே?” என்கிறார் செய்யாறில் உள்ள குறும்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான கார்த்திகேயன்.

கார்த்திகேயன் பேசும்போதே அவரது குரலில் ஆவேசம் தென்படுகிறது. அவருக்கு மட்டுமல்ல, அந்தப் பகுதியில் உள்ள எல்லா விவசாயிகளுமே கொந்தளித்துத்துதான் போயிருக்கிறார்கள்.

விவசாய நிலங்களை தொழிற்பேட்டைக்காக கையகப்படுத்துவதாக அறிவித்தது, அதற்கு எதிரான போராட்டத்தை முடக்கியது, போராட்டத்தில் ஈடுபட்ட சிலரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்தது என தமிழ்நாடு அரசு தங்கள் மீது கடுமையான ஒடுக்குமுறையை ஏவுவதாக நினைக்கிறார்கள் அந்தப் பகுதி விவசாயிகள்.
Share on: