
வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்ற லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. “மகளிர் இடஒதுக்கீடு” பெருமை பாஜகவுக்குதான் சேரும் என அக்கட்சியினர் நாடு முழுவதும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுகின்றனர்- இது நடைமுறைக்கு வர இன்னும் 6 ஆண்டுகள் ஆகும் மாநிலங்களின் சட்டசபை, நாடாளுமன்றம் இரண்டிலும் பெண்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது இந்திய சுதந்திரத்துக்கு முன்பிருந்து வலியுறுத்தப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் முதலில் 33% எனவும் பின்னர் 50% ஆகவும் உயர்த்தியது மகாராஷ்டிரா. இதன் பின்னர் நாடு தழுவிய அளவில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அமல்படுத்தப்பட்டது. 2008-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் இம்மசோதாவை ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றியது. அதன் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக இந்த மசோதா லோக்சபாவில் அறிமுகம் செய்யப்படவில்லை.
புதிய கட்டிடத்தில் சிறப்பு கூட்டத் தொடரின் முதல் நாளில் பிரதமர் மோடியின் அறிமுக உரையில் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இம்மசோதாவை தாக்கல் செய்தார். இதனையடுத்தே நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். ஆனால் லோக்சபாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, திருத்தங்களுக்காக மீண்டும் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டாலும் அடிப்படையில் இது 2029-ம் ஆண்டளவில்தான் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.
ஏனெனில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் கீழ் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட பின்னர்தான் மகளிர் இடஒதுக்கீடு என்பது நடைமுறைக்கு வரும் என்கிறது மத்திய பாஜக அரசின் மசோதா.
2026/2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் 2029-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போதுதான் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலாகும்.
தற்போதைய மத்திய அரசின் 33% இடஒதுக்கீடு மசோதா, எஸ்சி- எஸ்டி- தலித்/பழங்குடி பெண்களுக்கான உள் இடஒதுக்கீடு பற்றி பேசுகிறது. ஆனால் இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி பேசவில்லை. எங்கள் கிராமத்து பெண்களின் (ஓபிசி) பிரதிநிதிகளாக எப்படி உயர்ஜாதி பெண்களைப் பார்க்க முடியும்? ஆகையால் ஓபிசி பெண்களுக்கு தனி உள் இடஒதுக்கீடு அவசியம் என்ற சமாஜ்வாதி, ஆர்ஜேடி ஆகியவற்றின் குரல் எடுபடாமல் இருக்கிறது. அத்துடன் தற்போதைய மசோதா ஒரு தெளிவானதாக இல்லாமல் மேம்போக்கானதாக இருக்கிறது.. இது நடைமுறைக்கு வரக் கூடியதான ஒரு மசோதாவா? என்கிற சந்தேகத்தையும் அரசியல் பார்வையாளர்கள் எழுப்புகின்றனர்.