8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை!


வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

இவர்கள் 8 பேரும் கத்தார் நீர்மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேலுக்கு வழங்கி உளவு பார்த்ததாக கத்தார் அரசால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர். ஆனால் இவர்களுடைய கைது குறித்து கத்தார் அரசு எந்த அறிக்கையையும் இந்திய அரசுக்கு அனுப்பவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் உளவு பார்த்ததாக 8 பேர் கைது செய்யப்பட்ட வழக்கு கத்தார் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நடந்து வந்தது. இதன் விசாரணைகள் முடிவடைந்து இந்த மாத இறுதியில் தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் கத்தார் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கும் மரண தண்டனை விதித்துள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுகையில் 8 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த 8 பேரின் குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவர்களை விடுவிக்க தேவையான சட்ட உதவிகளை செய்வோம். கத்தார் அதிகாரிகளுடன் இந்த தீர்ப்பு குறித்து முறையிடுவோம். இவ்வாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Share on: