மோசமான நிலையில் தள்ளாடும் அரசு போக்குவரத்து கழகங்கள்.


தமிழக அரசு போக்குவரத்து கழகம் தினமும் ரூ.15 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. கடந்த 2022 – 2023-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.4,978 கோடி நஷ்டத்தை சந்தித்து உள்ளதாக போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் டவுன் பஸ்களை இயக்கிவருகிறது. விரைவு போக்குவரத்துக்கழகம், சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கு நீண்ட தூரம் செல்லும் எஸ்இடிசி (விரைவு பேருந்து) பேருந்துகளை இயக்கி வருகிறது.

லாப நோக்கமின்றி ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தில் பல்வேறு கிராமப் பகுதிகளில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் 2022-23ம் ஆண்டு நிலவரப்படி 20,127 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் 1.70 கோடி பேர் அரசு பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1,16,259 பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள், பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து சேவை, முதியவர்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் உள்ளிட்ட திட்டங்களை போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 35 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் கட்டணமின்றி பயணிக்கிறார்கள். இதேபோல் தமிழகம் முழுவதும் சுமார் 55 லட்சம் பெண்கள் பயணிக்கிறார்கள். இதுதவிர 40 லட்சம் பொதுமக்கள் அரசு பஸ்களை பயன்படுத்தி வருகிறார்கள். பல்வேறு சிறப்பு திட்டங்கள் காரணமாக இலவமாக மக்கள் பயணிக்கும் நிலையில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன

இதுபற்றி தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. “2022 – 2023-ம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.12,007 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில், இயக்கம் மூலம் ரூ.6,705.69 கோடியும், இயக்கம் அல்லாதவைகள் மூலம் ரூ.5,256.89 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால், இந்த கால கட்டத்தில் ரூ.16,985 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. இதன்படி தற்போது வரை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.4,978.38 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 5 வருடத்திற்கு முன்பு அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதால் போக்குவரத்து கழகங்களின் வருவாய் இழப்பு சற்று குறைந்த நிலையில், டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம், மூலப்பொருட்கள் விலை உயர்வால் தற்போது கடும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.அரசு பஸ்களில் தினமும் பொதுமக்கள் பயணம் செய்வதன் மூலம் ரூ.25 கோடி வருவாய் கிடைத்தாலும் செலவு அதைவிட அதிக அளவில் உள்ளது,.

இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சுங்க கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அப்போது தான் நஷ்டம் கணிசமாக குறையும் என்று போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்தனர். ஏழை எளியோருக்காக இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கு சுங்க கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என்பதே போக்குவரத்து கழக ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தற்போதைய நிலையில் புதிய பேருந்துகள் வாங்கினால் தான் மக்கள் பலர் அரசு பேருந்துகளில் பயணிக்க ஆர்வம் காட்டுவார்கள் என்றும் அப்போதுதான் வருவாய் அதிகரிக்கும் என்றும் போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறுகிறார்கள். அரசு தான் அதிக அளவில் புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், நஷ்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Share on: